மாணவர்கள் கேள்வி கேட்பதை மோடி விரும்புவதில்லை! - ராகுல் காந்தி தாக்கு!
பிரதமர் மோடி சமூகநீதி மற்றும் சமத்துவத்திற்கு எதிரானவர் என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் கடும் தாக்கு...
பிரதமர் நரேந்திர மோடி சமூகநீதி மற்றும் சமத்துவத்துக்கு எதிரானவர் எனக் கூறி மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார்.
சட்டமேதை அம்பேத்கரின் சாதி ஒழிப்பு' மற்றும் ஜோதிராவ் பூலேயின் 'குலாம் கிரி' உள்ளிட்ட சாதிய எதிர்ப்புச் சிந்தனையுடைய சுமார் 35 நூலகளைக் குறிப்பிட்டு இவை மாணவர்களிடையே விஷத்தைப் பரப்புவதாகக் கூறி அடையாளம் தெரியாத நபர் ஒருவர் கடந்த செப்.26 ஆம் தேதி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
பிரதமர் அலுவலகத்தின் அறிவுறுத்தலின்படி, அந்தப் பதிவைக் குறிப்பிட்டு, அனைத்து மத்தியப் பல்கலைக்கழகங்களிடமும் அவற்றின் பாடத்திட்டங்கள் குறித்த விவரங்களையும், அந்தப் பாடப்பிரிவுகளின் கீழ் எத்தனை மாணவர்கள் சேர்ந்துள்ளனர் என்பதை விசாரித்தும் மத்திய கல்வி அமைச்சகம் கடந்த செப்.27 ஆம் தேதி அறிவிப்பு வெளியிட்டிருந்தது.
Advertisement
Advertisement
பிரதமர் அலுவலகத்தின் இந்த நடவடிக்கையைக் குறிப்பிட்டு, மாணவர்கள் சிந்திப்பதையோ அல்லது கேள்விகள் கேட்பதையோ பிரதமர் மோடியின் அமைப்பு விரும்புவதில்லை எனக் கூறி ராகுல் காந்தி இன்று (செப். 30) பதிவிட்டுள்ளார்.
இதுபற்றி, அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில்,
“பிரதமர் மோடி சமூகநீதி மற்றும் சமத்துவத்துக்கு எதிரானவர். அவரது ஒட்டுமொத்த அமைப்பும் கல்வியை வெறுக்கிறது. ஏனென்றால், அவர்கள் மாணவர்கள் சிந்திப்பதையோ அல்லது கேள்விகள் கேட்பதையோ விரும்புவதில்லை.
அதற்கான சமீபத்திய ஆதாரம் இதோ:
பெயர் குறிப்பிடாத ஒரு எக்ஸ் தளப் பதிவில், பாபாசாகேப் அம்பேத்கரின் “சாதி ஒழிப்பு” மற்றூம் ஜோதிபா பூலேவின் “குலாகிரி” போன்ற மிக முக்கியமான நூல்கள், இளைஞர்களின் மனதில் விஷத்தை ஏற்றுவதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.
அதற்கு அடுத்த நாளே, கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று பிரதமர் அலுவலகத்தின் அறிவுறுத்தலின் பேரில், மத்திய கல்வி அமைச்சகம் அனைத்து மத்தியப் பல்கலைக்கழகங்களிடம் அவற்றின் பாடத்திட்டங்கள் குறித்த விவரங்களைக் கேட்டதுடன், அந்தப் பாடப்பிரிவுகளில் எத்தனை மாணவர்கள் சேர்ந்துள்ளனர் என்பது குறித்தும் விசாரித்துள்ளது.
வினாத்தாள் கசிவு, வேலையின்மை மற்றும் இளைஞர்களின் பாதுகாப்பு உள்ளிட்ட விவகாரங்களில் மௌனமாக இருக்கும் பிரதமர், இணையத்தில் வெளியான ஒரு சிறு பதிவுக்கு உடனடியாகச் செயல்படத் தொடங்கியிருப்பது பெரும் அதிர்ச்சியளிக்கிறது” எனக் கூறியுள்ளார்.
Rahul Gandhi has sharply criticized Prime Minister Narendra Modi, alleging that he is opposed to social justice and equality.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.