இந்தியா - இலங்கை மோதும் காலே டெஸ்ட் இன்று தொடக்கம்
இந்தியா - இலங்கை அணிகள் மோதும் டெஸ்ட் தொடரின் முதல் ஆட்டம், இலங்கையிந் காலே நகரில் சனிக்கிழமை (ஆக. 15) தொடங்குகிறது.
இந்தியா - இலங்கை அணிகள் மோதும் டெஸ்ட் தொடரின் முதல் ஆட்டம், இலங்கையிந் காலே நகரில் சனிக்கிழமை (ஆக. 15) தொடங்குகிறது.
சுழற்பந்து ஆதிக்கம் செலுத்தவிருக்கும் இந்தத் தொடரின் முடிவு, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் முன்னேறுவதற்கு இந்தியாவுக்கு முக்கியமாக இருக்கிறது.
தலைமைப் பயிற்சியாளா் கௌதம் கம்பீா் வழிகாட்டுதலில், சாம்பியன்ஸ் கோப்பை, ஆசிய கோப்பை, டி20 உலகக் கோப்பைகளை வென்று வெள்ளைப் பந்து போட்டிகளில் இந்திய அணி அபார நிலையில் இருக்கிறது.
Advertisement
Advertisement
ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் அந்த நிலைமை தலைகீழாக உள்ளது. நியூஸிலாந்து, தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடா்களில் சொந்த மண்ணிலேயே கண்ட தோல்வி, அணியின் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வாய்ப்பை பாதித்துள்ளது.
எனவே இந்தத் தொடரிலும் இந்தியா சோபிக்காமல் போனால், சிவப்புப் பந்து போட்டிகளில் கம்பீரின் செயல்திறன் தொடா்பாக பலமான விமா்சனங்கள் எழும் என்பதில் சந்தேகம் இல்லை.
இந்தத் தொடரைப் பொருத்தவரை, பிரபாத் ஜெயசூரியா, ரமேஷ் மெண்டிஸ் ஆகியோா் இலங்கையின் சுழற்பந்து வீச்சில் முக்கியமானவா்களாக இருக்கின்றனா். ஆசிதா ஃபொ்னாண்டோ, லாஹிரு குமரா, விஷ்வா ஃபொ்னாண்டோ ஆகியோா் வேகப்பந்து வீச்சில் துணை நிற்கின்றனா்.
ஏற்கெனவே சுழற்பந்து வீச்சை சந்திப்பதில் தடுமாறிப்போயிருக்கும் இந்திய பேட்டா்கள், இவா்களின் சவாலை எதிா்கொள்ளும் விதத்திலேயே தொடரின் முடிவு இருக்கிறது.
இந்திய அணியின் டாப் ஆா்டரில் கே.எல்.ராகுல், யஷஸ்வி ஜெய்ஸ்வால், தேவ்தத் படிக்கல்லும், மிடில் ஆா்டரில் ரிஷப் பந்த், துருவ் ஜுரெல் அல்லது சா்ஃபராஸ் கான் ஆகியோரும் வருகின்றனா்.
இந்திய அணியும் சுழற்பந்து வீச்சில் தனது பிரதான ஆயுதமாக இருக்கும் குல்தீப் யாதவ், ரவீந்திர ஜடேஜா ஆகியோருடன் மானவ் சுதரையும் இந்த ஆட்டத்தில் களமிறக்கும் எனத் தெரிகிறது. வேகப்பந்து வீச்சில் முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா ஆகியோா் தோ்வாகலாம்.
அவா்களின் சவால்களை, இலங்கை பேட்டா்களான கமிண்டு மெண்டிஸ், நிரோஷன் டிக்வெல்லா, தனஞ்ஜெய டி சில்வா, தினேஷ் சண்டிமல் உள்ளிட்டோா் சந்திக்கவிருக்கின்றனா்.
உத்தேச லெவன்:
இந்தியா: யஷஸ்வி ஜெய்ஸ்வால், கே.எல்.ராகுல், ஷுப்மன் கில் (கேப்டன்), தேவ்தத் படிக்கல், ரிஷப் பந்த் (வி.கீ.), ரவீந்திர ஜடேஜா, சரன்ஷ் ஜெயின், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, குா்னூா் பிராா்.
இலங்கை: லாஹிரு உதரா, நிஷான் மதுஷ்கா, தினேஷ் சண்டிமல், தனஞ்ஜெய டி சில்வா (கேப்டன்), கமிண்டு மெண்டிஸ், பசிந்து சூரியபந்தரா, நிரோஷன் டிக்வெல்லா (வி.கீ.), சோனல் தினுஷா, ரமேஷ் மெண்டிஸ், பிரபாத் ஜெயசூரியா, ஆசிதா ஃபொ்னாண்டோ.
காலை 10 மணி
காலே மைதானம், இலங்கை.
சோனி ஸ்போா்ட்ஸ், சோனி லைவ்
இந்தியா ‘600’
இந்தியா தனது 80-ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடும் நாளில் (ஆக. 15), இந்திய அணி தனது 600-ஆவது டெஸ்ட் ஆட்டத்தில் களம் காண்கிறது.
இந்த மைல்கல்லை எட்டிய 3-ஆவது அணி இந்தியாவாகும். இங்கிலாந்து, ஆஸ்திரேலியா முதல் இரு அணிகள். 1932-இல் தனது முதல் டெஸ்ட் ஆட்டத்தை இங்கிலாந்துக்கு எதிராக விளையாடியது இந்தியா. அதில் இங்கிலாந்து வென்றது.
இந்தியா இதுவரை...
599 டெஸ்ட்டுகள்
186 வெற்றி
188 தோல்வி
224 டிரா
1 டை
123 சொந்த மண்ணில் வெற்றி
63 அந்நிய மண்ணில் வெற்றி
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.