புதுவை கல்வியமைச்சரை பதவி நீக்கம் செய்ய குடியரசுத் தலைவருக்கு அதிமுக கடிதம்
முதல்வரி்ன் பரிந்துரைக்காகக் காத்திருக்காமல் நேரடியாக குடியரசுத் தலைவர் தலையிட்டு புதுச்சேரி கல்வியமைச்சர் பிஎம்எல். கல்யாணசுந்தரத்தைப் பதவி நீக்கம் செய்ய...
புதுச்சேரி, அக். 9: முதல்வரி்ன் பரிந்துரைக்காகக் காத்திருக்காமல் நேரடியாக குடியரசுத் தலைவர் தலையிட்டு புதுச்சேரி கல்வியமைச்சர் பிஎம்எல். கல்யாணசுந்தரத்தைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று அதிமுக கடிதம் அனுப்பியுள்ளது.
இது குறித்து குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீலுக்கு அனுப்பியுள்ள கடிதத்தின் விவரத்தை அதிமுக செயலரும் சட்டமன்ற உறுப்பினருமான ஆ. அன்பழகன் செய்தியாளர்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியது: கல்யாணசுந்தரம் மீது 6 வழக்குகள் நிலுவையில் இருந்தபோதே அவரை அமைச்சராக்க முதல்வர் ரங்கசாமி பரிந்துரை செய்திருந்தார். அந்தப் பரிந்துரை அடிப்படையில்தான் குடியரசுத் தலைவர் கல்யாணசுந்தரத்தை அமைச்சராக நியமித்துள்ளார். யூனியன் பிரதேச சட்டம் 1963 பிரிவு 45 (1)-ன் கீழ் முதல்வரின் பரிந்துரை அடிப்படையில் குடியரசுத் தலைவர் அமைச்சரை நியமிக்க அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதே சட்டம் 45 உள்பிரிவு 2 அடிப்படையில் குடியரசுத் தலைவர் மனநிறைவு இருக்கும் வரை ஒருவர் அமைச்சர் பதவியில் நீடிக்க முடியும். குடியரசுத் தலைவர் மனநிறைவு அடையவில்லையென்றால் இந்தச் சட்டத்தின் கீழ் அவரைப் பதவி நீக்கம் செய்ய முடியும். இப்போது பத்தாம் வகுப்பு தேர்வில் ஆள்மாறாட்டம் செய்துள்ளதாக தமிழக போலீஸ் கல்யாணசுந்தரத்தைத் தேடுகிறது.
வெளிப்படையான, நேர்மையான, ஊழலற்ற ஆட்சி கொடுப்போம் என்று கூறி வந்த ரங்கசாமி, தன்னுடைய அமைச்சரவையில் எப்படிப்பட்டவரை அமைச்சராக்கியுள்ளார் என்பதில் இருந்தே அவரைப் பற்றி தெரிந்து கொள்ளலாம். மேலும் தன்னுடைய அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் ஒருவர் மீது புகார் வந்தபோதே இது தொடர்பாக அவர் மீது உரிய நடவடிக்கை எடுத்து அவரைப் பதவியிலிருந்து நீக்கியிருக்க வேண்டும். ஆனால் ரங்கசாமி அது போன்ற காரியங்களைச் செய்யமாட்டார். மாறாக அவரைப் பாதுகாக்கும் வழிமுறைகளில்தான் ஈடுபடுவார். அதனால் முதல்வர் பரிந்துரை அடிப்படையில் கல்யாணசுந்தரத்தைப் பதவி நீக்கம் செய்யலாம் என்று குடியரசுத் தலைவர் காலதாமதம் செய்யக் கூடாது. உடனடியாக அவரைப் பதவி நீக்கம் செய்ய குடியரசுத் தலைவர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Advertisement
Advertisement
அமைச்சர் கல்யாணசுந்தரம் ஆள்மாறாட்டம் செய்தது புதுச்சேரி யூனியன் பிரதேசத்துக்கே அகில இந்திய அளவில் தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி கல்வியமைச்சர் கல்யாணசுந்தரம் தேடப்படும் ஒரு குற்றவாளி. எந்த நேரமும் தமிழக போலீஸார் அவரைக் கைது செய்யக்கூடும். அதனால் அவரைப் பதவியிலிருந்து நீக்க வேண்டும். மேலும் இது தொடர்பாக பிரதமர், உள்துறை
அமைச்சருக்கும் கடிதத்தின் நகல் அனுப்பியுள்ளோம். மத்திய அரசு இந்த விஷயத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் மக்களைத் திரட்டி கல்யாணசுந்தரத்தைப் பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி போராட்டம் நடத்துவோம் என்றார் அன்பழகன்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.