FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் இன்று குடமுழுக்கு

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலின் குடமுழுக்கு 17 ஆண்டுகளுக்குப் பிறகு, வியாழக்கிழமை காலை 7.40 மணி முதல் 8.10 மணிக்குள் நடைபெறுகிறது.

17 செப்டம்பர் 2026, 5:43 am IST
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் இன்று குடமுழுக்கு - Youtube | HR CE
பகிர்:

முளைத்தானை, எல்லார்க்கும் முன்னே தோன்றி

முதிரும் சடைமுடி மேல் முகிழ்வெண்திங்கள்

வளைத்தானை வல் அசுரர் புரங்கள் மூன்றும்

Advertisement

Advertisement

வரைசிலையா வாசுகி மா நாணாக் கோத்துத்

துளைத்தானை சுடு சரத்தால் துவள நீறா

தூ முத்த வெண் முறுவல் உமையோடு ஆடித்

திளைத்தானை தென் கூடல் திரு ஆலவாவாய்ச்

சிவன் அடியே சிந்திக்கப் பெற்றேன் நானே- என்ற திருநாவுக்கரசர் பெருமானின் பாடலில் எல்லார்க்கும் (எல்லா உயிர்களுக்கும், எல்லா சிவலிங்கங்களுக்கும்) முன் தோன்றிய இறைவனை திருவாலவாயில் (மதுரை) காணப்பெற்றேன் எனக் குறிப்பிட்டிருப்பது, இந்தத் தலத்தின் பழமையையும், இந்தத் தலத்தில் உறையும் இறைவன் சிவபெருமானின் ஆன்மிகப் பெருமையையும் உணர்த்துகிறது.

உலகாளும் உமையம்மை தடாதகைப் பிராட்டியாகவும், எல்லாம் வல்ல இறைவன் சிவபெருமான் சுந்தரபாண்டியராகவும், முத்தமிழ்க் கடவுள் முருகப் பெருமான் உக்கிரபாண்டியராகவும் அருளாட்சியும், அரசாட்சியும் செய்த ஒரே திருத்தலம் மதுரை என்பது சிறப்பு.

முன்னொரு காலத்தில் மதுரையை ஆட்சி செய்த மலையத்துவஜ பாண்டியனுக்கு குழந்தையில்லை. இதனால், மன்னர் மிகவும் மனம் வருந்தினார். பின்னர், பிரம்ம தேவரின் அறிவுரைப்படி, மன்னர் மலையத்துவஜ பாண்டியன் தனது மனைவி காஞ்சனமாலையுடன் புத்திரகாமேட்டியாகம் நடத்தினார். இந்த யாகத்தில், உலகாளும் அன்னை உமாதேவி குழந்தையாகத் தோன்றினார். பொற்சித்திரமாகத் தோன்றிய அந்தக் குழந்தையைக் கண்டு அரசனும், அரசியும் எல்லையில்லாப் பேரானந்தம் அடைந்தனர். அதேநேரத்தில், அந்தக் குழந்தைக்கு இருந்த மிகை தனத்தைக் கண்டு அவர்கள் மனம் வருந்தினர்.

அப்போது, 'இந்தக் குழந்தைக்கு தடாதகை எனப் பெயரிடுங்கள், இந்தக் குழந்தை திருமண வயதை அடைந்து தனக்கான கணவனைக் காணும்போது அதன் மிகை தனம் மறையும்' என அசரீரி ஒலித்தது. இதனால் ஆறுதல் அடைந்த மன்னர், அந்தக் குழந்தைக்கு தடாதகை எனப் பெயரிட்டார். கல்வி, கேள்விகளிலும், போர்க்கலைகளிலும் தன்னிகரற்று விளங்கிய இந்தக் குழந்தை பருவ வயதை அடைந்த நிலையில், மன்னர் மலையத்துவஜ பாண்டியன் இயற்கை எய்தினார். பின்னர், தடாதகைப் பிராட்டியார் பாண்டிய நாட்டின் அரசியாகப் பொறுப்பேற்றார். அவரின் செங்கோல் வழுவா ஆட்சியில் நாடு செழிப்படைந்தது. பின்னர், எட்டுத்திக்கிற்கும் அன்னை திக்விஜயம் மேற்கொண்டார். அவரை எதிர்த்தோர் அனைவரும் தோல்விக் கண்டனர்.

ஒரு நாள் பெரும்படையுடன் தடாதகைப் பிராட்டியார் கயிலையம்பதியை அடைந்தார். அங்கு, பூதப் படைகளையும், நந்தி தேவரின் படைகளையும் அன்னை தோல்வியுறச் செய்தார். இதையறிந்த இறைவன் சிவபெருமான் போர்க் கோலம் பூண்டு அன்னை தடாதகையின் முன் எழுந்தருளினார். சிவபெருமானைக் கண்ட தடாதகைப் பிராட்டியார் பெண்களுக்கே உரித்தான அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என்ற நால்வகை நெறிகளையும் உணர்ந்து, நாணித் தலை குனிந்தாள். அப்போது, தடாதகைப் பிராட்டியின் மிகை தனம் மறைந்தது. இதனால், எதிரே இருக்கும் சிவபெருமானே தனது கணவர் என்பதை அன்னை உணர்ந்தார்.

எல்லாம் வல்ல இறைவன் சிவபெருமான், 'நீ மதுரைக்கு செல் இன்றிலிருந்து எட்டாம் நாள் நாம் அங்கு வந்து உன்னை மணம் புரிவோம்' என்று அன்னைக்கு அருளினார். இதன்படியே, இறைவன் சிவபெருமான் தேவர்களும், முனிவர்களும் புடைசூழ சோமசுந்தரராக மணக்கோலம் கொண்டு மதுரைக்கு எழுந்தருளி, அன்னை தடாதகைப் பிராட்டியை மணம் முடித்தார். பின்னர், சுந்தரபாண்டியன் என்ற திருநாமத்துடன் இறைவன் சிவபெருமானும், மீனாட்சி என்ற திருநாமத்துடன் அன்னை தடாதகைப் பிராட்டியும் ஆட்சி செய்தனர் என தலபுராணத்தில் குறிப்பிடப்படுகிறது.

நாகம் நிர்ணயித்த நகரம்...

முற்காலத்தில் குலசேகரப்பாண்டியன் என்ற மன்னர் மணவூரை தலைநகராகக் கொண்டு பாண்டிய நாட்டை ஆட்சி செய்தார். அப்போது, மணவூரில் வாழ்ந்த தனஞ்செயன் என்ற வணிகர் வெளியூர் சென்றுவிட்டு, ஒரு கடம்பவனம் வழியாகத் தன் ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தார். ஊரை அடையும் முன்பாக இரவு கூடிவிட்டதால், காட்டின் நடுவில் தங்க நேரிட்டது. அங்கே ஒரு குளம் இருந்தது. அதனருகே ஒரு சுயம்புலிங்கம் ஜோதிர்மயமாக ஒளிர்ந்தது. இதைக் கண்ட தனஞ்செயன், அங்கிருந்த குளத்தில் நீராடி சிவலிங்கத்தை வணங்கி இளைப்பாறினார். நள்ளிரவில் வானுலக தேவர்கள் வந்து, அங்கிருந்த சிவலிங்கத்துக்கு பூஜைகள் செய்து வழிபட்டதை தனஞ்செயன் கண்டு மெய்சிலிர்த்தார்.

மறுநாள் மணவூர் சென்றதும் மன்னன் குலசேகரப்பாண்டியனைச் சந்தித்து முதல் நாள் இரவில் கடம்பவனத்தில் தான் கண்ட காட்சிகளை தனஞ்செயன் விவரித்தார். மன்னன், மறுநாள் பொழுது விடிந்ததும் கடம்பவனம் சென்று அந்தச் சிவலிங்கத்தை தரிசிக்க வேண்டும் என விருப்பம் கொண்டு, கண்ணுறங்கினார். அப்போது, குலசேகரப்பாண்டியனின் கனவில் சித்தர் வடிவில் தோன்றிய சிவபெருமான், 'மன்னா யாம் எழுந்தருளியிருக்கும் கடம்பவனத்தைத் திருத்தி நாடாக்குக' எனக் கூறி மறைந்தார்.

இறைக்கட்டளையை ஏற்றுச் செயல்படுத்த மன்னர் தன் பரிவாரங்களுடன் கடம்பவனம் புறப்பட்டார். இதனிடையே, கடம்பவனத்தில் தனக்கான எல்லையை வகுக்க திருவுளம் கொண்ட இறைவன் சிவபெருமான் தன்னுடைய அணிகலன்களில் ஒன்றான பாம்பை எடுத்துவிட அது, வட்ட வடிவில் தன் உடலை சுருட்டி, வாலை வாயால் கவ்வி மதுரையின் நகர எல்லையை நிர்ணயித்தது. பின்னர், குலசேகரப் பாண்டியன் கடம்பவனத்தைத் திருத்தி நகரையும், சிவாலயத்தையும் அமைத்தார். நாகம் தன் வாலை வாயால் கவ்வி எல்லையை நிர்ணயித்ததால் இந்தத் தலத்துக்கு ஆலவாய் எனப் பெயர் ஏற்பட்டதாகக் குறிப்பிடப்படுகிறது.

திருஆலவாய், கடம்பவனம், கூடல்நகர், நான்மாடக்கூடல், கன்னிபுரீசம், சிவராஜதானி, சிவநகரம், சமட்டிவிச்சாபுரம், சீவன்முத்திபுரம் உள்ளிட்ட புராணப் பெயர்களைக் கொண்ட மதுரையில் அமைந்துள்ள அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் காலப் பழைமையும், சாலப் பெருமைகளையும் கொண்டது.

காணக்கிடைக்காத காட்சி...

இங்கு, இறைவன் சிவபெருமான் சுயம்பு மூர்த்தியாக சொக்கநாதர், சுந்தரேசுவரர் என்ற திருநாமங்களுடன் காட்சியளிக்கிறார். பொதுவாக சிவலிங்கங்கள் இரு வகைப்படும். இதில், பெரும்பாலான கோயில்களில் உள்ள சிவலிங்கத் திருமேனி வியட்டிலிங்கமாகவே இருக்கும். ஆனால், மதுரை சுந்தரேசுவரர் கோயில் மூலவரின் சிவலிங்கத் திருமேனி ஒருங்கே திரண்ட ஆற்றலைக் கொண்ட சமட்டிலிங்கம் எனக் குறிப்பிடப்படுகிறது.

இந்தத் தலத்தில் அன்னை மீனாட்சி அம்மன் மரகத திருமேனியாக எழுந்தருளியுள்ளார். மீனாட்சி அம்மன் தனது வலது கரத்தில் மலர்ச் செண்டு ஏந்தியும், இடக்கரத்தைத் தொங்கவிட்ட நிலையிலும் காட்சியளிக்கிறார். அம்மனின் வலது தோளில் பச்சைக் கிளி அமர்ந்துள்ளது. இடப்பக்கம் சரிந்த கொண்டையுடன், அருள்பொழியும் கண்களுடன் அன்னை காட்சியளிக்கிறார். இவை, வேறெங்கும் காணக்கிடைக்காத அற்புத ஆன்மிகக் காட்சிகளாகும்.

காசிக்குப்போக நினைத்து காலடி எடுத்து வைத்தாலும், காளஹஸ்தியில் பூஜை செய்தாலும், சிதம்பரத்தை தரிசித்தாலும் மோட்சம் கிடைக்கும் என்பது ஐதீகம். அந்த வகையில், மதுரையை நினைத்தாலோ, மதுரையில் உறையும் சிவபெருமானின் ஆன்மிகப் பெருமைகளைக் கேட்டாலோ எல்லா பாவங்களும் விலகி முக்தி கிடைக்கும் என ஹாலாஸ்ய மகாத்மியம் நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஸ்ரீராமர், லட்சுமணர், இந்திரன், வருணன் முதலான கடவுளர்களும், ரிஷி முனிவர்களும் வழிபட்ட தலம், இறைவன் சிவபெருமான் தனது 64 திருவிளையாடல்களையும் நிகழ்த்திக் காட்டிய தலம் என எண்ணிலடங்கா சிறப்புகளைக் கொண்டது இந்தத் தலம்.சமயக் குரவர்கள் நால்வரில் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், மாணிக்கவாசகப் பெருமான் ஆகிய மூவராலும், சேக்கிழார், பரஞ்சோதி முனிவர், குமரகுருபரர், அருணகிரிநாதர் உள்ளிட்ட ஆன்றோர் பெருமக்களாலும் போற்றிப் பாடப்பட்டது.

கடந்த காலங்களில் குடமுழுக்கு...

வரையறுக்க முடியாத வரலாற்றுத் தொன்மையைக் கொண்ட மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலின் கடந்த கால குடமுழுக்கு விழாக்கள் குறித்த உறுதியான குறிப்புகள் இல்லை. இருப்பினும், ஒரு சில வரலாற்றுக் குறிப்புகள் மூலம் 1481-ஆம் ஆண்டில் மீனாட்சி அம்மன் சந்நிதிக்கு மட்டும் குடமுழுக்கு நடைபெற்றதாகவும், 1708- ஆம் ஆண்டு சித்திரை 31-ஆம் தேதி சொக்கநாதப் பெருமான் சந்நிதிக்கு மட்டும் குடமுழுக்கு நடைபெற்றதாகவும் குறிப்பிடப்படுகிறது.

கி.பி. 1877-இல் தை மாதம் 27-ஆம் தேதியன்றும், 1923-இல் ஆனி மாதம் 17-ஆம் தேதியன்றும், 1963-இல் ஜூன் 28-ஆம் தேதியன்றும் இந்தக் கோயிலுக்குக் குடமுழுக்கு விழாக்கள் நடைபெற்றன. இதில், 1963-இல் நடைபெற்ற குடமுழுக்கில் காஞ்சி மகாபெரியவர் பங்கேற்றதாகக் குறிப்பிடப்படுகிறது. இதையடுத்து, 1974-இல் ஜூன் 26-ஆம் தேதியன்றும், 1995-இல் ஜூலை 7-ஆம் தேதியன்றும், 2009-இல் ஏப். 8-ஆம் தேதியன்றும் இந்தக் கோயிலுக்குக் குடமுழுக்கு நடைபெற்றது.

12 ஆண்டுகளுக்கு ஒரு முறை குடமுழுக்கு நடைபெற வேண்டும் என்ற நிலையில், கோயிலின் உள்ளே உள்ள வீரவசந்தராயர் மண்டபத்தில் 2018-ஆம் ஆண்டு பிப். 2-ஆம் தேதி தீ விபத்து ஏற்பட்டது. இதில் சேதமடைந்த மண்டபத்தை பழைமை மாறாமல் மீட்டெடுத்த பிறகு கோயிலுக்குக் குடமுழுக்கு நடத்துவதென தீர்மானிக்கப்பட்டு, வீரவசந்தராயர் மண்டப சீரமைப்புப் பணிகள் நடைபெற்றன.

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் வட்டம், பட்டணம் கிராமத்திலிருந்து கொண்டு வரப்பட்ட கற்களைக் கொண்டு 79 தூண்கள், போதியல், சிம்மம், உத்திரம், சிம்ம பீடம், கபோதகம், கொடிவலை, நாடக சட்டம், தூண்கள், பாவுக்கற்கள் வடிக்கும் பணிகள் நடைபெற்றன. ரூ. 38.3 கோடி செலவில் மதுரை கூடல்செங்குளத்தில் உள்ள கோயிலுக்குச் சொந்தமான சிற்பக் கூடத்தில் நடைபெற்ற இந்தப் பணிகள் அண்மையில் நிறைவடைந்தன. இதையடுத்து, கடந்த ஆக. 30- ஆம் தேதி சிறப்பு பூஜைகளுடன் வீரவசந்தராயர் மண்டபம் திறக்கப்பட்டது.

பரிவார மூர்த்திகளுக்கு நடைபெற்ற குடமுழுக்கு

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலின் மகா குடமுழுக்கையொட்டி, பரிவார மூர்த்தி சந்நிதிகளில் புதன்கிழமை குடமுழுக்கு நடைபெற்றது.

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலின் குடமுழுக்கு 17 ஆண்டுகளுக்குப் பிறகு, வியாழக்கிழமை (செப். 17) காலை 7.40 மணி முதல் 8.10 மணிக்குள் நடைபெறுகிறது.

இதையொட்டி, குடமுழுக்கு விழா யாக பூஜைகள் கடந்த 6-ஆம் தேதி தொடங்கி நடைபெறுகின்றன. 183 குண்டங்கள் அமைக்கப்பட்டு கடந்த 11-ஆம் தேதி முதல் யாக பூஜைகள் நடைபெறுகின்றன.

கோயில் பிரகாரத்தில் உள்ள பரிவார மூர்த்திகளுக்கான குடமுழுக்கு புதன்கிழமை நடைபெற்றது.

பத்தாம் கால யாக பூஜையின் நிறைவில் காலை 5 மணி அளவில் கடம் புறப்பாடும், மகா தீபாராதனையும் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, மேளதாள வாத்தியங்களும், வேத மந்திரங்களும் முழங்க 414 பரிவார மூர்த்திகளின் சந்நிதிகள், கொடிமரங்களுக்கு திருக்குடமுழுக்கு நடைபெற்றது. காலை 5 மணி முதல் 6 மணிக்குள் இந்தக் குடமுழுக்கு நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் தருமபுரம் ஆதீன குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள், முக்கியப் பிரமுகர்கள், பக்தர்கள் கலந்து கொண்டனர்.

பரிவார மூர்த்திகளுக்கு நடைபெற்ற குடமுழுக்கு

ஏஐ தொழில்நுட்ப கண்காணிப்பு!

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் குடமுழுக்கு விழா பாதுகாப்புப் பணிகளில் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்துடன் கூடிய கண்காணிப்பு கேமராக்கள் பயன்படுத்தப்படுகின்றன.

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் குடமுழுக்கு விழாவில் 80 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரையிலான பக்தர்கள் பங்கேற்பர் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி, தென் மண்டல காவல் துறைத் தலைவர் விஜயேந்திர பிதாரி, மதுரை மாநகரக் காவல் ஆணையர் எஸ். ராஜேந்திரன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். தேவநாதன் தலைமையில் 6,500 போலீஸôர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

வாகனப் போக்குவரத்து தடை செய்யப்பட்ட கோயில் வீதிகளில் போலீஸôர் விரைந்து சென்று பணியாற்றும் வகையில் குதிரை வீரர்கள், சைக்கிள் வீரர்களும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். குற்றத் தடுப்புப் பணிகளுக்கென தனி கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் கூடிய 171 கேமராக்கள் கோயிலின் உள்பகுதிகளிலும், 270-க்கும் அதிகமான கேமராக்கள் வெளி வளாகங்களிலும் பொருத்தப்பட்டுள்ளன. இவை தவிர, போலீஸôரின் கைகளிலும் கையடக்க கண்காணிப்பு கேமராக்கள் வழங்கப்படவுள்ளன.

செயற்கை நுண்ணறிவு கேமராக்கள் மூலம் நிரந்தரப் பதிவேடு குற்றவாளிகள் 3 பேர், கோயில் பகுதியில் புதன்கிழமை வலம் வந்தது கண்டறியப்பட்டு, உடனடியாகக் கைது செய்யப்பட்டனர்.

ஏஐ தொழில்நுட்ப கண்காணிப்பு!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments