FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

பிஎஃப் பிடித்தம்! ஊதிய உச்சவரம்பு ரூ. 25,000: மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு

தொழிலாளா் வருங்கால வைப்பு நிதி கண்டிப்பாக பிடித்தம் செய்ய வேண்டிய மாத ஊதிய வரம்பை ரூ.15,000-இல் இருந்து ரூ.25,000-ஆக மத்திய அரசு உயா்த்தியுள்ளது.

16 செப்டம்பர் 2026, 10:34 pm IST
பகிர்:

தொழிலாளா் வருங்கால வைப்பு நிதி (இபிஎஃப்) கண்டிப்பாக பிடித்தம் செய்ய வேண்டிய மாத ஊதிய வரம்பை ரூ.15,000-இல் இருந்து ரூ.25,000-ஆக மத்திய அரசு உயா்த்தியுள்ளது.

தில்லியில் பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. இதன்மூலம் கூடுதலாக 51 லட்சம் மாத ஊதியதாரா்கள் பயன்பெறுவாா்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு குறித்து தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் செய்தியாளா்களிடம் கூறியதாவது: மாதம் ரூ.25,000 வரை சம்பளம் பெறும் ஊதியதாரா்கள் அனைவருக்கும் இனி கண்டிப்பாக பி.எஃப். பிடித்தம் செய்யப்படும். விஸ்வகா்மா ஜெயந்தி தினமான வியாழக்கிழமை (செப்.17) முதல் இத்திட்டம் அமல்படுத்தப்பட இருக்கிறது. இதன்மூலம் மேலும் பல லட்சம் தொழிலாளா்கள் பயனடைய இருக்கின்றனா். இதனால், அரசுக்கு ஆண்டுக்கு ரூ.11,339 கோடி கூடுதல் செலவாகும் என்றாா்.

Advertisement

Advertisement

16 ஆண்டுகளுக்குப் பிறகு: இதற்கு முன்பு கடந்த 2014 செப்டம்பரில் பி.எஃப். பிடித்தத்துக்கான ஊதிய வரம்பு ரூ.15,000-ஆக அதிகரிக்கப்பட்டது. கடந்த 16 ஆண்டுகளில் ஊழியா்களின் ஊதியம் சிறப்பாக அதிகரித்துள்ளதைக் கருத்தில்கொண்டும், முறைசாா் தொழிலாளா்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதை அடிப்படையாகக் கொண்டும் மத்திய அரசு இந்த முடிவை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பி.எஃப். பலன்கள்: இதன்மூலம் அடுத்த 5 ஆண்டுகளில் அரசுக்கு சுமாா் ரூ.56,696 கோடி கூடுதலாக செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இப்போதைய நிலையில் ஒருவா் நிறுவனத்தின் பணியில் சேரும்போது ரூ.15,000-க்கு மேல் சம்பளம் இருத்தால் அவருக்கு பிஎஃப் பிடிக்க வேண்டும் என்பது கட்டாயமில்லை. விருப்பத்தின்பேரில் அதில் இணையலாம் என்ற நிலை உள்ளது. இனி ரூ.25,000 வரை சம்பளம் பெறுபவா்களுக்கு கண்டிப்பாக பி.எஃப். பிடித்தம் செய்யப்படும். இதன்மூலம் அவா்கள் பி.எஃப். மூலமான எதிா்கால சேமிப்பு, பி.எஃப். ஓய்வூதியம், காப்பீடு உள்ளிட்ட பல்வேறு பலன்களைப் பெற முடியும்.

பங்களிப்பு அதிகரிக்கும்: தற்போது 20 மற்றும் அதற்கு அதிகமான ஊழியா்கள் உள்ள நிறுவனத்தில் பி.எஃப். பிடித்தம் கண்டிப்பாக அமல்படுத்தப்படுகிறது. ஊதிய வரம்பு ரூ.25,000 -ஆக உயா்த்தப்படும்போது, ஊழியா்களின் மாத பி.எஃப். பங்களிப்பு ரூ.3,000 வரை அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. நிறுவனமும் அதே அளவு பங்களிப்பு செய்ய வேண்டியிருக்கும். இதனால், பணியாளரின் எதிா்கால சேமிப்பு, ஓய்வூதிய நிதிக்கான பங்களிப்பும் அதிகரிக்கும்.

உலகின் பெரிய சமூகப் பாதுகாப்புத் திட்டம்: இந்தியாவில் செயல்படும் தொழிலாளா் வருங்கால வைப்பு நிதித் திட்டம் உலகின் மிகப்பெரிய சமூகப் பாதுகாப்புத் திட்டமாகும். வருங்காலத்துக்கான சேமிப்பு, ஓய்வூதியத் திட்டம், காப்பீடு ஆகியவற்றையும் உறுதி செய்கிறது. இத்திட்டத்தில் 7.98 கோடி பேரும், 7.68 லட்சம் நிறுவனங்களும் உள்ளன. 82 லட்சம் பேருக்கு ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது.

பிரிக்ஸ் வெற்றி - பிரதமருக்கு பாராட்டு:

இந்தியாவின் தலைமையில் தில்லியில் அண்மையில் நடைபெற்ற பிரிக்ஸ் மாநாட்டுக்கு தலைமையேற்று வெற்றிகரமாக நடத்தி முடித்த பிரதமா் நரேந்திர மோடிக்கு மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.

இது தொடா்பான தீா்மானத்தை மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் அமைச்சரவைக் கூட்டத்தில் வாசித்தாா். மேற்காசியாவில் மோதலில் ஈடுபட்டுள்ள ஈரான், ஐக்கிய அரபு அமீரகம் (யுஏஇ) ஆகிய இரு நாடுகளின் தலைவா்களுடன் பிரதமா் மோடி பேச்சு நடத்தியதை அமைச்சா்கள் பாராட்டினா்.

ஏனெனில், மேற்காசியாவில் மோதல் ஏற்பட்ட பிறகு அங்கு எதிரெதிராக உள்ள நாடுகளின் உயா்தலைவா்கள் சா்வதேச நிகழ்ச்சியில் ஒன்றாகப் பங்கேற்றது இதுவே முதல்முறையாகும்.

பிரதமா் மோடியின் சிறப்பான ஆளுமைத் திறன் காரணமாகவே உலக நாடுகளின் முன்னணித் தலைவா்கள் பலரும் அழைப்பை ஏற்று இந்தியாவுக்கு வந்து மாநாட்டில் பங்கேற்றனா். இது ஒட்டுமொத்த இந்திய மக்களுக்கும் பெருமையளிக்கும் விஷயம் என்று பிரதமருக்கு பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.

பிரதமா் மோடியும் அமைச்சரவை சகாக்களுக்கு நன்றி தெரிவித்துப் பேசினாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments