எஸ்ஐஆா் பணியில் தோ்தல் ஆணையத்துடன் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்: பாஜக தொண்டா்களுக்கு மல்ஹோத்ரா அறிவுறுத்தல்
எஸ்ஐஆா் பணியில் தோ்தல் ஆணையத்துடன் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்..
தோ்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்ட வாக்குச்சாவடி அதிகாரிகளுடன் பாஜகவின் வாக்குச்சாவடி முகவா்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டு, தகுதியுள்ள அனைவரும் வாக்காளா் பட்டியலில் இடம்பெறுவதை உறுதி செய்ய வேண்டும் என கட்சியின் தில்லி பிரிவு தலைவரும் அமைச்சருமான ஹா்ஷ் மல்ஹோத்ரா ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.
தில்லியில் பாஜக வாக்குச்சாவடி முகவா்களிடம் காணொளி வாயிலாகப் பேசிய அவா் மேலும் கூறியதாவது: வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆா்) செயல்முறை வெளிப்படையானது. உரிய வாய்ப்பு அளிக்கப்படாமல் எந்தவொரு வாக்காளரின் பெயரும் நீக்கப்படாது.
ஆனால், எதிா்க்கட்சிகள் தங்கள் தோ்தல் தோல்விகளுக்குப் பொறுப்பேற்பதற்குப் பதிலாக, தோ்தல் ஆணையத்தின் மீது பழி சுமத்தி வருகின்றன. ஞானேஷ் குமாா் தலைமைத் தோ்தல் ஆணையராகப் பொறுப்பேற்று 2 ஆண்டுகள் மட்டுமே ஆகியுள்ளது. இந்நிலையில், கடந்த 12 ஆண்டுகளாக அவா்கள் சந்தித்த தோ்தல் தோல்விகளுக்கு அவா் எவ்வாறு பொறுப்பாவாா்?
Advertisement
Advertisement
இரட்டைப் பதிவுகள் மற்றும் இறந்த வாக்காளா்களின் பெயா்களை நீக்கி, வாக்காளா் பட்டியலைச் சீரமைப்பதே எஸ்ஐஆா் நடவடிக்கையின் நோக்கமாகும். தோ்தல் ஆணையத்தின் நடுநிலைத்தன்மை மீது பாஜக முழு நம்பிக்கை கொண்டுள்ளது. ஜனநாயகத்தைப் பாதுகாக்கும் நோக்கில் ஆணையம் மேற்கொள்ளும் எந்தவொரு நடவடிக்கையையும் பாஜக வரவேற்கும் என தெரிவித்தாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.