FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

வழிச்செலவுக்கு காசில்லாதவன் வழக்கத்துப் போவான் - நீதியும் நியாயமும் - 1

காலந்தோறும் ஏற்படும் தேவைகள்தான் ஒவ்வொன்றின் நியாயத்தையும் நிர்ணயிக்கிறது... புதிய சட்ட விழிப்புணர்வுத் தொடர்...

21 ஆகஸ்ட் 2026, 2:52 pm IST
நீதியும் நியாயமும் முதல் தொடர் - Illustration
பகிர்:

‘வழிச்செலவுக்கு காசில்லாதவன் வழக்கத்துப் போவான்’ - பள்ளிப் பருவத்தின் நினைவலைகளில் என் நெஞ்சை விட்டு அகலாத வாக்கியம்தான் இது.

இன்றைக்கு நாம் அனுபவித்து வரும் வசதிகள், வாய்ப்புகள் அனைத்தும் எளிதில் நமக்குக் கிடைக்கவில்லை. ஒவ்வொன்றின் பின்னாலும் நூற்றாண்டு கால வரலாறு மறைந்திருக்கிறது. அவைகள் துயர் மிகுந்தவை. துன்பம் நிறைந்தவை. அவற்றின் சாட்சியாகத்தான் நாம் எஞ்சி நிற்கிறோம். கொஞ்சம் நிம்மதியாக மூச்சுவிடுகிறோம். நமது சந்ததியினருக்குச் சொல்லித் தருவதற்கு நம்மிடம் ஏராளமான கதைகள் உண்டு. அவை வெறும் கதைகள் அல்ல. மனிதகுலத்திற்கான பாதுகாப்புக் கேடயங்கள். நேற்று சரியானதாக இருந்த ஒன்று, இன்று தவறானதாக மாறிவிடுகிறது. காலந்தோறும் ஏற்படும் தேவைகள்தான் ஒவ்வொன்றின் நியாயத்தையும் நிர்ணயிக்கிறது. வரலாறும் காலமும் தன்னைப் புதுப்பித்துக் கொள்கிறது.

நான், எனது, எனக்கு என்ற வார்த்தைகளுக்கான அர்த்தத்தை மனிதன் என்றைக்கு உணரத் தொடங்கினானோ, அன்றே ஒருவன் மற்றொருவனின் மீது ஆதிக்கம் செலுத்தத் தொடங்கிவிட்டான். அந்த இடத்தில் அதிகாரம் பிறந்துவிடுகிறது. அதிகாரம் தனக்கான அடிமைகளை உருவாக்கிக்கொண்டே இருக்கிறது. தன்னை நோக்கிக் கேள்வி எழுப்புபவர்களை அதிகாரம் எப்போதும் தனிமைப்படுத்தியே வைத்திருக்கிறது. தன்னைச் சார்ந்தவர்களை அதிகாரம் கண்காணித்துக்கொண்டே இருக்கும்; இருக்கிறது.

Advertisement

Advertisement

இந்த பூமியில் எல்லா உயிரினங்களும் தனக்கான வாழ்வியலை, வாழ்விடத்தை நிர்ணயம் செய்துகொள்கின்றன. மனிதர்களும் அப்படித்தான் இந்த பூமிப்பந்து முழுவதும் பரவி வாழ்ந்து வருகின்றனர். நிலத்திற்கும் சூழலியலுக்கும் ஏற்பத் தங்களுக்கான எல்லைக்குள் பல்வேறு இனக் குழுக்களாகப் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். தேவையின் அடிப்படையில் நடைபெற்ற இடப்பெயர்வுகளால்; ஒரு குழு மற்றொரு குழுவின் மீது ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியது. அதிகாரப் போட்டிகள் தொடங்கின.

ஒவ்வொரு குழுவும் தன்னைத் தற்காத்துக் கொள்வதற்கும் தனக்கான பாதுகாப்புக் கட்டமைப்புகளை உருவாக்கிக் கொள்வதற்கும் சில கட்டுப்பாடுகளையும் விதிகளையும் தங்களுக்குள் உருவாக்கிக்கொண்டன. ஒரு குழு உருவாக்கிய கட்டுப்பாடுகளும் விதிகளும் மற்றொரு குழுவை ஒடுக்குவதாக அமைந்தன. பாதிக்கப்பட்ட குழு அதை மீறின. வலுவான குழுக்கள் நிலைபெற்றன. அதிகார மையங்கள் உருவாகின.

காலப்போக்கில் நாகரிகம் வளர்ந்து குழுக்கள் சிற்றரசுகளாகவும் பேரரசுகளாகவும் மாற்றம் பெற்றன. அந்த அரசுகள் தனக்கான நியாயத்தை, தானே வடிவமைத்துக்கொண்டன. மக்கள் இப்படித்தான் வாழ வேண்டும் என்று போதித்தன. நாகரிக அரசுகளாக வளர்ச்சி அடைந்தன. அவை உருவாக்கிய விதிகளும் கட்டுப்பாடுகளும் மக்களிடம் கதைகளாகச் சொல்லப்பட்டன. அவற்றை மக்கள் வேதங்களாக எடுத்துக்கொண்டனர். வரலாற்றில் நீண்ட காலம் கதைகள்தான் மக்களை ஆட்சி செய்திருக்கிறது. அதன் தாக்கம் தற்போதுவரை நீளுகிறது. இதுதான் இன்றைய மானுட வரலாறு; வாழ்வின் எதார்த்தம்.

சிற்றரசுகளும் பேரரசுகளும் நிறைந்த நிலப்பரப்பில் மக்களிடையே பரப்பப்பட்ட கதைகள்தான் சட்டங்களாக மக்களை வழி நடத்தியிருக்கின்றன. உலகெங்கிலும் இதுவே நடந்தது. இந்தியாவிலும் அதுதான் நடந்தது. அறம் சார்ந்த வாழ்க்கை முறைக்குள் மக்கள் தங்களைத் தகவமைத்துக் கொண்டனர். மக்கள் தங்களுக்குத் தாங்களே சில கட்டுப்பாடுகளை விதித்துக்கொண்டு வாழ்ந்து வந்தனர். இந்திய நிலப்பரப்பு முழுவதும் மக்கள் சிதறி வாழ்ந்து வருவதையும் அவர்களுக்கு இடையே எவ்வித ஒற்றுமையும் இல்லை என்பதையும் தெரிந்துகொண்ட கிழக்கிந்தியக் கம்பெனி இந்தியாவில் கால்பதிக்கிறது.

கிழக்கிந்தியக் கம்பெனியாக இந்தியாவில் அடித்தளம் அமைத்துக் கொண்டவர்கள் இங்கிலாந்தின் ஆட்சியாளர்களாக மாறி, இந்திய நிலப்பரப்பு முழுவதையும் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர். இந்திய மக்களை நிர்வகிப்பதற்குத் தேவையான சட்டங்களையும் விதிகளையும் அவர்களே உருவாக்கினார்கள். தாங்கள் வேறு ஒரு அதிகாரத்தால் ஆளப்படுகிறோம் என்பதை நம் மக்கள் உணரவே வெகுகாலம் ஆனது. தனது அதிகாரத்திற்குள் வர மறுத்தவர்களை அடையாளப்படுத்தினார்கள். அவர்களைக் குற்றப்பரம்பரை என்று முத்திரை குத்தினார்கள்; துன்புறுத்தி அச்சுறுத்தினார்கள். மக்களைத் தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர். இந்தியர்களின் பார்வையில் தேசபக்தர்களாகத் தெரிந்தவர்கள், பிரிட்டிஷ் ஆட்சியாளர்களின் பார்வையில் தீவிரவாதிகளாகத் தெரிந்தனர். யார் நல்லவர்கள், யார் கெட்டவர்கள் என்பதை ஆட்சியாளர்கள்தான் முடிவு செய்தார்கள்; முடிவு செய்கிறார்கள். மக்களின் நடவடிக்கைகளுக்கு ஏற்ப சட்டங்கள் உருவாக்கப்பட்டன.

உலககெங்கிலும் மக்கள் விழிப்புணர்வு பெற்றார்கள். போராடினார்கள். ரத்தம் சிந்தினார்கள். தங்களுக்கான ஆட்சியாளர்களைத் தாங்களே முடிவு செய்துகொள்ளும் வல்லமையைத் தக்க வைத்துக்கொண்டார்கள். அதன் ஒரு பகுதியாக, இந்திய நிலப்பரப்பில் இருந்தும் பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் வெளியேறினார்கள். இந்திய மக்கள் தங்களுக்கான சட்டத்தைத் தாங்களே உருவாக்கிக் கொண்டார்கள். இன்றைக்கு, நாடு சுதந்திரம் அடைந்து 80 ஆண்டுகளை நெருங்கிவிட்டோம். ஜனநாயகம் மலர்ந்துவிட்டது. அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டிருக்கின்றன. காட்சிகள் மாறியிருக்கின்றன. சட்டங்கள் மாறியிருக்கின்றன. ஆனால், அதிகாரம் செய்பவர்களின் எண்ணங்களில் மாற்றம் ஏற்படவில்லை. தனக்கான வாழ்வியலுக்காக இன்றைக்கும் மக்கள் போராடிக்கொண்டு இருக்கிறார்கள். மக்களாட்சியில் மக்கள்தான் அதிகாரம் படைத்தவர்கள் என்ற உண்மையை ஆட்சியாளர்கள் ஒருபோதும் நம்புவதில்லை. அதை மக்களும் உணரவில்லை. மக்கள் தங்களுக்கான சட்ட உரிமைகளை அறிந்து வைத்துள்ளனரா? இந்திய அரசியலமைப்புச் சட்டம் எவ்வகையான உரிமைகளைத் தங்களுக்கு வழங்கி இருக்கிறது என்பதைத் தெரிந்துவைத்துள்ளனரா? என்றால்; இல்லை என்பதுதான் விடையாக இருக்கிறது.

இந்தியாவில் யாருடைய ஆட்சி நடைபெறுகிறது என்றால், கண்ணை மூடிக்கொண்டு மோடி ஆட்சிதான் நடைபெறுகிறது என்று சொல்வோம். தமிழ்நாட்டில் யாருடைய ஆட்சி நடைபெறுகிறது என்றால், ஜோசப் விஜய் ஆட்சிதான் நடைபெறுகிறது என்று சொல்வோம். ஆனால் உண்மை, அதுவல்ல. இந்தியாவில் நடைபெறுவது சட்டத்தின் ஆட்சி. தமிழ்நாட்டில் நடைபெறுவதும் சட்டத்தின் ஆட்சிதான். இந்திய அரசியல் அமைப்புச் சட்டப்படி நாம் அனைவரும் சட்டத்தின் ஆட்சியின் (Rule of Law) கீழ்தான் வாழ்ந்து வருகிறோம். இந்தப் புரிதல் எல்லோருக்கும் இருக்கிறதா? என்றால், இல்லை என்பதுதான் எதார்த்தம்.

இந்திய அரசியல் அமைப்புச் சட்டப்படி இந்திய மக்கள் அனைவரும் சட்டத்தின் முன் சமம். யாரும் யாரிடமும் பாகுபாடு காட்ட முடியாது. ஆனால், இது நடைமுறையில் சாத்தியமாகி இருக்கிறதா? இந்திய அரசியலமைப்புச் சட்டம் அதிகாரத்தைப் பல்வேறு படிநிலைகளில் பகிர்ந்தளித்து இருக்கிறது. இருந்தபோதிலும், ஏழை எளிய மக்களிடம் அதிகாரம் தன் கோர முகத்தைக் காட்டி நிற்கிறது. அதிகாரம் எப்போதும் எளியவர்களைக் காவு வாங்கத் துடித்துக்கொண்டே இருக்கிறது. சட்டத்தின் ஆட்சியில் ஒருவர் பாதிக்கப்பட்டுவிட்டால்; அவருக்கான நிவாரணம் சட்டத்தின் வழியாகத்தான் பெற முடியும். அந்தச் சட்டத்தை நிர்வகிப்பதும், நடைமுறைப்படுத்துவம் அதே அதிகார மையம்தான். இங்குதான் மக்கள் அந்நியப்பட்டு நிற்கிறார்கள்.

சட்ட உதவி கிடைக்கவில்லை என்ற காரணத்தினால் எவர் ஒருவரும் பாதிக்கப்பட்டுவிடக் கூடாது என்பது சட்டம். தகுதியானவருக்கு இலவச சட்ட உதவியை நமது அரசியலமைப்புச் சட்டம் உறுதி செய்கிறது. இவையெல்லாம் போராடித்தான் பெற வேண்டும் என்ற நிலையில்தான் நூற்றுக்கணக்கான மக்கள் நீதிமன்றத்தின் நெடிய படிக்கட்டுகளில் காத்துக்கிடக்கிறார்கள். இப்படிப் போராடிப் பெறுகின்ற நீதி நடைமுறையில் தனக்கான நியாயத்தைத் தேடிக்கொள்கின்றனவா? அல்லது அவை வெறும் காகிதங்களாகவே இருக்கின்றனவா? என்பதையெல்லாம் ஆய்வு செய்ய வேண்டிய அவசியம் இருக்கிறது.

தனது குடிமக்களுக்கான பாதுகாப்பையும் உரிமையையும் இந்திய அரசியலமைப்புச் சட்டம் தெளிவாக உறுதி செய்திருந்தபோதிலும்; நடைமுறையில் சாமானியனுக்கான நீதி என்பது சுமை நிறைந்த நெடுந்தூரப் பயணமாகவே இருக்கிறது. அந்தப் பயணத்தில் பலர் இல்லாமலேயே போய்விடுகின்றார்கள். மனித குலத்திற்கான அடிப்படை நியதி என்பது பல நேரங்களில் கானல் நீராகவே போய்விடுகிறது.

‘சட்டம் வலியவனுக்கு வளைந்து கொடுக்கிறது, எளியவனை எட்டி உதைக்கிறது’ என்ற எண்ணம் ஏழை எளிய மக்களிடம் ஆழமாகப் பதிந்துள்ளது. இந்த எண்ணம் மக்களை அச்சத்திலேயே உறைய வைத்திருக்கிறது. இதனை தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் அறிஞர் அண்ணா வேறுவிதமாகச் சொன்னார்; ‘சட்டம் ஓர் இருட்டறை; அதில் வக்கீலின் வாதம் ஒரு விளக்கு; ஆனால், அது ஏழைக்கு எட்டாத விளக்கு’ என்றார். இன்றைக்கும் அந்த வார்த்தைக்கு உயிர் இருக்கிறது. இந்தியாவில் தற்போதுள்ள சட்ட நடைமுறைகள் எளிய மக்களை மிரளச் செய்பவையாகவே இருக்கின்றன. கிராமத்துப் பெரியவர் ஒருவர் உதிர்த்த வார்த்தைகள்தான் எனது பள்ளிப்பருவ காலந்தொட்டு இன்றும் என் நெஞ்சை அழுத்திவருகிறது. அது இன்றுவரை உயிரோட்டமாகவும் இருக்கிறது. இந்தக் கட்டுரையின் முதல்வரியில் உள்ள வார்த்தைகள்தான் அது.

நீதிக்கான குரல் ஒலிக்கும்...

நியாயத்திற்கான பயணம் தொடரும்...

கட்டுரையாளர் : வழக்குரைஞர், சமூக செயற்பாட்டாளர்

9443645497, 9444377979

advocatetamilmani@gmail.com

summary

It is the evolving needs of the times that determine the justification for each aspect... A new series on legal awareness...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments