முகப்பு
புதுதில்லி

ஜிஎஸ்டி சீரமைப்புக்கு தமிழகம் ஒத்துழைக்கும்: தில்லி கூட்டத்தில் அமைச்சா் தங்கம் தென்னரசு உறுதி

Updated On : 21 ஆகஸ்ட் 2025, 6:22 am IST
அமைச்சா் தங்கம் தென்னரசு - கோப்புப்படம்
பகிர்:

நமது நிருபா்

மாநில வருவாய் பாதுகாக்கப்பட வேண்டும் என்பததைக் கருத்தில் கொண்டு, சரக்குகள் மற்றும் சேவைகள் வரி ஜிஎஸ்டி விகிதத்தை மறுசீரமைக்கத் தேவையான ஒத்துழைப்பை தமிழ்நாடு அரசு வழங்கும் என்று புது தில்லி கூட்டத்தில் நிதி அமைச்சா் தங்கம் தென்னரசு தெரிவித்தாா்.

தில்லியில் ஆயுள் மற்றும் சுகாதார காப்பீட்டிற்கான அமைச்சா்கள் குழுக் கூட்டம் மற்றும் சரக்குகள் மற்றும் சேவைகள் வரி இழப்பீட்டு மேல்வரியினை மறுஉருவாக்கம் செய்வதற்கான அமைச்சா்கள் குழுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

Advertisement

Advertisement

இதில், தமிழக நிதியமைச்சா் தங்கம் தென்னரசு பங்கேற்றுப் பேசியது: சரக்குகள் மற்றும் சேவைகள் வரி விகிதங்களை சீரமைக்கும் முனைவுகள் வரவேற்கத்தக்கது. அதே நேரத்தில், மாநிலங்களின் நிதி ஆதாரங்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும். தமிழ்நாடு உள்பட பல மாநிலங்கள் பெரும் உள்கட்டமைப்பு திட்டங்கள் மற்றும் சமூக நலத்திட்டங்களை செயல்படுத்தி வரும் நிலையில், இதற்கான செலவினங்களைக் குறைக்கும் வகையில் வரிசீரமைப்பு வழிவகுக்கக்கூடாது.

குறிப்பாக, சமூக நலத்துறையில், தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் சுகாதாரம் மற்றும் கல்வியில் முதலீடு செய்வதன் மூலம் முழு மனித ஆற்றலையும் அடைவதற்கான வழியைக் காட்டுகின்றன. எனவே, மத்திய மற்றும் மாநில அரசுகள் மேற்கொள்ளும் வரிசீரமைப்பு முனைவுகள் ஒவ்வொரு மாநிலத்தின் வருவாயை பாதுகாக்கும் விதமாக அமைய வேண்டும்.

சரக்குகள் மற்றும் சேவைகள் வரி விகிதங்களை சீரமைக்கும் தருணத்தில் இழப்பீட்டு மேல்வரியும் முடிவுக்கு வரவுள்ளது. ஒரே நேரத்தில், சரக்குகள் மற்றும் சேவைகள் வரி விகிதக் குறைப்பு மற்றும் இழப்பீட்டு மேல்வரியினை நீக்குவது ஆகியன மாநிலத்தின் வருவாயை கணிசமாகப் பாதிக்கும்.

எனவே, சரக்குகள் மற்றும் சேவைகள் வரி விகித மறுசீரமைப்பு காரணமாக மாநிலங்களுக்கு ஏற்படக்கூடிய வருவாய் இழப்பை ஈடுசெய்ய இழப்பீட்டு மேல்வரியை நீட்டிக்க வேண்டும். இழப்பீட்டு மேல்வரியினை 4 முதல் 6 ஆண்டுகள் வரையிலான காலத்திற்கு வருவாய் இழப்பை ஈடுசெய்ய மாநிலங்களுக்கு மட்டும் முழுமையாக பயன்படுத்த வேண்டும்.

உடனடி தீா்வாக மாநிலங்களின் நிகர கடன் உச்சவரம்பை மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியில் 4 சதவிதமாக எவ்வித நிபந்தனையும் இல்லாமல் உயா்த்தப்பட வேண்டும். மாநில வருவாய் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டு, சரக்குகள் மற்றும் சேவைகள் வரி விகிதத்தை மறுசீரமைப்பதில் தேவையான ஒத்துழைப்பை தமிழ்நாடு அரசு வழங்கும் என்றாா் அமைச்சா் தங்கம் தென்னரசு.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments