FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் எம்.பி. நிதி நிர்வாகம்!

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் எம்.பி. நிதி நிர்வாகம் பற்றி...

1 பிப்ரவரி 2026, 4:42 am IST
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
பகிர்:

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2026-27 நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை பிப்ரவரி 1 (ஞாயிற்றுக்கிழமை) தாக்கல் செய்யவுள்ளார். இது அவர் தொடர்ச்சியாக தாக்கல் செய்யும் ஒன்பதாவது மத்திய நிதிநிலை அறிக்கையாகும். நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்வதில் சாதனை படைத்துள்ள அவர் மாநிலங்களவை உறுப்பினர் என்ற வகையில் தன்னைத் தேர்ந்தெடுத்த கர்நாடக மாநிலத்துக்கு தனது எம்.பி. நிதியை எவ்வாறு பயன்படுத்தியுள்ளார் என்பதை அறிய முற்பட்டோம்.

ஒவ்வொரு முறையும் தனது எம்.பி. தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து பின்தங்கிய மாவட்டத்தில் ஒரு கிராமத்தைத் தேர்வு செய்து அங்கு விவசாயிகளுக்கு அதிகாரமளித்தல் திட்டங்களை நிர்மலா சீதாராமன் செயல்படுத்தி வருகிறார்.

கல்யாண சம்பதா: விவசாயிகளுக்கு அதிகாரமளிக்கும் வகையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் குறிப்பிட்ட விவசாயப் பொருளை அடையாளம் கண்டு, அவற்றை மதிப்புக் கூட்டப்பட்ட பொருள்களாக மேம்படுத்துவதற்கான விற்பனை அடையாளமே 'கல்யாண சம்பதா’ என அழைக்கப்படுகிறது. இந்த முன்முயற்சியின் கீழ் உணவு பதப்படுத்துதல் மற்றும் பயிற்சிப் பிரிவுகளை இயக்குவதற்காக நபார்டு வங்கி மூலம் உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள் தேர்ந்தெடுக்கப்படுகின்றன. அவற்றுடன் இணைந்து தனது எம்.பி. தொகுதி மேம்பாட்டு நிதியை ஆண்டுதோறும் ஒதுக்கி வந்துள்ளார் அமைச்சர் நிர்மலா சீதாராமன்.

Advertisement

Advertisement

ஏழு மாவட்டங்கள்: இதற்காக அவர் தேர்ந்தெடுத்த மாவட்டங்கள்தான் பெல்லாரி, பிதார், சுலபுர்கி, கோப்பல், ராய்ச்சூர், விஜயநகர் மற்றும் யாதகிரி. இதுகுறித்து தில்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் பேசியபோது, ஒவ்வொரு முறையும் மாநிலங்களவைக்கு வெவ்வேறு மாநிலங்களில் இருந்து தேர்வானாலும், தேர்வாகும் மாநிலத்துக்கு ஏதேனும் பயனுள்ள நலன்களை நிறைவேற்றுவதை ஒரு தீர்மானமாகக் கொண்டுள்ளேன். அந்தச் சிந்தனையுடன் தான் கர்நாடகத்தில் 'கல்யாண சம்பதா’ மூலம் மக்களுக்கு உதவி வருகிறேன். திட்ட அறிமுகத்துடன் சேர்த்து, அதன் அமலாக்கத்துக்கு தகுதியான ஆள்களை நியமித்து மேற்பார்வையிடுகிறேன். அதன் செயல்பாட்டை தினந்தோறும் நேரம் ஒதுக்கிக் கண்காணிக்கிறேன் என்றார்.

தலா ரூ.50 லட்சம்: இந்த ஏழு கிராமப்புற பகுதிகளுக்கும் எம்.பி. தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து தலா ரூ.50 லட்சத்தை ஒதுக்கியுள்ளார் நிர்மலா சீதாராமன். பெல்லாரியில் மிளகாய் சாகுபடி, பிதாரில் சோயா பீன்ஸ், கல்புரிகியில் சோளம் சாகுபடி, கோப்பலில் பழங்கள், ராயச்சூரில் பருப்பு வகைகள் பதனிடும் மையங்கள், விஜயநகரத்தில் மதிப்புக்கூடுதல் வேர்க்கடலை தயாரிப்புகள், யாதகிரியில் நிலக்கடலை தயாரிப்பு மையம் நிறுவப்பட்டுள்ளன.

பெல்லாரியில் ரூ. 2.54 கோடி மதிப்பில் மிளகாய் சாகுபடி திட்டம் மூலம் 1,40,263 டன் மிளகாய் சாகுபடி நடக்கிறது. இப்பணியில் 372 பெண்கள் உள்பட மொத்தம் 1,115 பேர் ஈடுபட்டுள்ளனர். அனைவரும் சுய உதவிக் குழு பெண்கள் மற்றும் உள்ளூர் விவசாயிகள்.

பிதாரில் சோயா பீன்ஸ் பதப்படுத்தும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இங்குள்ள பெத்குண்டா கிராமத்தில் விவசாயிகள் பயிற்சி மற்றும் பொதுவசதி நிலையத்தை நிறுவ அமைச்சரின் எம்.பி. தொகுதி நிதி பயன்படுத்தப்பட்டுள்ளது. சோயா பதப்படுத்தும் நிலையத்தில் சோயா பன்னீர், சுவையூட்டப்பட்ட சோயா பால், சோயா மாவு போன்றவை தயாரிக்கப்பட்டு சந்தையில் விற்கப்படுகின்றன. உள்ளூரில் 475 விவசாயிகள் நேரடியாகவும் கமல்நகர் வட்டத்தில் 21 ஆயிரத்துக்கும் அதிகமானோர் மறைமுகமாகவும் பலன் பெறுகின்றனர்.

கலபுர்கியில் சோளம் பதப்படுத்தும் திட்டத்தின் கீழ் 300 பெண்கள் உள்ளிட்ட உழவர் அமைப்பின் ஆயிரம் உறுப்பினர்கள் சோளம் உற்பத்தி, சாகுபடி மற்றும் விநியோகப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். சுத்திகரிக்கப்பட்ட சோளம், சோள மாவு, சோளப்பொரி போன்றவை இவர்களின் குறிப்பிடத்தக்க தயாரிப்புகளாகும்.

கோப்பலின் மெதங்கல் கிராமத்தில் பழங்கள் பதப்படுத்தும் நிலையம் நிறுவப்பட்டுள்ளது. 'இந்த முன்முயற்சி, பிராந்தியத்தின் சமூக - பொருளாதார நிலப்பரப்பை மாற்றியமைப்பதுடன் எல்லைகளுக்கு அப்பாற்பட்ட நிலையான வளர்ச்சி, அதிகாரமளித்தல் மற்றும் செழிப்புக்கான ஓர் உந்துசக்தியாக விளங்குகிறது என்கிறார் அமைச்சர் நிர்மலா சீதாராமன்.

ராய்ச்சூரில் 14 பருப்பு ஆலைகள், வேளாண் விளைபொருள் சந்தைக் குழுக்கள் மற்றும் உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள் ஆகியவை அமைச்சரின் நிதியுதவி மூலம் இயங்குகின்றன. இவற்றின் உதவியுடன் தயாரிக்கப்படும் பதப்படுத்தப்படாத பருப்பு வகைகள், பிராண்டட் மற்றும் நீண்ட நாள்களுக்கு கெட்டுப்போகாத பொருள்களாக மேம்படுத்தப்படுகின்றன.

விஜயநகரத்தின் குட்லிகி வட்டம் தென்னிந்தியாவின் மிகவும் வறண்ட பகுதிகளில் ஒன்று. அமைச்சரின் நிதியுதவி மூலம் இங்கு வேர்க்கடலையில் இருந்து வேர்க்கடலை வெண்ணெய், உப்பு வேர்க்கடலை மற்றும் கடலை மிட்டாய் போன்றவற்றைத் தயாரிக்கும் மையம் நிறுவப்பட்டுள்ளது. இதன்மூலம் 575 விவசாயிகள் நேரடியாகவும், 1,500-க்கும் மேற்பட்ட விவசாயிகள் மறைமுகமாகவும் பயனடைகின்றனர்.

யாதகிரியின் குர்மிட்சுல் வட்டம் பத்தேபள்ளி கிராமத்தில் நிலக்கடலை பதப்படுத்துதல் விவசாயிகள் பயிற்சி மற்றும் பொது வசதி மையம் பத்தேபள்ளி மகளிர் உழவர் உற்பத்தியாளர் அமைப்பு மூலம் செயல்படுத்தப்பட்டு விவசாயிகளுக்கு வருவாய்க்கான வழிகள் உருவாக்கப்பட்டுள்ளன. யாதகிரியில் மூலப் பொருள்களை உயர்மதிப்புக் கூட்டப்பட்ட பொருள்களாக மாற்றுவதன் மூலம், விவசாயிகளின் வருவாய் உயர்கிறது. பெண் தொழில் முனைவோர் ஊக்குவிக்கப்படுகின்றனர்' என்கிறார் அமைச்சர் நிர்மலா சீதாராமன்.

summary

Finance Minister Nirmala Sitharaman's MP fund management!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments