FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தற்போதைய செய்திகள்

கூவாகம் கூத்தாண்டவர் திருக்கோயில் சித்திரைத் தேரோட்டம்! ஆயிரக்கணக்கான திருநங்கைகள் பங்கேற்பு!!

கூவாகம் அருள்மிகு கூத்தாண்டவர் சுவாமி திருக்கோயில் சித்திரைப் பெருவிழா தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது குறித்து...

Updated On : 29 ஏப்ரல் 2026, 10:27 am IST
கூவாகம் அருள்மிகு கூத்தாண்டவர் சுவாமி திருக்கோயிலில் புதன்கிழமை நடைபெற்ற சித்திரைப் பெருவிழா தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான திருநங்கைகள், பொதுமக்கள் உள்ளிட்டோர் பங்கேற்று சுவாமி தரிசனம். - டிஎன்எஸ்
பகிர்:

விழுப்புரம் : கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை வட்டம், கூவாகம் அருள்மிகு கூத்தாண்டவர் சுவாமி திருக்கோயில் சித்திரைப் பெருவிழா தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான திருநங்கைகள், பொதுமக்கள் உள்ளிட்டோர் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

திருநங்கைகள் தங்களது குல தெய்வமாகக் கூத்தாண்டவரை கருதி, இந்த கோயிலில் வழிபட்டு வருகின்றனர்.

உலகப் புகழ்பெற்ற இந்த திருக்கோயிலின் சித்திரைப் பெருவிழா கடந்த ஏப்ரல் 14-ஆம் தேதி சாகை வார்த்தலுடன் தொடங்கியது. தொடர்ந்து பந்தலடி தெய்வநாயகம் செட்டியார்தோப்பில் பாரதம் நிகழ்வு ஆரம்பமானது.

Advertisement

Advertisement

இதைத் தொடர்ந்து சந்தனுசரிதம், பீஷ்மர் பிறப்பு, தர்மர், பாஞ்சாலி பிறப்பு, பகாசூரன்வதம், பாஞ்சாலி திருமணம், கூத்தாண்டவர் பிறப்பு, ராஜாசூய யாகம், தெய்வநாயகம் செட்டியார்தோப்பில் வெள்ளிக்கால் நடுதல், கிருஷ்ணன் தூது ஆகிய நிகழ்வுகள் நிகழ்வுகளும், இரவில் சுவாமி புறப்பாடும் நடைபெற்றன.

கூவாகம் அருள்மிகு கூத்தாண்டவர் சுவாமி திருக்கோயிலில் புதன்கிழமை நடைபெற்ற சித்திரைப் பெருவிழா தேரோட்டத்தில் பங்கேற்ற கூட்டத்தினர். - டிஎன்எஸ்

இதைத் தொடர்ந்து ஏப்ரல் 26-ஆம் தேதி -கூத்தாண்டவர் சுவாமிக்கு பாலாலயமும், ஏப்ரல் 27-ஆம் தேதி மாலை கம்பம் நிறுத்தலும் நடைபெற்றது.திருவிழாவின் முக்கிய நிகழ்வாக, செவ்வாய்க்கிழமை (ஏப் 28) மாலை கூவாகம் கூத்தாண்டவர் சன்னதி முன்பு கோயில் பூசாரிகளிடம் திருநங்கைகள் தாலிகட்டிக் கொண்டு, சுவாமி தரிசனம் செய்தனர். மேலும் கோயிலுக்கு வெளியே உள்ள பகுதிகளில் பெரிய அளவிலான சூடங்களை ஏற்றி திருநங்கைகளும், பொதுமக்களும் வழிபாடு செய்தனர். இதைத் தொடர்ந்து திருநங்கைகள் கும்மியடித்து, ஆடி பாடி மகிழ்ந்தனர்.

தொடர்ந்து புதன்கிழமை (ஏப் 29) காலை கோயிலிலிருந்த அரவான் சிரசுவுக்கு முதல் மாலை அணிவிக்கப்பட்டு, வழிபாடு நடத்தப்பட்டது. அதன் பின்னர் அரவான் சிரசு ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. அப்போது திருநங்கைகள் சுற்றி நின்று, கும்மியடித்தனர். தொடர்ந்து சூரைத் தேங்காய்களை திருநங்கைகள் உடைத்து, வழிபாடு செய்தனர்.

இதன் பின்னர், கோயிலின் வல துபுறத்தில் சகடையில் 30 அடி உயரக் கம்பம் நடப்பட்டு, அதில் வைக்கோல்புரி சுற்றப்பட்டது. இது அரவான் திருவுருவம் அமைக்க அடிப்படைப் பணியாகக் கருதப்படும் வழக்கமாகும்.

இதைத் தொடர்ந்து கீரிமேட்டிலிருந்து பக்தர்கள் பூஜை செய்து எடுத்து வந்த அரவானின் புஜங்கள், மார்புப் பதக்கம், நத்தம் கிராமத்திலிருந்து பாதம், கைகள், தொட்டி கிராமத்திலிருந்து மார்பு புஜங்கள், கயிறு, கடையாணி, சிவிலியாங்குளம் கிராமத்திலிருந்து கை, விண்குடை ஆகியவை கொண்டுவரப்பட்டு, வைக்கோல் புரி மீது பொருத்தி, அரவானின் திருவுருவம் அமைக்கப்பட்டது.

சித்திரைத் தேரோட்டம்

இதைத் தொடர்ந்து சுவாமி அரவானுக்கும், கோயிலுக்கு அருகிலுள்ள ஆஞ்சனேய சுவாமிக்கும் மிகப்பெரிய அளவிலான மாலை அணிவிக்கப்பட்டது. இதன் பின்னர் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்ட பின்னர் காலை 9.15 மணிக்கு மேல் தேரோட்டம் தொடங்கியது. இந்து சமய அறநிலையத் துறை அலுவலர்கள், கூவாகம், கூ..தொட்டி, கீரிமேடு, நத்தம் என சுற்றுப்புறக் கிராமங்களைச் சேர்ந்த முக்கியஸ்தர்கள், பொதுமக்கள், திருநங்கைகள் தேர்வடம் பிடித்து இழுத்தனர்.

தேர் புறப்பட்டவுடன் விவசாயிகள் வேண்டுதலின் பேரில், தங்கள் நிலங்களில் விளைந்த காய் கறிகளையும், தானியங்களையும் அரவான் மீது வீசியும், கற்பூரம் ஏற்றியும் வழிபாடு செய்தனர்.

இதுபோல திருநங்கைகள் தேரோடும் வீதிகளில் தேர்வலம் வந்த போது சூரைத் தேங்காய்களை உடைத்து, பெரிய அளவிலான சூடக் கட்டிகளைக் கொளுத்தி, அரவான் பாடல்களைப் பாடி, கும்மியாட்டம் ஆடினர். மேலும் அரவானுக்கு தேங்காய், பழம் வைத்து வழிபாடு செய்தனர்.

தேர் நான்கு ரத வீதிகளின் வழியாக வலம் வந்து, பின்னர் பந்தலடியிலுள்ள அழிகளம் நோக்கிப் புறப்பட்டது. அப்போது ஒப்பாரி வைத்துக் கொண்டு திருநங்கைகள் தேரை பின்தொடர்ந்து சென்றனர்.

அழிகளத்துக்கு தேர் சென்றடைந்த பின்னர், அரவானை களப்பலி கொடுக்கும் நிகழ்வு நடை பெற்றது. அப்போது திருநங்கைகள் தங்கள் தலையில் சூடியிருந்த பூக்களை பிய்த்து எறிந்து, நெற்றியில் வைத்திருந்த குங்குமப் பொட்டை அழித்துக் கொண்டனர்.

பின்னர் பூசாரிகளிடம் சென்று கை வளையல்களை உடைத்து நொறுக்கிக் கொண்டு, கழுத்தில் அணிந்திருந்த தாலியை அகற்றிக் கொண்டனர்.

இதைத் தொடர்ந்து, அங்கிருந்த இந்து சமய அறநிலையத் துறை அலுவலர்களிடம் தங்கத்தாலியை ஒப்படைத்தனர்.

இதன் பின்னர் அருகிலிருந்த விவசாய நிலங்களுக்குச் சென்றுநீராடி, வெள்ளாடை அணிந்து விதவைக் கோலம் பூண்டு திருநங்கைகள் தங்களது சொந்த ஊர்களுக்குப் புறப்பட்டுச் சென்றனர்.

தேரோட்டத்தில் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், திருவண்ணாமலை, சென்னை,திருச்சி, பெரம்பலூர், சேலம், நாமக்கல், புதுக்கோட்டைஎன மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்கள், புதுச்சேரி, கேரளம் , கர்நாடகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த திருநங்கைகள், திருநம்பிகள், பக்தர்கள், பொதுமக்கள் என பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.

தேரோட்டத்தையொட்டி கூவாகம் கூத்தாண்டவர் சுவாமி திருக்கோயில் அருகாமையிலுள்ள பகுதிகள், தேரோடும் வீதிகள், கூவாகம் கிராமத்தின் பல்வேறு பகுதிகளில் மக்கள் சார்பிலும், திருநங்கைகள் சார்பிலும் அன்னதானம் வழங்கப்பட்டது.

கூவாகம் தேரோட்டத்தையொட்டி, விழுப்புரம், திருக்கோவிலூர், உளுந்தூர்பேட்டை போன்ற பல்வேறு பகுதிகளிலிருந்து செவ்வாய்க்கிழமை பிற்பகல் முதல் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன.

கள்ளக்குறிச்சி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் தலைமையில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார், ஊர்க்காவல்படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

மேலும், திருக்கோயில் பகுதிகள், கூவாகம் கிராமத்தின் பல்வேறு பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி, அதன் மூலம் அனைத்து நடவடிக்கைகளையும் போலீஸார் கண்காணித்தனர்.

summary

2026 koowagam koothandavar temple chithirai ...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments