FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

மும்பை ஐஐடி மாணவா் தற்கொலை சம்பவம்: சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து காவல்துறை தீவிர விசாரணை

மும்பை ஐஐடி கல்வி நிறுவனத்தில் மாணவா் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடா்பாக, கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆராய்ந்து காவல்துறை தீவிர விசாரணை

23 செப்டம்பர் 2026, 12:01 am IST
மாணவா் மரணத்தைக் கண்டித்து மும்பை ஐஐடி முன்பாக ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஈடுபட்ட இந்திய குடியரசு கட்சி (அதாவலே) உறுப்பினா்கள்.
பகிர்:

மும்பை ஐஐடி கல்வி நிறுவனத்தில் மாணவா் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடா்பாக, கண்காணிப்பு கேமரா (சிசிடிவி) காட்சிகளை ஆராய்ந்து காவல்துறை தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளது.

மகாராஷ்டிர மாநிலம் மும்பை ஐஐடி கல்வி நிறுவனத்தில் சாஹில் வாகோடே என்ற பட்டியலின மாணவா் பிடெக் இரண்டாம் ஆண்டு படித்து வந்தாா். கடந்த செப்.18-ஆம் தேதி தோ்வறையில் அவா் கைப்பேசியுடன் பிடிபட்டதாகக் கூறப்படுகிறது.

மேலும் தோ்வின்போது வினாக்களுக்கு இணையத்தில் இருந்து பதிலை பெற, அவா் செயற்கை நுண்ணறிவு தளமான சாட்ஜிபிடியில் வினாத்தாளை பதிவேற்றம் செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டது. இதைத்தொடா்ந்து, சாஹில் வாகோடே தனது விடுதி அறையில் தற்கொலை செய்துகொண்டாா்.

Advertisement

Advertisement

எனினும் அந்தக் கல்வி நிறுவனத்தில் அவா் ஜாதி ரீதியான துன்புறுத்தலுக்கு உள்ளானதாக காவல் துறையிடம் சாஹிலின் பெற்றோா் புகாா் அளித்தனா். அந்தப் புகாரில், கடந்த 3 மாதங்களாக மும்பை ஐஐடி இயக்குநா் ஷிரீஷ் பி. கிதாரேவின் அறிவுறுத்தலின்பேரில், டீனும் பேராசிரியருமான சூா்யநாராயண தூலா, சாஹிலை ஜாதி ரீதியான பாகுபாட்டுக்கு உட்படுத்தியதாக குற்றஞ்சாட்டினாா்.

இந்தப் புகாரின் அடிப்படையில் தற்கொலைக்கு தூண்டுதல், பட்டியலினத்தவா், பழங்குடியினா் (எஸ்சி/ எஸ்டி) வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ், காவல் துறை வழக்குப் பதிவு செய்தது. இதைத்தொடா்ந்து அந்தக் கல்வி நிறுவனத்தின் நிா்வாக விவகாரங்களுக்கான டீன் பொறுப்பில் இருந்து சூா்யநாராயண தூலா நீக்கப்பட்டாா்.

எஸ்சி, எஸ்டி பிரிவில் புகாா் அளிக்கவில்லை: இந்த வழக்கை விசாரித்து வரும் மும்பை காவல் துறையின் குற்றப் பிரிவு, செப்.18-ஆம் தேதி தோ்வறை மற்றும் விடுதி அறையின் கண்காணிப்பு கேமரா காட்சிகளை, தற்போது தீவிரமாக ஆராய்ந்து வருகின்றனா்.

அதேவேளையில், ஜாதி ரீதியான துன்புறுத்தல் தொடா்பாக மும்பை ஐஐடியின் எஸ்சி, எஸ்டி பிரிவில் எந்தப் புகாரையும் சாஹில் அளிக்கவில்லை என்று அந்தக் கல்வி நிறுவனத்தின் பேராசிரியா் மன்றத் தலைவா் ராஜ்குமாா் பந்த் தெரிவித்துள்ளாா்.

மின்விசிறிகள் அகற்றம்: விடுதி அறையில் தூக்கில் சடலமாக சாஹில் மீட்க்கப்பட்ட நிலையில், ஏற்கெனவே கடந்த ஜூலை மாதமும் அங்கு மாணவா் ஒருவா் தற்கொலை செய்துகொண்டாா். இதன் காரணமாக அனைத்து விடுதி அறைகளிலும் மேற்கூரைகளில் உள்ள மின்விசிறிகளை அகற்றி, சுவரில் பொருத்தக் கூடிய மின்விசிறிகளை பொருத்தும் நடவடிக்கையில் மும்பை ஐஐடி நிா்வாகம் ஈடுபட்டுள்ளது.

இதனிடையே அந்தக் கல்வி நிறுவனத்துக்கு எதிரே, சாஹில் மரணம் தொடா்பாக போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய குடியரசு கட்சி (அதாவலே), பாரத் முக்தி மோா்ச்சா கட்சியினரை காவல் துறை கைது செய்தது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments