FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தற்போதைய செய்திகள்

விமான சாகச நிகழ்ச்சி கூட்ட நெரிசலில் சிக்கி 5 பேர் பலி: இபிஎஸ் கண்டனம்

சென்னை மெரீனாவில் நடைபெற்ற விமானப் படையின் சாகச நிகழ்ச்சி கூட்ட நெரிசலால் 5 பேர் உயிரிழந்ததாக வரும் செய்தி அதிர்ச்சியும், மிகுந்த வேதனையும் அளிப்பதாக எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Updated On : 6 அக்டோபர் 2024, 9:46 pm IST
விமானப் படையின் சாகச நிகழ்ச்சி கூட்ட நெரிசலால் 5 பேர் உயிரிழந்தற்கு வேதனை தெரிவித்துள்ள எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி .
பகிர்:

சென்னை: சென்னை மெரீனாவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விமானப் படையின் சாகச நிகழ்ச்சியை பாா்வையிட லட்சக்கணக்கான மக்கள் ஒரே இடத்தில் திரண்டதால் நேரிட்ட கூட்ட நெரிசலாலும், வெயிலால் ஏற்பட்ட நீா்ச்சத்து இழப்பு காரணமாக 5 பேர் உயிரிழந்ததாக வரும் செய்தி அதிர்ச்சியும், மிகுந்த வேதனையும் அளிப்பதாக எதிர்க்கட்சி தலைவரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில், இந்திய பாதுகாப்புத் துறையின் முக்கிய அங்கங்களுள் ஒன்றான இந்திய விமானப் படையின் 92 ஆவது துவக்க நாள் விழாவை முன்னிட்டு, விமானப் படையின் தீரத்தை பறைசாற்றும் வண்ணம் சென்னை மெரீனாவில் ஞாயிற்றுக்கிழமை வான் சாகச நிகழ்ச்சி அரங்கேறியது.

இதற்கான அறிவிப்பு முன்கூட்டியே வெளியான நிலையில், லட்சக்கணக்கான மக்கள் பார்வையிடக் கூடுவர் என்பது அறிந்து, போக்குவரத்து, அடிப்படை வசதிகள் உள்ளிட்ட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக தமிழ்நாடு அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

Advertisement

Advertisement

இருப்பினும், இன்றைய நிகழ்ச்சியில் நிர்வாக ரீதியிலான ஏற்பாடுகளும், கூட்டத்தையும்- போக்குவரத்தையும் ஒழுங்கு படுத்துவதற்கு காவல்துறையினரும் போதிய அளவில் இல்லாததால், மக்கள் கடும் கூட்ட நெரிசலில் சிக்கி, குடிநீர் கூட கிடைக்காத நிலை ஏற்பட்டு, மேலும் வெயிலின் தாக்கத்தால் பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அதில் இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளதாகவும் வரும் செய்திகள் அதிர்ச்சியும், மிகுந்த வேதனையும் அளிக்கின்றன.

உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலும் வருத்தங்களும்.

இதுபோன்ற முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்வைக் கூட முறையாக ஒருங்கிணைக்கத் தவறிய நிர்வாகச் சீர்கேடே உருவான திமுக அரசுக்கு கண்டனங்கள்.

இந்தியாவின் பல்வேறு நகரங்களில் ராணுவ விமானப் படையின் தீரத்தை பறைசாற்றும் நிகழ்வுகள் இதுவரையில் சிறப்பாக நடைபெற்று வந்துள்ளன,ஆனால் இன்று தமிழகத்தில் நிகழ்பெற்ற நிகழ்வில் உயிர்சேதம் ஏற்பட்டிருப்பது மிகவும் வருத்தத்துக்குரியது.

இந்நிகழ்வுக்கு முறையான பாதுகாப்பு கொடுக்க தவறிய இந்த மு.க. ஸ்டாலின் அரசுக்கு கடும் கண்டனங்கள் என அவர் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments