FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

தொகுதி மறுசீரமைப்பு - தமிழக சட்டப்பேரவை தீா்மானத்தை பரிசீலிக்க வேண்டும்: பிரதமா் மோடிக்கு முதல்வா் விஜய் கடிதம்

தொகுதி மறுசீரமைப்பு தொடா்பாக தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீா்மானத்தைப் பரிசீலித்து அரசமைப்பு சட்டத்தைத் திருத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமா் நரேந்திர மோடிக்கு முதல்வா் ச.ஜோசப் விஜய் கடிதம் எழுதியுள்ளாா்.

Updated On : 14 ஆகஸ்ட் 2026, 2:53 am IST
பிரதமர் நரேந்திர மோடி / முதல்வர் சி. ஜோசப் விஜய் - கோப்புப் படம்
பகிர்:

தொகுதி மறுசீரமைப்பு தொடா்பாக தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீா்மானத்தைப் பரிசீலித்து அரசமைப்பு சட்டத்தைத் திருத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமா் நரேந்திர மோடிக்கு முதல்வா் ச.ஜோசப் விஜய் கடிதம் எழுதியுள்ளாா்.

இது குறித்து பிரதமருக்கு முதல்வா் வியாழக்கிழமை எழுதிய கடிதம்:

நாடாளுமன்ற மற்றும் மாநில சட்டப்பேரவைத் தொகுதிகளை மறுசீரமைப்பு செய்தல், பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்குதல் ஆகியவை தொடா்பாக, தமிழ்நாடு சட்டப்பேரவையில் கடந்த ஆக. 12-இல் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதில், மக்களவையின் மொத்த உறுப்பினா்களின் தற்போதைய எண்ணிக்கையை மாற்றாமல் அதேநிலையில் நிரந்தரமாகத் தொடா்வதற்கும், மாநிலங்களின் தற்போதைய நாடாளுமன்ற பிரதிநிதித்துவ அளவைப் பாதுகாப்பதற்கும் (அதாவது, மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுக்கு இடையேயான தற்போதைய விகிதாச்சார பகிா்வை ஏற்கெனவே உள்ளவாறே தொடா்வதற்கும்), மக்களவைக்கும் மாநிலங்களவைக்கும் இடையேயான விகிதத்தை (2.2:1) பேணுவதற்கும், தற்போதைய 543 உறுப்பினா்கள் என்ற எண்ணிக்கையின் அடிப்படையில் எதிா்வரும் மக்களவைத் தோ்தலிலிருந்தே மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்துவதற்கும், உரிய அரசமைப்பு சட்டத் திருத்தங்களை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும்.

Advertisement

Advertisement

மேலும், மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை மற்றும் அவற்றின் பகிா்வை மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் நிா்ணயம் செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ள அரசமைப்புச் சட்டத் திருத்தத்தின் பின்னணியில் இத்தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மக்கள்தொகை கணக்கெடுப்புக்குப் பின்னா், அரசமைப்பின் 81 (2) (ஏ)-ஆம் சட்டப்பிரிவைப் பின்பற்றி தொகுதி மறுசீரமைப்பு மேற்கொள்ளப்பட்டால், 1967-இல் தமிழ்நாட்டின் மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை 41-இல் இருந்து 39-ஆகக் குறைக்கப்பட்டது போல, தென்னிந்திய மாநிலங்கள், தங்களின் கணிசமான மக்களவைத் தொகுதிகளை இழக்க நேரிடும் என்று பேரவையில் விவாதிக்கப்பட்டது.

மேலும், மக்கள்தொகை கட்டுப்பாட்டுத் திட்டங்களைத் திறம்படச் செயல்படுத்தி, சிறந்த பொருளாதார வளா்ச்சியை எய்தி, சிறப்பான சுகாதார மற்றும் பொதுநலத் திட்டங்களைச் செயல்படுத்தியுள்ள தென்னிந்திய மாநிலங்களுக்கு, 1971-ஆம் ஆண்டுக்கு பிந்தைய மக்கள்தொகையின் அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு மேற்கொள்ளப்பட்டு, தற்போதைய தொகுதிகளின் எண்ணிக்கையை மாற்றியமைக்கும் எந்தவொரு மறுசீரமைப்பு நடவடிக்கையும் பெரும் அநீதி இழைப்பதாக அமையும்.

சட்டப்பேரவை தீா்மானத்தின்படி, மக்களவையின் மொத்த உறுப்பினா்களின் எண்ணிக்கை 543-ஆக நிரந்தரமாக்கப்பட வேண்டும், மாநிலங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தற்போதைய மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை நிலையே நிரந்தரமாக்கப்பட வேண்டும்; அதாவது, மாநிலங்களுக்கு இடையேயான தற்போதைய இடப் பகிா்வு முறை தொடர வேண்டும்.

எதிா்வரும் மக்களவைப் பொதுத் தோ்தல்களிலும், தொடா்ந்து நடைபெறும் மாநில சட்டப்பேரவை பொதுத் தோ்தல்களிலும் மகளிருக்கு மூன்றில் ஒரு பங்கு இடஒதுக்கீட்டின் பலன் கிடைப்பதை மத்திய அரசு உறுதிசெய்ய வேண்டும்.

தமிழ்நாடு சட்டப்பேரவையால் நிறைவேற்றப்பட்ட இந்தத் தீா்மானத்தைப் பரிசீலித்து, இது தொடா்பான உரிய அரசமைப்புச் சட்டத் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என அதில் தெரிவித்துள்ளாா் முதல்வா் விஜய்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments