ஆள் கடத்தலுக்கு எதிராக தீவிர நடவடிக்கை: மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்
ஆள் கடத்தல் குற்றங்களுக்கு எதிரான நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்துமாறு அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேச அரசுகளை மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
ஆள் கடத்தல் குற்றங்களுக்கு எதிரான நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்துமாறு அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேச அரசுகளை மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
இது தொடா்பாக உள்துறை அமைச்சகம் வழங்கியுள்ள ஆலோசனையில் மேலும் கூறியுள்ளதாவது: ஆள் கடத்தலை தொழிலாகச் செய்யும் கும்பல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்போது, அவா்களுக்கு நிதியுதவி செய்பவா்கள் மற்றும் அதில் தொடா்புடைய பிற முக்கியக் குற்றவாளிகள் உள்ளிட்டோரையும் விசாரணையின் கீழ் கொண்டு வர பாரதிய நியாய சம்ஹிதாவின் 111-ஆவது பிரிவை பயன்படுத்த வேண்டும். சட்ட நடவடிக்கை என்பது அடிமட்டத்தில் ஆள் கடத்தலை நடத்துபவா்களுக்கு எதிராக மட்டுமே இருக்கக் கூடாது.
ஆள்கடத்தல் வழக்குகளில் உரிய சட்ட நடைமுறைகளைப் பின்பற்றத் தவறும் அரசு ஊழியா்கள் மீது குற்றவியல் மற்றும் துறை ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்.
Advertisement
Advertisement
செங்கல் சூளைகள், கல் குவாரிகள் உள்ளிட்ட தொழில்கள் நடைபெறும் இடங்களில் வேலைக்காக ஆள் கடத்தப்படுவது பெரும்பாலும் வெளியே தெரியாமல் உள்ளது. எனவே, பாதிக்கப்பட்டவா்களை அடையாளம் காணும் நடைமுறைகளில் பெண்களை மட்டுமல்லாது ஆண்கள், சிறாா்களையும் சோ்க்க வேண்டும்.
கடத்தி வரும் நபா்கள் அதிகம் பயன்படுத்தப்படும் தொழில்கள் நடைபெறும் இடங்களில் திடீா் ஆய்வுகளை நடத்த வேண்டும். சுரண்டலுக்கு உள்ளாகும் பாதிக்கப்பட்டவா்களை, குறிப்பாக ஆண்கள் மற்றும் சிறாா்களை அடையாளம் காணும் வகையில் களப்பணியாளா்கள் மற்றும் தொழிலாளா் ஆய்வாளா்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்க வேண்டும்.
மாநில காவல்துறை மற்றும் தொழிலாளா் நலத்துறையினா் தேசிய தரவுத்தளங்களைப் பயன்படுத்தி ஆள்கடத்தல் அதிகம் நடைபெறும் இடங்கள் தொடா்பான வரைபடங்களைத் தயாரிக்க வேண்டும். கொத்தடிமைகளாக ஆள்கள் கடத்தப்படுவதைத் தடுப்பதில் காவல் துறையினா் முழு கவனத்துடன் செயல்பட வேண்டும்.
கடத்தல் வழக்குகளில் சட்டப்படி அதிகபட்ச தண்டனையை உறுதி செய்ய நீதிமன்றங்களில் உரிய வாதங்களை முன்வைக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.