FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

திருமயம் கோட்டையில் பாறை ஓவியங்கள் கண்டுபிடிப்பு

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் கோட்டைப்பகுதியில்  இதுவரை அறியப்படாத பாறை ஓவியங்கள் திருமயத்தில் காணப்படுவதாக புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் முனைவர் நா.

4 ஜனவரி 2024, 12:24 am IST
பகிர்:

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் கோட்டைப்பகுதியில்  இதுவரை அறியப்படாத பாறை ஓவியங்கள் திருமயத்தில் காணப்படுவதாக புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் முனைவர் நா. அருள்முருகன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர்  வெளியிட்ட தகவலில் தெரிவித்திருப்பதாவது: 

திருமயத்தில் காணப்படும் பாறை ஓவியங்கள் புதுக்கோட்டை மாவட்டத்தின் தொன்மையைக் காட்ட உதவும் முதன்மையான ஆதாரமாகும். இந்தப் பாறை ஓவியங்கள் இப்போதுதான் வெளி உலகத்துக்குத் தெரிய வந்துள்ளது. சித்தன்னவாசல்  ஓவியம்  கி.பி. 7 - 9  -ம் நூற்றாண்டு பல்லவர் காலத்தைச் சார்ந்தது. திருமயத்தில் தற்போது தெரியவந்திருக்கும் பாறை ஓவியங்கள் கி.மு. 5000 -க்கும் முற்பட்டவையாகும். இவை புதுக்கோட்டை மாவட்டத்து ஓவியங்களிலேயே மிகவும் பழமையானவை ஆகும்.திருமயத்தில் மூன்று இடங்களில் பாறை ஓவியங்கள் உள்ளன.  கோட்டையின் நுழைவாயிலுக்குள் வந்தவுடன் வலது புறம் பார்த்தால் தலைப்பாகை அல்லது தொப்பி வடிவப் பாறை தெரியும்.

Advertisement

Advertisement

இந்தப் பாறையின் மேற்குப் பக்கம் கீழ்ப்பகுதியில் ஒருசில ஓவியங்கள் உள்ளன. இந்த ஓவியங்களின் செய்தியை அறியமுடியாதபடி நிறம் மங்கிப் போயுள்ளன. தெற்குப்பக்கம் ஆணும் பெண்ணும் கைகோர்த்தபடி படுத்திருப்பது போல உள்ள ஓவியம் மெய்யுறு புணர்ச்சியை விளக்குகிறது. மற்றுமொரு ஓவியத்தில் கீழே இருக்கும் உருவகங்கள் இசைக்கருவிகள் வாசிக்க மற்றவர்கள் ஆடுகின்றனர்.

ஒரு ஜோடி ஆணும், பெண்ணும் கைகோர்த்து ஆட கீழே இருக்கும் இருவர் இசைக்கருவியை இசைத்துக் கொண்டே ஆடுகின்றனர். தலையில் குஞ்சம் கட்டிய ஒருவரும், மற்றொருவர் அமர்ந்தும் மத்தளம் போன்ற ஏதோ ஒரு இசைக்கருவியை வாசிக்கின்றனர். இந்த ஆட்டம் தொல்காப்பியத்தி்ல் கூறப்படும் உண்டாட்டு என்னும் வகையைச் சேர்ந்ததாக இருக்கலாம். ஆட்டத்தைக்காண்பது போலத்தோன்றும்  ஓவியம் மற்ற ஓவியங்களைவிட பெரிய உள்ளது. இது இங்கு வாழ்ந்த கூட்டத்தில் தலைவியைக் குறிப்பிடுவதாக இருக்கலாம். கிழக்குப்பக்கத்தில் உள்ள ஓவியத்தில் சண்டையிடுதல் அல்லது வேட்டையாடுதல் போல உள்ளது. சூரிய ஒளி படும் திசையில் உள்ளதால் மங்கிப்போயுள்ளது.

மேலும் ஒரு ஓவியத்தில் விலங்கின் மீது மனிதன் அமர்ந்த நிலையில் விலங்கு நீண்ட உருவமாக வரையப்பட்டுள்ளது. இது இடம் விட்டு இடம் பெயர்வதைக் காட்டும் ஓவியமாகும். பாறையின் வடக்குப்பக்கத்தில் நிறைய மனித உருவங்கள் தீட்டப்பட்டுள்ளன. ஒரு பெண்ணின் பின்னால் ஒருவர் பின் ஒருவராகத் தொடர்ந்து வருவதைப் போலவும், நிற்பது போலவும் உருவங்கள் அமைந்திருக்கின்றன.

திருமயம் குன்றின் தென்பகுதியில் உள்ள சிவன் கோவிலுக்கும் பெருமாள் கோவிலுக்கும் இடையில் உள்ள குகைக்கு  மேல் பகுதியில் பாறை ஓவியங்கள் உள்ளன. சிவன் கோவில் பிரகாரத்துக்கு கீழ்ப்புறத்தில் இருந்து வடகிழக்காக நின்று வலது கைப்பக்கமாக மேலே பார்த்தால் ஓவியங்கள் இருப்பது போல தெரிகிறது. அவை கைகளைப் போன்றும் காது நீண்ட முயல்களைப் போன்றும் தோன்றுகின்றன. அல்லது வேறு மனித, விலங்கு உருவங்களாகக்கூட இருக்கலாம். கோபுரப்பகுதியில் ஏறிப்பார்த்தால் இன்னும் ஓவியங்கள் இருக்கக்கூடும்.

திருமயத்தில் கிடைத்துள்ள பாறை ஓவியங்களில் செந்நிறம் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது. அடர்த்தியான வண்ணப்பூச்சும் கோட்டு உருவங்களும் சில ஓவியங்களில் காணப்படுகிறது. தாய்வழிச் சமுதாயம், வேட்டையாடுதல், கல்லாயுதம் பயன்பாடு, சக்கரத்துக்கு முந்தைய விலங்கின் மீது ஏறிச்செல்லுதல், ஆடல் கலை ஆகியவற்றிலிருந்து திருமயம் பாறை ஓவியங்கள் கி.மு. 5 ஆயிரத்துக்கும் முற்பட்டது எனலாம்.  இது குறித்த ஆய்வு மேலும் தொடரும். இந்தப்பாறையில் தொன்மையான ஓவியங்கள் இருப்பது தெரியாமல் அவற்றின் மீது கோட்டையைச் சுற்றிப்பார்க்க வரும் சிலர் குறியீடு செய்து வைத்துள்ளனர். இது  குறித்து  தொல்லியல் துறையினர் உரிய கவனம்செலுத்தி மேலும் அழிந்து விடாமல் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments