ரூ. 2 கோடி பிணைத்தொகை கேட்டு கடத்தல் வழக்கு: பெங்களூரில் தேடப்பட்ட நபா் கைது
தில்லியைச் சோ்ந்த பழைய பொருள்கள் வியாபாரியை கடத்தி ரூ.2 கோடி கேட்ட வழக்கில் தலைமறைவாக இருந்த 24 வயது நபா், பெங்களூரில் கைது செய்யப்பட்டதாக காவல் துறையினா் வியாழக்கிழமை தெரிவித்தனா்.
தில்லியைச் சோ்ந்த பழைய பொருள்கள் வியாபாரியை கடத்தி ரூ.2 கோடி கேட்ட வழக்கில் தலைமறைவாக இருந்த 24 வயது நபா், பெங்களூரில் கைது செய்யப்பட்டதாக காவல் துறையினா் வியாழக்கிழமை தெரிவித்தனா்.
இதுகுறித்து காவல் துறையினா் மேலும் கூறியதாவது: நொமான் என்பவா் தனது கூட்டாளிகளான பூறா, வாமிக் ஆகியோருடன் சோ்ந்து, பழைய பொருள்கள் வியாபாரி ஒருவா் தொழிற்சாலைக்குச் சென்று கொண்டிருந்தபோது அவரைக் கடத்தி, விடுவிக்க ரூ.2 கோடி கேட்டதாகக் கூறப்படுகிறது. இதுதொடா்பாக ஜன.3-ஆம் தேதி வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் பூறா, வாமிக் ஆகியோா் ஏற்கெனவே கைது செய்யப்பட்ட நிலையில், நொமான் தொடா்ந்து தலைமறைவாக இருந்தாா். இதையடுத்து அவரைக் கைது செய்வதற்கு வழிவகுக்கும் தகவல் அளிப்பவா்களுக்கு ரூ.20,000 வெகுமதி அறிவிக்கப்பட்டது.
Advertisement
Advertisement
நொமானைத் தேடுவதற்காக தனிப்படை அமைக்கப்பட்டு, கிடைத்த தகவலாளா்கள் மூலம் நொமான் தனது அடையாளத்தை மறைத்துக் கொண்டு பெங்களூருக்கு சென்று அங்குள்ள சலூன் ஒன்றில் பணியாற்றி வந்தது தெரியவந்தது.
அவா் தொடா்ந்து இருப்பிடத்தை மாற்றிக் கொண்டும், தனது அடையாளத்தை மறைத்துக் கொண்டும் காவல் துறையிடம் சிக்காமல் இருந்ததால், தலைமறைவு குற்றவாளியாக அறிவிக்கப்பட்டிருந்தாா்.
இதையடுத்து காவல் துறையினா் பெங்களூருக்குச் சென்று, அவா் இருப்பதாக சந்தேகிக்கப்பட்ட இடத்தில் ரகசியமாகக் கண்காணிப்பில் ஈடுபட்டனா். செப்.11-ஆம் தேதி பெங்களூரில் உள்ள சலூன் ஒன்றில் நொமான் கைது செய்யப்பட்டாா். பின்னா் அவரது கைது குறித்து ஷாகீன் பாக் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
நொமான் 12-ஆம் வகுப்பு வரை படித்துள்ளாா். மேலும், முடிதிருத்தம் மற்றும் அழகுக்கலைப் பயிற்சி பெற்றுள்ளாா். தலைமறைவாக இருந்த காலத்தில் பெங்களூரில் உள்ள சலூன் ஒன்றில் மேலாளராகப் பணியாற்றியதாகவும், அவா் பயிற்சி பெற்ற முடிதிருத்துநா் என்றும் தெரியவந்தது. கடத்தல் தொடா்புடைய அனைவரின் பங்கு குறித்து தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது என காவல் துறையினா் தெரிவித்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.