ஜவ்வாது மலையில் பூக்கும் கல்விச் சோலை! விதையாகும் வேலூர் இளைஞர்!
ஜவ்வாது மலைப்பகுதியில் வாழும் பழங்குடியினக் குழந்தைகளுக்கு உதவும் தன்னார்வ இளைஞர் பற்றி...
வேலூர் மாவட்டம், ஜவ்வாது மலைப்பகுதியில் வாழும் பழங்குடியினக் குழந்தைகளின் வாழ்வில் ஒளியேற்றி வரும் தன்னார்வல இளைஞர் ஒருவர், பிறந்தநாள் கொண்டாட்டங்கள், கல்வி உபகரணங்கள் மூலம், பல மலைக் கிராமங்களில் பள்ளிக்குச் செல்லும் மாணவர்களின் வருகைப் பதிவையும் கணிசமாக உயர்த்தியுள்ளார்.
அணைக்கட்டு வட்டம் பாலம்பட்டு, பீஞ்சமந்தை, அல்லேரி உள்ளிட்ட மலைக் கிராமங்களில் சுமார் 500-க்கும் மேற்பட்ட பழங்குடியின மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். சில ஆண்டுகளுக்கு முன்பு வரை, இந்த மலைக்கிராமங்களைச் சேர்ந்த குழந்தைகளுக்குத் தங்களின் பிறந்த தேதிகூட சரியாகத் தெரியாது. மழைக் காலங்களையும், பண்டிகைகளையும் வைத்தே அவர்களின் வயது கணக்கிடப்பட்டு வந்தது.
ஆனால், இன்று அந்தக் குழந்தைகளின் நிலை அடியோடு மாறியுள்ளது. இதற்கு முக்கியக் காரணம், வேலூர் காட்பாடியைச் சேர்ந்த 42 வயதான சமூக ஆர்வலர் டி. கிரிதரன் முன்னெடுத்துள்ள அளப்பரிய முயற்சிகள்தான். "செப்ஸ் ப்ராஜெக்ட்ஸ் இந்தியா" என்ற தொண்டு நிறுவனம் அணைக்கட்டு அருகே ஜவ்வாது மலைத்தொடரிலுள்ள குக்கிராமங்களில் பள்ளி இடைநின்ற மாணவ, மாணவிகளை கண்டறிந்து அவர்களுக்கு அடிப்படை கல்வி அளித்து மீண்டும் பள்ளிகளில் சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.
Advertisement
Advertisement
இந்த அமைப்பின் நிர்வாகக் குழு உறுப்பினரான கிரிதரன், மலைப்பகுதியில் இயங்கும் 10-க்கும் மேற்பட்ட தொடக்கப் பள்ளிகளுக்குத் தேவையான கல்வி உபகரணங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறார். ஆசிரியர்களிடம் முன் கூட்டியே விவரங்களைப் பெற்று, ஒவ்வொரு மாதமும் பிறந்தநாள் காணும் மாணவர்களுக்குப் புத்தாடை, கேக், சில நேரங்களில் இறைச்சி விருந்துடன் பள்ளியிலேயே பிறந்தநாளைக் கொண்டாடி அவர்களை மகிழ்விக்கிறார்.
தண்ணீர் பாட்டில்கள், டிபன் பாக்ஸ்கள், நோட்டுப் புத்தகங்கள், வண்ணப் பென்சில்கள் மற்றும் தரையில் அமர்ந்து எழுத மடிக்கக்கூடிய மேசைகள் போன்ற கல்வி உபகரணங்களை வாங்கிக்கொண்டு, குண்டும் குழியுமான ஆபத்தான மண் பாதைகளில் ஒவ்வொரு வாரமும் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாகப் பயணித்து மாணவர்களிடம் நேரில் வழங்குகிறார்.
"சமவெளிப் பகுதி மாணவர்களுக்கு எளிதாகக் கிடைக்கும் இந்தப் பொருட்கள், பல கிலோமீட்டர் மலைப்பாதையைக் கடந்து வாழும் மலைவாழ் குழந்தைகளுக்குப் பெரும் கனவாகும். அவர்களுக்கென சொந்தமாக ஒரு பொருள் கிடைப்பதே அவர்களுக்குப் புதிய உணர்வாகும்” என்கிறார் கிரிதரன்.
கடந்த 7 ஆண்டுகளாக இவர் செய்து வரும் இந்தத் தொய்வில்லாத பணியால், பெற்றோர்களும் தங்கள் குழந்தைகளின் பிறந்தநாளைத் தங்களால் இயன்ற அளவுக்குக் கொண்டாடத் தொடங்கியுள்ளனர்.
இதுகுறித்து பட்டிக்கொல்லை பள்ளி ஆசிரியை பி. ஜானகி கூறுகையில், "கிரிதரன் போன்றோரின் தொடர் முயற்சியால், மாணவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் பள்ளிக்கு வருகின்றனர். இதனால், கடந்த 6 ஆண்டுகளில் எங்கள் பள்ளியின் வருகைப்பதிவு 30 மாணவர்களில் இருந்து 100-ஐக் கடந்து மூன்று மடங்காக அதிகரித்துள்ளது” என்றார்.
கரோனா பேரிடர் காலத்திலும்கூட கிரிதரன் தனது சொந்த வாகனத்தில் மலைக்குச் சென்று அத்தியாவசியப் பொருள்களை வழங்கியுள்ளார். இவரது வழிகாட்டுதல் மற்றும் உதவியால் சின்னூர் கிராமத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவர் நர்சிங் படித்து, தற்போது கொல்கத்தா எய்ம்ஸ் மருத்துவமனையில் செவிலியராகப் பணியாற்றி வருகிறார். இவரை முன்மாதிரியாகக் கொண்டு பல மலைவாழ் மாணவர்கள் உயர்கல்வியை நோக்கி அடியெடுத்து வைத்துள்ளனர்.
கிரிதரனின் இந்தச் சேவையால் ஈர்க்கப்பட்ட வேலூரைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் சிலரும், தற்போது கல்வி உபகரணங்களைச் சுமந்து கொண்டு மலைக்குச் சென்று, குழந்தைகளுடன் நேரம் செலவிடுவதைத் தற்போது வழக்கமாக்கிக் கொண்டுள்ளனர். பெரும்பாலான நிதியைத் தனது சொந்த வருமானத்திலிருந்தும், சில நன்கொடையாளர்களிடமிருந்தும் திரட்டி இச்சேவையைச் செய்து வருகிறார் கிரிதரன்.
விஷுவல் கிராபிக்ஸ் டிசைனர் மற்றும் ஃப்ரீலான்ஸ் அனிமேட்டராகப் பணிபுரியும் கிரிதரன், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கும் உதவி வருகிறார். "இந்த மலைவாழ் குழந்தைகளுக்குத் தொலைநோக்கி மூலம் நட்சத்திரங்களைக் காட்டி, இரவு நேர வானியல் நிகழ்வுகளை ஏற்பாடு செய்ய வேண்டும் என்பதே எனது அடுத்த இலக்கு. புதிய விஷயங்களைப் பார்க்கும்போதுதான் அவர்களின் சிந்தனை விசாலமாகும். வானில் ஒளிரும் கோடிக்கணக்கான நட்சத்திரங்களைப் போல, புவியியல் தடைகளைத் தாண்டி இந்த மலைவாழ் குழந்தைகளும் தங்கள் வாழ்வில் வானளாவ உயர முடியும் என்பதைக் காட்டவே நான் விரும்புகிறேன்” என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் கிரிதரன்.
A blossoming garden of education on the Jawadhu Hills - A Vellore youth sows the seed
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.