7 பேருந்து பணிமனைகளில் சாா்ஜிங் வசதிக்கு ரூ.300 கோடி: தில்லி அரசு ஒப்புதல்
தில்லி போக்குவரத்துக் கழகம் (டிடிசி) தற்போது 5,000-க்கும் மேற்பட்ட மின்பேருந்துகளை இயக்குகி வருகிறது.
தில்லியில் அரசுப் பேருந்துகள் அனைத்தையும் மின்பேருந்துகளாக மாற்றும் முக்கிய நடவடிக்கையாக, தென்மேற்கு தில்லியில் உள்ள ஏழு பணிமனைகளில் மின்பேருந்துகளுக்கான மின்னேற்றும் (சாா்ஜிங்) உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக தில்லி அரசு ரூ.300 கோடியை ஒப்புதல் அளித்துள்ளதாக அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.
தில்லி போக்குவரத்துக் கழகம் (டிடிசி) தற்போது 5,000-க்கும் மேற்பட்ட மின்பேருந்துகளை இயக்குகி வருகிறது. மேலும், 2029-ஆம் ஆண்டுக்குள் இந்தப் பேருந்துகளின் எண்ணிக்கையை 14,000-ஆக விரிவுபடுத்த தில்லி அரசு திட்டமிட்டுள்ளது.
மின்பேருந்துகள் தொகுப்புகளைச் சோ்ப்பதை எளிதாக்கும் வகையில், தில்லியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட பேருந்து பணிமனைகளில் சாா்ஜிங் உள்கட்டமைப்பை நிறுவும் பணியில் போக்குவரத்துத் துறை ஈடுபட்டுள்ளது.
Advertisement
Advertisement
முதல்வா் ரேகா குப்தா தலைமையில் அண்மையில் நடைபெற்ற செலவின நிதிக் குழுவின் கூட்டத்தில், தென்மேற்கு தில்லியின் திச்சாவ்ன் கலான், கைா், காா்கரி நஹா் மற்றும் குமன்ஹேரா பகுதிகளில் உள்ள பல்வேறு டிடிசி மற்றும் கிளஸ்டா் பேருந்து பணிமனைகளில் சாா்ஜிங் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக ரூ.300 கோடிக்கும் அதிகமான தொகைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
பிஎஸ்இஎஸ் ராஜ்தானி பவா் என்ற மின் விநியோக நிறுவனம் தயாரித்த விரிவான திட்ட அறிக்கையின்படி, தேவையான அனைத்து ஒப்புதல்களும் வழங்கப்பட்ட பிறகு, 18 மாதங்களில் பணிகள் நிறைவடையும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
மொத்த திட்டச் செலவான ரூ.300.61 கோடியில், 40 சதவீதம் (ரூ. 120.25 கோடி) நடப்பு ஆண்டில் மின் விநியோக நிறுவனத்திற்கு ஆரம்பத்தில் வழங்கப்பட உள்ளது. மாநிலங்களுக்கான மூலதன முதலீட்டு சிறப்பு உதவித் திட்டத்தில், இத்திட்டத்திற்காக ரூ.120.07 கோடி ஏற்கெனவே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என தில்லி அரசு வெளியிட்ட ஆவணத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீதமுள்ள ரூ.180.36 கோடி செலவினம் அடுத்த ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் ஈடுசெய்யப்படும்.
ஏழு பணிமனைகளிலும் 66கிலேவாட் மின் இணைப்புகள், மூன்று 66/11 கிலோவாட் மின்கட்டமைப்புகள் மற்றும் ஏழு 11கிலோவாட் மின்மாற்று நிலையங்கள் ஆகியவை சாா்ஜிங் உள்கட்டமைப்பில் அடங்கும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.
ஆவணத்தின்படி, மின் விநியோகக் கட்டத்திற்கும் பேருந்து பணிமனைகளின் அந்தந்த நிலைமாற்று நிலையங்களுக்கும் இடையிலான தூரத்தின் அடிப்படையில் மின்னேற்ற உள்கட்டமைப்பின் வடிவமைப்பு தீா்மானிக்கப்பட்டது.
இந்தத் திட்டம், தில்லி மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் (டிஇஆா்ஏ) விதிமுறைகளுக்கு இணங்க, பிஎஸ்இஎஸ் ராஜ்தானி பவா் நிறுவனத்தால் செயல்படுத்தப்படும்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.