டி.கே. சிவகுமார் இல்லம் அருகே 'வருங்கால முதல்வர்' பதாகை!
துணை முதல்வர் டி.கே. சிவகுமாரை "வருங்கால முதல்வர்" என்று வாழ்த்தும் பதாகை, அவரது இல்லம் அருகே வைக்கப்பட்டுள்ளது குறித்து...
பெங்களூரு: கர்நாடக முதல்வர் பதவியிலிருந்து சித்தராமையா ராஜிநாமா செய்ததைத் தொடர்ந்து, துணை முதல்வர் டி.கே. சிவகுமாரை "வருங்கால முதல்வர்" என்று வாழ்த்தும் பதாகை ஒன்று, வெள்ளிக்கிழமை அவரது இல்லம் அருகே வைக்கப்பட்டுள்ளது; இது தலைமைத்துவ மாற்ற எதிர்பார்ப்பை உணர்த்துவதாக உள்ளது.
டி.கே. சிவகுமாரின் தீவர ஆதரவாளர் ஒருவர் வைக்கப்பட்டதாகக் கூறப்படும் அந்தப் பதாகையில், "புதிய, வருங்கால முதல்வர் டி.கே. சிவகுமார் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்," என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
சித்தராமையா தனது ராஜிநாமா கடிதத்தைச் சமர்ப்பித்த ஒரு நாளுக்குப் பின்னர், வெள்ளிக்கிழமை கர்நாடக ஆளுநர் தாவர்சந்த் கெலாட் அவரது ராஜினாமாவை ஏற்றுக்கொண்ட நிலையில், இந்தப் பதாகை விவகாரம் நிகழ்ந்துள்ளது.
Advertisement
Advertisement
பெங்களூருவில் உள்ள 'மக்கள் மாளிகை' அலுவலகத்திலிருந்து வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, சித்தராமையா தலைமையிலான அமைச்சரவையையும் ஆளுநர் தாவா்சந்த்கெலாட் உடனடியாகக் கலைத்துள்ளார். இருப்பினும், மாற்று ஏற்பாடுகள் செய்யப்படும் வரை சித்தராமையா முதல்வராக தொடர்ந்து பணியாற்றுவார்.
இதற்கிடையே, கர்நாடக முதல்வர் பதவியிலிருந்து விலகும் சித்தராமையா, தனது ராஜிநாமா கடிதத்தைச் சமர்ப்பித்த மறுநாளே, தில்லிக்குச் சென்று, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் நாடாளுமன்றக் கட்சித் தலைவர் சோனியா காந்தி ஆகியோரைச் சந்தித்தார்.
இந்தச் சந்திப்பின்போது, கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவகுமார் மற்றும் கர்நாடக காங்கிரஸ் பொறுப்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா ஆகியோர் சித்தராமையாவுடன் உடனிருந்தனர்; இச்சந்திப்பில், மாநிலத்தில் அடுத்த அரசாங்கத்தை அமைப்பது குறித்த ஆலோசனைகள் நடத்தப்பட உள்ளன.
வெள்ளிக்கிழமை மாலை கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவையும் சந்திக்கத் திட்டமிட்டுள்ளனர். புதிய அரசாங்கத்தின் பதவியேற்பு விழாவுக்கு முன்னதாக, மாநிலங்களவை வேட்பாளர்களை இறுதி செய்தல், சட்ட மேலவை (எம்எல்சி) நியமனங்கள் மற்றும் அமைச்சரவையில் செய்யப்படக்கூடிய மாற்றங்கள் இந்த சந்திப்பில் முக்கிய இடம் பெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சித்தராமையா அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த பல அமைச்சர்களுக்கு, டி.கே. சிவகுமார் தலைமையில் அமையவுள்ள புதிய அமைச்சரவையில் இடம் கிடைக்க வாய்ப்பில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. புதிய நிர்வாக அமைப்பில் சமூக மற்றும் பிராந்திய சமநிலையைப் பேணுவதற்காக, நான்கு துணை முதல்வர்களை நியமிப்பது குறித்தும் கட்சித் தலைமை பரிசீலித்து வருகிறது.
ஒரு சம்பிரதாய நிகழ்வாகக் கருதப்படும் காங்கிரஸ் சட்டமன்றக் கட்சி கூட்டத்தின் தேதி இன்று இறுதி செய்யப்படும் என்றும், அதைத் தொடர்ந்து கர்நாடக முதல்வராக டி.கே. சிவகுமார் பதவியேற்கும் விழா நடைபெறும் தேதி முடிவு செய்யப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கர்நாடகாவில் தேர்தல் நடைபெறவுள்ள நான்கு மாநிலங்களவை இடங்களில், காங்கிரஸ் கட்சி இரண்டு இடங்களை எளிதாக வெல்லும் நிலையில் உள்ளதாகவும், மூன்றாவது இடத்தைப் பொறுத்தவரை வெற்றிக்குத் தேவையான சில வாக்குகளைப் பெறுவதன் மூலம் அங்கும் முன்னிலையில் உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.