உருளைக்கிழங்கு சிப்ஸ், ஃபிரென்ச் ஃபிரைஸ் - எது சாப்பிடலாம்?
உருளைக்கிழங்கை வருத்தத்சாப்பிடுவதால் ஏற்படும் பாதிப்புகள் பற்றி...
செய்திகள்உருளைக்கிழங்கு சிப்ஸ், ஃபிரென்ச் ஃபிரைஸ் - எது சாப்பிடலாம்?
உருளைக்கிழங்கை வருத்தத்சாப்பிடுவதால் ஏற்படும் பாதிப்புகள் பற்றி...
உருளைக்கிழங்கை எப்படி சாப்பிட வேண்டும்? உருளைக்கிழங்கு சிப்ஸ், ஃபிரென்ச் ஃபிரைஸ் ஆகியவற்றில் எவ்வளவு கலோரி உள்ளது? இதனைச் சாப்பிடுவதால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும்?
உருளைக்கிழங்கும் சரி உருளைக்கிழங்கில் செய்த சிப்ஸும் சரி, இப்போது உருளைக்கிழங்கில் செய்யக்கூடிய ஃபிரென்ச் ஃபிரைஸும் சரி பலருக்கும் பிடித்தமான ஒன்று. குறிப்பாக குழந்தைகள், உருளைக்கிழங்கு சிப்ஸ், ஃபிரென்ச் ஃபிரைஸ் என்றால் மிகவும் விருப்பமாக சாப்பிடுகிறார்கள். கடைகளில்கூட பாக்கெட்டுகளில் பல பிராண்டுகளில் உருளைக்கிழங்கு சிப்ஸ் நல்ல விற்பனையில் இருக்கிறது.
இந்த உருளைக்கிழங்கு சிப்ஸில் ஊட்டச்சத்துக்கள் என்ன இருக்கின்றன என்று பார்த்தால்....
100 கிராம் உருளைக் கிழங்கு சிப்ஸில் 520- 550 கலோரி இருக்கிறது. இதில் கொழுப்பு 30- 35 கிராம், கார்போஹைடிரேட் 60 -65 கிராம், நார்ச்சத்து வெறும் 4-6 கிராம் மட்டுமே உள்ளது. சோடியம் 500 - 700 மில்லிகிராம் உள்ளது.
ஆனால், இதுவே உருளைக்கிழங்கை எண்ணெய்யில் பொரிக்காமல் நெருப்பில் சுடவைத்து சாப்பிடும்போது கலோரி - 450, கொழுப்பு - 15-18 கிராம், கார்போஹைடிரேட் 60 -65 கிராம், நார்ச்சத்து வெறும் 4-7 கிராம் சோடியம் 450- 650 மில்லிகிராம் உள்ளது.
உருளைக்கிழங்கை வேகவைத்துச் சாப்பிடும்போது கலோரி 93, கொழுப்பு - 0.1 கிராம், கார்போஹைடிரேட் 21 கிராம், நார்ச்சத்து 3 கிராம்.
சமீப சில ஆண்டுகளாக டிரெண்டிங்கில் இருக்கும் ஃபிரென்ச் ஃபிரைஸ் 100கிராமில் 312 கலோரி இருக்கிறது. கொழுப்பு - 14-19 கிராம், கார்போஹைடிரேட் 25- 52 கிராம், நார்ச்சத்து வெறும் 3-5 கிராம் உள்ளது.
வேகவைத்து சாப்பிட முடியும் என்றாலும் உருளைக்கிழங்கு வறுத்ததையே பலரும் விரும்புகின்றனர். ஆனால் சிப்ஸில்தான் அதிகம் கலோரி இருக்கிறது. மேலும் சிப்ஸில் கெட்ட கொழுப்புகள் அதிகம் இருப்பதால் உடலுக்கு பல்வேறு பிரச்னைகளை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. அதிக வெப்பத்தில் அதிக எண்ணெய் கொண்டு பொரிக்கும்போது வேதியியல் மாற்றங்கள் நிகழ்ந்து 'அக்ரிலமைடு' என்ற வேதிப்பொருளை உருவாக்குகிறது. இது உடலுக்கு பல பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடியது. அதிக வெப்பநிலையில் அல்லது குறைந்த வெப்பநிலையில் வறுக்கும்போது அக்ரிலமைடு உருவாகிறது. இது விலங்குகளில் புற்றுநோய்க்கு வழிவகுக்கும் என்று ஆய்வுகள் கூறுகின்றன. இதுபற்றி தொடர்ந்து ஆய்வு செய்யப்படுகிறது. 'பேக்கிங்' செய்யும் உணவுகளிலும் அக்ரிலமைடு இருக்கலாம். உருளைக்கிழங்கு சிப்ஸ் போலவேதான் ஃபிரென்ச் ஃபிரைஸும்.
அதனால் உருளைக்கிழங்கு கண்டிப்பாக சாப்பிட வேண்டும் என்று விரும்பினால் வேகவைத்து சாப்பிடுவதே நல்லது. குழந்தைகளுக்கும் அவ்வாறு கொடுப்பதே நல்ல பலனளிக்கும்.
உருளைக்கிழங்கு சிப்ஸ், ஃபிரென்ச் ஃபிரைஸ் இரண்டுமே உடலுக்கு பிரச்னைகளை ஏற்படுத்தும்.
உருளைக்கிழங்கு அதிகமாக சாப்பிடும்போது எடை அதிகரிக்கலாம், அதனால் அளவாகச் சாப்பிடுவது நல்லது. நீரிழிவு, வாயு தொல்லை என உடல்ரீதியான பிரச்னை உள்ளவர்கள் மருத்துவர்களிடம் ஆலோசித்து பின்னர் சாப்பிடுவது நல்லது.
[பொறுப்புத் துறப்பு: இந்தச் செய்திகள் / தகவல்கள் மருத்துவ நூல்கள், இணைய தளங்கள், அனுபவப் பகிர்வுகள் அடிப்படையில் தொகுத்துத் தரப்படுகிற பொதுவான ஆலோசனைகள் மட்டுமே. எந்தவொன்றையும் செயல்படுத்தும் முன் உரிய மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவதே நல்லது. எந்த விதத்திலும் ‘தினமணி’ பொறுப்பாகாது.]