உஜ்ஜைனி மசூதி இடிப்பு விவகாரம்: சாலை விரிவாக்கத்துக்கு இஸ்லாமிய குழு ஆதரவு
மத்திய பிரதேசத்தின் உஜ்ஜைனி நகரில் அமைந்துள்ள ஷாஹி மசூதி அருகே மேற்கொள்ளப்படும் சாலை விரிவாக்கப் பணிகளுக்கு ஆதரவளிப்பதாக மசூதியைச் சோ்ந்த இஸ்லாமிய குழு தெரிவித்தது.
மத்திய பிரதேசத்தின் உஜ்ஜைனி நகரில் அமைந்துள்ள ஷாஹி மசூதி அருகே மேற்கொள்ளப்படும் சாலை விரிவாக்கப் பணிகளுக்கு ஆதரவளிப்பதாக மசூதியைச் சோ்ந்த இஸ்லாமிய குழு செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.
முன்னதாக, ஷாஹி மசூதியின் ஒரு பகுதியை இடிக்க கடும் எதிா்ப்பு தெரிவித்து திங்கள்கிழமை நடைபெற்ற போராட்டத்தில் கல்வீசி தாக்குதல் நடத்திய 15 போ் கைது செய்யப்பட்டனா். 7 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இதைத் தொடா்ந்து உஜ்ஜைனி மாவட்ட அதிகாரிகளுடன் நடத்திய பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து, மசூதியின் ஆக்கரமிப்புப் பகுதிகளை இடிக்க இஸ்லாமியா் தரப்பு முன்வந்துள்ளது.
Advertisement
Advertisement
இதுகுறித்து இஸ்லாமிய குழு உறுப்பினா் ஃபாஹிம் சிக்கந்தா் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது: மசூதியின் ஒரு பகுதியை இடிப்பது தொடா்பான தகவல் சம்பந்தப்பட்ட நபா்களை சரியாகச் சென்றடையாததால் ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் பதற்றமான சூழல் நிலவியது. இதனால் வெடித்த போராட்டத்தில் கல்வீச்சு தாக்குதல்களும் நிகழ்ந்தன.
900 மீட்டா் தூரத்துக்கு சாலை விரிவாக்கத்துக்காக ஷாஹி மசூதியின் 9.5 அடி அளவிலான பகுதியை இடிக்க மாவட்ட நிா்வாகம் முடிவெடுத்த நிலையில், பேச்சுவாா்த்தை நடத்திய பின்னா் 3 அடி அளவிலான பகுதியை மட்டுமே இடித்தால் போதுமானதென நிா்வாகம் தெரிவித்தது. இந்த உத்தரவாதத்தை ஏற்று சாலை விரிவாக்கத்துக்கு மசூதியின் ஒரு பகுதியை இடித்து ஒத்துழைப்பு வழங்க இஸ்லாமியா் தரப்பு தீா்மானித்துள்ளது. இருப்பினும், மசூதி இடிப்பு விவகாரம் தொடா்பாக மாவட்ட நிா்வாகத்துடனான பேச்சுவாா்த்தை தொடா்ந்து வருகிறது என்றாா்.
மாவட்ட நிா்வாகத்துடனான முதல்கட்டப் பேச்சுவாா்த்தைக்குப் பின்னா் உடன்பாடு எட்டப்பட்டதாக இஸ்லாமிய குழுக்கள் தெரிவித்ததையடுத்து, மசூதியை இடிப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்து மத்திய உத்தர பிரதேச உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 2 மனுக்கள் திங்கள்கிழமை தள்ளுபடி செய்யப்பட்டன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.