கடந்த 12 ஆண்டுகளில் கிராமப்புற உள்கட்டமைப்பு கணிசமாக மேம்பட்டுள்ளது: பிரதமர் மோடி
நாட்டில் கடந்த 12 ஆண்டுகளில் நகரங்களுக்கும் கிராமங்களுக்கும் இடையிலான இடைவெளி கணிசமாகக் குறைந்துள்ளது என மோடி பேசியிருப்பது தொடர்பாக
புது தில்லி: நாட்டில் கடந்த 12 ஆண்டுகளில் நகரங்களுக்கும் கிராமங்களுக்கும் இடையிலான இடைவெளி கணிசமாகக் குறைந்துள்ளது என்றும், கிராமப்புற உள்கட்டமைப்பு வசதிகள் பெருமளவில் மேம்பட்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
பிரதமர் நரேந்திர மோடியின் 76 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, சேவா சங்கல்ப் அபியான் திட்டத்தின் ஒரு பகுதியாக, செப். 17 ஆம் தேதி மோடியின் கர்மபூமியான வாரணாசியில் இருந்து அவரது பிறந்த இடமான குஜராத்தின் வத்நகருக்குச் செல்லும் 'சேவா யாத்ரா' என்ற மோட்டார் சைக்கிள் பேரணிகள் தொடங்கி வைக்கப்பட்டன; இவை அக்டோபர் 7 ஆம் தேதி நிறைவடைகிறது.
இந்த நிலையில், வத்நகரில் இருந்து வாரணாசிக்கு செல்லும் மோட்டார் சைக்கிள் பேரணியில் பங்கேற்றவர்களுடன் வியாழக்கிழமை பிரதமர் நரேந்திர மோடி உரையாடினார். அப்போது, 2014-ல் தனது அரசு பதவியேற்றதில் இருந்து நாட்டின் பெண்களிடையே சுயசார்பு மற்றும் தொழில்முனைவோர் திறன் அதிகரித்துள்ளதாக தெரிவித்தார்.
Advertisement
Advertisement
கடந்த 12 ஆண்டுகளில், நகரங்களுக்கும் கிராமங்களுக்கும் இடையிலான இடைவெளி கணிசமாகக் குறைந்துள்ளது. இன்று, கிராமங்களில் உள்கட்டமைப்பு வசதிகள் பெருமளவு மேம்பட்டுள்ளன.
மத்திய அரசு மேற்கொண்ட பல்வேறு திட்டங்களால் கிராமப்புறங்களில் சாலைகள், மின்சாரம், குடிநீர் போன்ற உள்கட்டமைப்புகள் வசதிகள் வலுவடைந்துள்ளன.
வெறும் வாக்கு வங்கி அரசியலுக்காக மட்டுமல்லாமல், சமூகத்தில் தொடர்ச்சியான சீர்திருத்தங்கள் மற்றும் நேர்மறையான மாற்றங்களுக்காகவும் அரசியல்வாதிகளும் மக்களும் உழைக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
தனது வாழ்க்கையை வடிவமைத்த விழுமியங்களை வத்நகர் தனக்கு வழங்கியதாகவும், அந்த விழுமியங்களுக்கு காசி (வாரணாசி) சேவையின் எண்ணற்ற வண்ணங்களைச் சேர்த்துள்ளதாகவும் மோடி கூறினார்.
நீங்கள் அனைவரும் சேவையின் பல வண்ணங்களைக் கொண்டு இந்தப் பயணத்தை மெருகூட்டுவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன் என்று அவர் தெரிவித்தார்.
இந்தப் பேரணிகள் சேவை, மக்களுடனான தொடர்பு, இளைஞர்களின் பங்கேற்பு, சமூக நலன், கலாசார இணைப்பு மற்றும் சமூக ஒருங்கிணைப்பு உள்ளிட்ட மக்கள் ஈடுபாட்டின் பல்வேறு பரிமாணங்களை ஒன்றிணைத்து, அவற்றை ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்குக் கொண்டு செல்கின்றன.
குஜராத்தில் உள்ள வத்நகர் மோடியின் பிறந்த இடமாகும்; அதேவேளையில், உத்தரப் பிரதேசத்தில் உள்ள வாரணாசி 2014 முதல் அவரது மக்களவைத் தொகுதியாகத் திகழ்கிறது.
சேவை மனப்பான்மையை நேரடியாக மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில், இந்தப் பேரணிகள் பல்வேறு நகரங்கள், மாவட்டங்கள் மற்றும் கிராமங்கள் வழியாகச் செல்கின்றன.
Over the past 12 years, the gap between cities and villages in India has significantly narrowed. Today, infrastructure in villages has improved significantly
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.