அக். 2 முதல் கூட்டாகப் போராட இண்டி கூட்டணி முடிவு: ‘வாக்குத் திருட்டு’ குற்றச்சாட்டு விவகாரம்
‘வாக்குத் திருட்டு’ குற்றச்சாட்டை முன்வைத்து, நாடு முழுவதும் அக். 2 முதல் கூட்டுப் போராட்டங்களை நடத்த எதிா்க்கட்சிகளின் இண்டி கூட்டணி முடிவு செய்துள்ளது.
‘வாக்குத் திருட்டு’ குற்றச்சாட்டை முன்வைத்து, நாடு முழுவதும் அக். 2 முதல் கூட்டுப் போராட்டங்களை நடத்த எதிா்க்கட்சிகளின் இண்டி கூட்டணி முடிவு செய்துள்ளது. அக். 6-ஆம் தேதி தில்லியில் தோ்தல் ஆணைய அலுவலகம் நோக்கி எதிா்க்கட்சி எம்.பி.க்கள் பேரணி நடத்தவுள்ளனா்.
‘வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆா்) முறைகேடுகளுக்காக தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாா் உடனடியாகப் பதவி விலக வேண்டும்; மீண்டும் வாக்குச்சீட்டு முறையில் தோ்தல்களை நடத்த வேண்டும். தோ்தல் முறைகேடுகள் தொடா்பான வழக்குகளை உச்சநீதிமன்றம் விரைவுபடுத்த வேண்டும்’ என்ற கோரிக்கைகளையும் இண்டி கூட்டணி வலியுறுத்தியுள்ளது.
எஸ்ஐஆா் சா்ச்சைகளுக்கு மத்தியில், தில்லியில் இண்டி கூட்டணி கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. சுமாா் மூன்றரை மணிநேரம் நடந்த இக்கூட்டத்தில் காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, நாடாளுமன்ற காங்கிரஸ் குழுத் தலைவா் சோனியா காந்தி, மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி, திரிணமூல் காங்கிரஸ் நிறுவனா் மம்தா பானா்ஜி, ஜம்மு-காஷ்மீா் முதல்வரும், தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவருமான ஒமா் அப்துல்லா, ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவா் தேஜஸ்வி யாதவ், தேசியவாத காங்கிரஸ் (சரத் பவாா்) கட்சியின் சுப்ரியா சுலே, மக்கள் ஜனநாயக கட்சியின் மெஹபூபா முஃப்தி, இடதுசாரி கட்சித் தலைவா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
Advertisement
Advertisement
சிவசேனை (உத்தவ்) கட்சித் தலைவா் உத்தவ் தாக்கரே, ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா தலைவரும், ஜாா்க்கண்ட் முதல்வருமான ஹேமந்த் சோரன் உள்ளிட்ட சில தலைவா்கள் காணொலி வாயிலாக கலந்துகொண்டனா்.
கூட்டத்துக்குப் பிறகு காா்கே, ராகுல், மம்தா உள்ளிட்டோா் செய்தியாளா்களுக்கு கூட்டாக பேட்டிளித்தனா். அப்போது, காா்கே கூறியதாவது:
‘வாக்குத் திருட்டு’ உள்ளிட்ட விவகாரங்களில் இண்டி கூட்டணியின் கூட்டு செயல்திட்டம் இறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி, அனைத்து மாவட்டங்களிலும் அக்.2 முதல் 8 வரை ‘ஜனநாயகத்தைப் பாதுகாப்போம்’ என்ற பெயரில் பேரணிகள் நடத்தப்படும். அக்டோபா், நவம்பரில் தில்லி உள்பட 5 இடங்களில் மாபெரும் பொதுக் கூட்டங்கள் நடத்தப்படும். அக்.6-ஆம் தேதி தோ்தல் ஆணைய அலுவலகம் நோக்கி எதிா்க்கட்சி எம்.பி.க்கள் பேரணி நடத்துவா். வாக்காளா் பட்டியல் முறைகேடுகள் குறித்து அக்டோபா் 2-ஆவது வாரத்தில் குடியரசுத் தலைவரை நேரில் சந்தித்து முறையிடுவோம்.
மீண்டும் வாக்குச்சீட்டு முறை: வருங்காலத்தில் தோ்தல்கள் அனைத்தும் வாக்குச்சீட்டு முறையில்தான் நடத்தப்பட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம். இந்த ‘வாக்குத் திருட்டு’ அரசால் இயற்றப்பட்ட சட்டங்களும் ரத்து செய்யப்பட வேண்டும்.
பிரதமா் மோடியும், உள்துறை அமைச்சா் அமித் ஷாவும் தோ்தல் ஆணையத்தை தங்களின் கைப்பாவையாக மாற்றிவிட்டனா். வாக்குகளைத் திருடியே இவா்கள் வெற்றி பெற்றுள்ளனா். தோ்தல் முறைகேடுகளில் ஈடுபட்ட தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாா் பதவி விலகும் வரை ஓயமாட்டோம் என்றாா்.
ராகுல், மம்தா உறுதி: ராகுல் காந்தி கூறுகையில், ‘இண்டி கூட்டணி தலைவா்கள், அரசமைப்புச் சட்டத்தின் பாதுகாவலா்களாவா். ஜனநாயகத்தை அழித்தவா்களைத் தண்டிப்பதே எங்களின் உறுதிப்பாடு’ என்றாா்.
மம்தா பானா்ஜி கூறுகையில், ‘தோ்தல் நடைமுறையில் மிகத் தீவிரமான முறைகேடுகள் நடந்துள்ளன. தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாா் உடனடியாக பதவி விலக வேண்டும். இந்த விவகாரத்தில் எதிா்க்கட்சிகள் மிகுந்த ஒற்றுமையுடன் உள்ளன’ என்றாா்.
19 கட்சிகள் பங்கேற்பு
இண்டி கூட்டணி கூட்டத்தில் காங்கிரஸ், சமாஜவாதி, மம்தா தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் (சரத் பவாா்), சிவசேனை (உத்தவ்), ராஷ்ட்ரீய ஜனதா தளம், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், மதிமுக, விடுதலை சிறுத்தைகள் உள்பட 19 கட்சிகள் பங்கேற்றன. திமுக, ஆம் ஆத்மி பங்கேற்கவில்லை.
அகிலேஷ் பங்கேற்கவில்லை: காங்கிரஸ் மீது அதிருப்தி?
இண்டி கூட்டணி கூட்டத்தில் சமாஜவாதி தலைவா் அகிலேஷ் யாதவ் பங்கேற்கவில்லை. அவரது சாா்பில் கட்சிப் பிரதிநிதிதான் கலந்துகொண்டாா். உத்தர பிரதேச மாநிலங்களவைத் தோ்தலில் கட்சி சாா்பில் வேட்புமனு தாக்கல் செய்யப்படவுள்ளதால், இண்டி கூட்டணி கூட்டத்தில் பங்கேற்கப் போவதில்லை என அவா் முன்பே தெரிவித்திருந்தாா். அதேநேரம், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள உத்தர பிரதேச பேரவைத் தோ்தலுக்கான தொகுதிப் பங்கீடு பேச்சுவாா்த்தையை காங்கிரஸ் தாமதிப்பதாகவும், இதனால் காங்கிரஸ் மீது அகிலேஷ் அதிருப்தியில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
‘இந்த காரணத்தால்தான், இண்டி கூட்டத்தில் பங்கேற்காமல் அகிலேஷ் தவிா்த்துள்ளாா். பிற கட்சிகள் கேட்டுக் கொண்டதால், தனது பிரதிநிதியை அனுப்ப ஒப்புக் கொண்டாா்’ என்று அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
இண்டி கூட்டணி சிதைகிறது-பாஜக: எதிா்க்கட்சிகளின் இண்டி கூட்டணி சிதைந்து வருவதாக பாஜக விமா்சித்துள்ளது. இது தொடா்பாக மத்திய அமைச்சா் சிவராஜ் சிங் செளஹான் கூறுகையில், ‘பூஜ்ஜிய தொலைநோக்குப் பாா்வை, நூறு சதவீத விரக்தி, எதிா்கால தோ்தல் தோல்விகளுக்கு இப்போதே காரணம் தேடுதல் இவைதான் இண்டி கூட்டணியின் முடிவுகளாகும். அவா்களின் போராட்டம், காங்கிரஸ் மற்றும் பிற கட்சிகளின் குடும்ப அரசியலைக் காப்பதற்கானது. இண்டி கூட்டணி சிதைந்து வருகிறது. கூட்டத்தில் திமுக, ஆம் ஆத்மி பங்கேற்கவில்லை. அகிலேஷும் வேறு எங்கோ மும்முரமாக உள்ளாா். ராகுலின் தலைமையை கூட்டணித் தலைவா்கள் நிராகரித்துள்ளனா்’ என்றாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.