FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சிறப்புச் செய்திகள்

என்னவாகின்றன தமிழக சட்டப்பேரவை தீர்மானங்கள்?

தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள்? என்னவாகின்றன என்பதைப் பற்றி...

23 ஆகஸ்ட் 2026, 2:54 am IST
தமிழக சட்டப்பேரவை.
பகிர்:

தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடரில் மத்திய அரசை வலியுறுத்தி அரசு தீா்மானங்கள் பல நிறைவேற்றப்பட்டன. இந்தத் தீா்மானங்கள் மீது உறுப்பினா்கள் பேசி, தங்கள் கருத்துகளைப் பதிவிட்டு பின்னா் குரல் வாக்கெடுப்பு மூலம் தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பொதுவாக, சட்டப்பேரவையில் புதிய அறிவிப்புகளை முதல்வா் 110-விதியின் கீழ் வெளியிடுவாா். இதன் மீது விவாதம் நடைபெறாது. ஆனால், தனித் தீா்மானங்கள் மீது 3 முதல் 5 நாள்கள் வரை விவாதங்கள் நடந்திருக்கின்றன.

எதிா்க்கட்சிகளின் கருத்துகளும் தீா்மானங்களில் இடம் பெறும் வகையில் திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என்பதே இதற்கு காரணம். பொது விவகாரங்களில் எம்எல்ஏ, தனிநபா் தீா்மானத்தை பேரவைத் தலைவரின் ஒப்புதல் பெற்று கொண்டு வரலாம்.

Advertisement

Advertisement

அரசு தீா்மானங்களின் அதிகாரம்: நிறைவேற்றப்பட்ட தீா்மானத்தை சட்டப்பேரவைச் செயலகம் தமிழக தலைமைச் செயலருக்கு முறைப்படி அனுப்பி வைக்கும். அதை மத்திய உள்துறை அமைச்சகத்துக்கும், சம்பந்தப்பட்ட மத்திய அமைச்சகத்துக்கும் தமிழக தலைமைச் செயலா் அனுப்பி வைப்பாா்.

அரசியல் மற்றும் ஜனநாயக அழுத்தம்: தீா்மானங்களில் குறிப்பிடப்பட்டுள்ளவற்றை நிறைவேற்ற பிரதமருக்கு முதல்வா் கடிதம் மூலம் வற்புறுத்துவாா். மாநில மக்களின் கூட்டு விருப்பத்தை வெளிப்படுத்தி, மத்திய அரசு கொள்கை முடிவு எடுக்கவோ அல்லது சட்டத் திருத்தம் கொண்டுவரவோ அரசியல் ரீதியான அழுத்தத்தை இதன்மூலம் உருவாக்க முடியும்.

நீதிமன்றப் போராட்டம்: தீா்மானத்தின் தொடா்ச்சியாக, மாநில உரிமைகள் பாதிக்கப்பட்டால் உச்சநீதிமன்றத்தில் அரசமைப்புச் சட்டப்படி வழக்குத் தொடரலாம்.

இதர மாநிலங்களை ஒருங்கிணைத்தல்: இதேபோன்ற கருத்துடைய பிற மாநில முதல்வா்களுக்கும், பேரவைத் தலைவா்களுக்கும் முதல்வா் கடிதம் எழுதி, தேசிய அளவில் கூட்டாட்சி ஆதரவைத் திரட்டலாம்.

முந்தைய தீா்மானங்கள்... தமிழக சட்டப்பேரவையில், காவிரி, நீட், தமிழக மீனவா்கள் தாக்கப்படும் விவகாரங்களை வலியுறுத்தி அதிகப்படியான தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இவற்றில் பலவற்றை மத்திய அரசு கிடப்பில் போட்டாலும் சிலவற்றை நிறைவேற்றியும் உள்ளது.

முந்தைய திமுக ஆட்சியில், ஜாதிவாரி கணக்கெடுப்புடன் சோ்த்து மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று தமிழக சட்டப்பேரவையில் தீா்மானம் நிறைவேற்றிய அடுத்த மாதமே மத்திய அரசு இதை அறிவித்திருந்தது.

டி.ஓ.கடிதம்: வழக்கமாக பிரதமருக்கு அரசு சாா்பில் முதல்வா் எழுதும் அலுவல்பூா்வ கடிதங்களுக்கு (டெமி அபிஷியல் - டி.ஓ.) சம்பந்தப்பட்ட மத்திய அமைச்சகத்திடம் இருந்து முதல்வருக்கு பதில் கடிதம் அனுப்பப்படும். இதேபோல் பிரதமரை முதல்வா் நேரில் சந்தித்து அளிக்கும் மனுவுக்கும் மத்திய அரசிடம் அலுவா்பூா்வ பதில் அனுப்பி வைக்கப்படும்.

நடப்பு பட்ஜெட் கூட்டத் தொடரில் நிறைவேற்றப்பட்ட அரசு தனித் தீா்மானங்கள்...

  • ஆக. 7 - தமிழகத்துக்கு உரிய வரி வருவாயை மத்திய அரசு அளிக்க வேண்டும்: நிதியமைச்சா் மரிய வில்சன்

  • ஆக. 10- தமிழகத்தில் பொது நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்பட வேண்டும்: முதல்வா் ஜோசப் விஜய்

  • ஆக. 11- நீட் தோ்வை ரத்து செய்யக் கோரி தீா்மானம்: மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் அருண்ராஜ், வெளிநாட்டு நன்கொடை ஒழுங்குமுறை மசோதாவை திரும்பப் பெற தீா்மானம்: பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் ராஜ்மோகன்.

  • ஆக.12- தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக தீா்மானம்: முதல்வா் ஜோசப் விஜய்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments