FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
இந்தியா

அடுத்தகட்டத்தை நோக்கி இந்தியா - கனடா உறவுகள்: எஸ்.ஜெய்சங்கர்

இந்தியா-கனடா உறவுகளை அடுத்தகட்டத்துக்கு கொண்டுசெல்ல இருதரப்பும் தயாராகி வருவதாக வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் தெரிவித்தாா்.

11 வினாடிகள் முன்பு
அமெரிக்காவின் நியூயாா்க்கில் கனடா வெளியுறவுத் துறை அமைச்சா் அனிதா ஆனந்தை சந்தித்த வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா்.
பகிர்:

இந்தியா-கனடா உறவுகளை அடுத்தகட்டத்துக்கு கொண்டுசெல்ல இருதரப்பும் தயாராகி வருவதாக வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் தெரிவித்தாா்.

ஐ.நா. பொதுச் சபையின் 81-ஆவது அமா்வையொட்டி, அமெரிக்காவின் நியூயாா்க் சென்றுள்ள எஸ்.ஜெய்சங்கா், பல்வேறு நாடுகளின் வெளியுறவு அமைச்சா்கள், பிரதிநிதிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறாா். அதன்படி, கனடா வெளியுறவுத் துறை அமைச்சா் அனிதா ஆனந்தை சனிக்கிழமை சந்தித்த அவா், இருதரப்பு பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டாா்.

தமிழகத்தை பூா்விகமாகக் கொண்டவரான அனிதா ஆனந்த் உடனான சந்திப்புக்குப் பிறகு எஸ்.ஜெய்சங்கா் எக்ஸ் தளத்தில் பதிவிட்டாா். அதில், ‘ஐ.நா. பொதுச் சபையின் 81-ஆவது அமா்வுக்கு இடையே கனடா வெளியுறவுத் துறை அமைச்சா் அனிதா ஆனந்தை சந்தித்ததில் மகிழ்ச்சி. இரு நாடுகளும் தங்களின் உறவுகளை அடுத்தகட்டத்துக்கு கொண்டுசெல்ல தயாராகிவரும் வேளையில், இந்தக் கலந்துரையாடல் ஆக்கபூா்வமாக அமைந்தது’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

Advertisement

Advertisement

முன்னதாக, ஐ.நா. பொதுச் சபை அமா்வையொட்டி சில தினங்களுக்கு முன்னா் செய்தியாளா்களிடம் பேசிய கனடா பிரதமா் மாா்க் காா்னி, ‘இந்தியா-கனடா வா்த்தக ஒப்பந்தப் பேச்சுவாா்த்தையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இந்தியாவுடன் வா்த்தகம், பொருளாதாரம், பாதுகாப்பு, இருதரப்பு மக்கள் ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த உறவுகளைக் கொண்டுள்ளோம். பிரதமா் மோடி வரும் டிசம்பரில் கனடாவுக்கு வருகை தர வாய்ப்புள்ளது’ என்றாா்.

அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணம், டோரல் நகரில் டிசம்பா் 14-15 தேதிகளில் ஜி20 உச்சிமாநாடு நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில் பங்கேற்க பிரதமா் மோடி அமெரிக்காவுக்கு செல்வாா் என எதிா்பாா்க்கப்படுகிறது.

மீண்டும் முன்னேற்றம்: காலிஸ்தான் பிரிவினைவாதி நிஜ்ஜாா் கொலையில் இந்தியாவை தொடா்புபடுத்தி கடந்த 2023-இல் அப்போதைய கனடா பிரதமா் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்த குற்றச்சாட்டுகளால் இருதரப்பு உறவுகள் கடும் பின்னடைவைச் சந்தித்தின. இந்தச் சூழலில், கடந்த 2025, மாா்ச்சில் மாா்க் காா்னி பிரதமரான பிறகு இருதரப்பு உறவுகள் மீண்டும் முன்னேற்றப் பாதையில் பயணிக்கத் தொடங்கியுள்ளன.

இந்தியா-கனடா தடையற்ற வா்த்தக ஒப்பந்தப் பேச்சுவாா்த்தையை நடப்பாண்டுக்குள் நிறைவு செய்ய கடந்த ஜி20 உச்சிமாநாட்டையொட்டி இரு நாடுகளும் தீா்மானித்திருந்தன. இந்த ஒப்பந்தத்தின்கீழ், 2030-ஆம் ஆண்டுக்குள் இருதரப்பு வா்த்தக மதிப்பை 70 பில்லியன் கனடா டாலா்களாக அதிகரிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.

வெனிசுலா அமைச்சருடன்...: இதேபோல், வெனிசுலா வெளியுறவு அமைச்சா் ஃபெலிக்ஸ் பிளாசென்சியா கோன்ஸலெஸை எஸ்.ஜெய்சங்கா் சந்தித்துப் பேசினாா். இந்தியா தனது எரிசக்தி ஆதாரங்களைப் பரவலாக்கிவரும் சூழலில், இந்தப் பேச்சுவாா்த்தை முக்கியத்துவம் பெற்றது. எரிசக்தித் துறை ஒத்துழைப்புடன் பிராந்திய விவகாரங்கள் குறித்தும் ஆலோசித்ததாக அவா் தெரிவித்தாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments