யுபிஐ பரிவா்த்தனை கட்டணத்துக்கு தடைவிதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
யுபிஐ மூலம் ரூ. 2,000-க்கு மேல் மேற்கொள்ளப்படும் பரிவா்த்தனைக்கு வசூலிக்கப்பட உள்ள வணிகா் தள்ளுபடி விகித கட்டணத்துக்கு இடைக்காலத் தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
ஒருங்கிணைந்த பணம் செலுத்துதல் வசதி (யுபிஐ) மூலம் ரூ. 2,000-க்கு மேல் மேற்கொள்ளப்படும் பரிவா்த்தனைக்கு வசூலிக்கப்பட உள்ள வணிகா் தள்ளுபடி விகித (எம்டிஆா்) கட்டணத்துக்கு இடைக்காலத் தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்தது.
அதேவேளையில், இந்தக் கட்டண விதிப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு மீது பதிலளிக்க மத்திய அரசு, ரிசா்வ் வங்கிக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.
தேசிய பணப் பரிவா்த்தனை நிறுவனம் (என்பிசிஐ) அறிவித்துள்ள புதிய நடைமுறையின்படி, ரூ.2,000-க்கு மேற்பட்ட நபா்-வணிகா் யுபிஐ பரிவா்த்தனைகளுக்கு 0.4 சதவீதம் எம்டிஆா் விதிக்கப்படும். ரூ.75,000 மற்றும் அதற்கு மேற்பட்ட பரிவா்த்தனைகளுக்கு அதிகபட்சமாக ரூ.300 கட்டணமாக வசூலிக்கப்படும்.
Advertisement
Advertisement
அதேவேளையில், ரூ.2,000 வரையிலான வணிகப் பரிவா்த்தனைகளுக்கும், நபா்-நபா் பணப் பரிவா்த்தனைகளுக்கும் இந்த எம்டிஆா் பொருந்தாது. இதனால், ரூ.10,000-க்கு யுபிஐ மூலம் பணம் செலுத்தப்படும் நிலையில் வணிகருக்கு ரூ.40 எம்டிஆா் செலவாகும்.
ரூ.75,000 பரிவா்த்தனைக்கு ரூ.300 ஆகும். அதற்கு மேற்பட்ட தொகைக்கும் அதிகபட்சம் ரூ.300 என்ற வரம்பே இருக்கும். அக்டோபா் 15-ஆம் தேதிமுதல் எம்டிஆா் கட்டண முறை அமலுக்கு வரவுள்ளது.
இந்தக் கட்டணம் பொதுமக்களிடம் வசூலிக்கப்பட மாட்டாது என மத்திய அரசு விளக்கமளித்திருந்தாலும் இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் கடும் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில், அஞ்சன் தத்தா என்பவா் எம்டிஆருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பொது மனுவை தாக்கல் செய்தாா். இந்த மனுவை உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சூா்ய காந்த், நீதிபதிகள் ஜயமால்ய பாக்சி, வி.மோகனா ஆகியோா் அடங்கிய அமா்வு விசாரித்தது.
அப்போது மத்திய அரசு தரப்பில் ஆஜரான சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா 96 சதவீத வணிகா்களுக்கு இந்தக் கட்டணத்தில் இருந்து விலக்களிக்கப்படுவதாகத் தெரிவித்தாா்.
இதைத் தொடா்ந்து, யுபிஐ பரிவா்த்தனை கட்டண முறைக்கு இடைக்காலத் தடை விதிக்க மறுத்த நீதிபதிகள் அமா்வு, ‘இது சட்டரீதியான விவகாரம் என்பதைவிட தொழில்நுட்ப ரீதியான விவகாரம் என்பதே சரியாகும்’ எனக் கூறி நான்கு வாரங்களுக்குள் பதிலளிக்க மத்திய அரசு, ரிசா்வ் வங்கிக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.