ஜார்க்கண்ட் மாவோயிஸ்ட் தலைவர் பிரிஜேஷ் கஞ்சூ என்கவுண்டரில் சுட்டுக் கொலை
வாரணாசியில் ஞாயிற்றுக்கிழமை நடத்திய அதிரடி என்கவுண்டரில் ஜார்க்கண்ட் தீவிரவாத அமைப்பான 'திரிதிய பிரஸ்துதி கமிட்டி தலைவரான பிரிஜேஷ் கஞ்சூ சுட்டுக் கொல்லப்பட்டது குறித்து...
ராஞ்சி: ஜார்க்கண்ட் காவல்துறை, தேசிய புலனாய்வு முகமையால் மொத்தம் ரூ.30 லட்சம், வெகுமதி அறிவிக்கப்பட்டு, தேடப்பட்டுவந்த ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த தடைசெய்யப்பட்ட தீவிரவாத அமைப்பான 'திரிதிய பிரஸ்துதி கமிட்டி தலைவரான பிரிஜேஷ் கஞ்சூ, உத்தரப் பிரதேச பயங்கரவாத எதிர்ப்புப் படையினர் வாரணாசியில் ஞாயிற்றுக்கிழமை நடத்திய அதிரடி என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந்த சம்பவம் குறித்து ஜார்க்கண்ட் காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்த ஐஜி பிரேம் கௌதம், அவரது இறப்பை உறுதிப்படுத்தினார்.
ஜார்க்கண்ட் மாநில மூத்த காவல்துறை அதிகாரிகளின் தகவலின்படி, வாரணாசியில் தலைமறைவாக இருந்த பிரிஜேஷ், ஞாயிற்றுக்கிழமை காலை மோட்டார் சைக்கிளில் ஒரு குறிப்பிட்ட பாதை வழியாகச் செல்லக்கூடும் என்ற உளவுத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலை அடுத்து ஏடிஎஸ் குழுவினர் வாரணாசியின் ராம்நகர் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட டெங்ரா மோர் அருகே உள்ள லங்கா மைதான பகுதியில் பதுங்கியிருந்து கண்காணித்தனர். அதிகாலை 5 மணியளவில், மோட்டார் சைக்கிளில் வந்த பிரிஜேஷ் கஞ்சூவை நிறுத்துமாறு சைகை செய்துள்ளனர்.
Advertisement
Advertisement
ஆனால், மோட்டார் சைக்கிளை நிறுத்தாமல் ஏடிஎஸ் குழுவினரை நோக்கி பிரிஜேஷ் துப்பாக்கியால் சுட்டதாகக் கூறப்படுகிறது; இதையடுத்து ஏடிஎஸ் குழுவினர் நடத்திய பதிலடித் தாக்குதலில் பிரிஜேஷ் காயமடைந்தார். அவரை உடனடியாக மாவட்ட மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இந்த மோதலின்போது பிரிஜேஷ் சுட்ட தோட்டாக்கள் ஏடிஎஸ் டிஎஸ்பி விபின் ராய் மற்றும் தலைமைக் காவலர் நிதேந்திர கிருஷ்ணா ஆகியோரின் குண்டு துளைக்காத ஆடைகள் மீது பட்டுள்ளது. ஆனால் அவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இருவரும் பாதுகாப்பாக உள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டின் போது பிரிஜேஷ்வுடன் வந்த கூட்டாளி ஒருவர் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டதாகவும், சம்பவ இடத்தில் பிரிஜேஷிடம் இருந்து இரண்டு கைத்துப்பாக்கிகள், பல தோட்டாக்கள் மற்றும் பயன்படுத்தப்பட்ட தோட்டாக்களின் உறைகள் ஆகியவற்றை ஏடிஎஸ் குழுவினர் கைப்பற்றியுள்ளனர்.
இந்த துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட ஏடிஎஸ் குழுவினருக்கு ரூ.2 லட்சம் வெகுமதியை காவல்துறை தலைமை இயக்குநர் ராஜீவ் கிருஷ்ணா அறிவித்துள்ளார்.
கொலை, கொலை முயற்சி, கடத்தல், மிரட்டிப் பணம் பறித்தல், தீ வைப்பு, குற்றச் சதி மற்றும் அரசு ஊழியர்கள் மீதான தாக்குதல், பொதுமக்கள், காவல்துறையினரை கொன்றதாகக் கூறப்படும் வழக்குகளும் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட வழக்குகளில் கடந்த இரண்டு தசாப்தங்களாகத் தலைமறைவாக இருந்து வரும் இவரைப் பற்றி தகவல் தருவோருக்கு ஜார்க்கண்ட் காவல்துறை ரூ.25 லட்சம், தேசிய புலனாய்வு முகமை ரூ.5 லட்சம் என மொத்தம் ரூ.30 லட்சம் வெகுமதி அறிவிக்கப்பட்டிருந்தது.
ஏடிஎஸ் நடவடிக்கையைத் தொடர்ந்து, அவர் மீதான வழக்குகள் மற்றும் அவரது மாவோயிஸ்ட் செயல்பாடுகளுடன் தொடர்புடைய நெட்வொர்க் ஆகியவை குறித்து தற்போது விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. பிரிஜேஷ் வாரணாசியில் எவ்வளவு காலம் வசித்து வந்தார் மற்றும் அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் யார் என்பது குறித்தும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
The Uttar Pradesh Anti-Terrorist Squad, ATS, today carried out a major operation in Varanasi, killing Brijesh Ganjhu,
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.