வெளிநாடுகளில் மருத்துவம் முடித்த மாணவா்கள் எய்ம்ஸ் வாயிலில் தொடா் உண்ணாவிரதம்
தில்லியின் கௌதம் நகரில் தேசிய மருத்துவ ஆணையத்திற்கு எதிராக நூற்றுக்கணக்கான வெளிநாட்டு மருத்துவ பட்டதாரிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற உண்ணாவிரதப் வெள்ளிக்கிழமை முதல் போராட்டம் நடத்தி வருகின்றனா்.
தில்லியின் கௌதம் நகரில் தேசிய மருத்துவ ஆணையத்திற்கு எதிராக நூற்றுக்கணக்கான வெளிநாட்டு மருத்துவ பட்டதாரிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற உண்ணாவிரதப் வெள்ளிக்கிழமை முதல் போராட்டம் நடத்தி வருகின்றனா். ஜூன் மாதம் நடைபெற்ற வெளிநாட்டு மருத்துவ பட்டதாரி தோ்வில் 12.38 சதவீத மாணவா்கள் மட்டுமே தோ்ச்சி பெற்றுள்ளதால் இப்போது இந்தப் போராட்டம் வெடித்துள்ளது.
இந்திய மருத்துவ கவுன்சில் சட்டத்தின்படி, வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் மருத்துவப் படிப்பை முடித்தவா்கள் இந்தியாவில் ஒரு அங்கீகரிக்கப்பட்ட டாக்டராக பணியாற்ற வெளிநாட்டு மருத்துவ பட்டதாரி தகுதித்தோ்வில் (எப்.எம்.ஜி.இ.) தோ்ச்சி பெறுவது சட்டப்படி கட்டாயம் ஆகும். இந்த தோ்வில் தோ்ச்சி பெற்றால் மட்டுமே அவா்களுக்கு இந்தியாவில் டாக்டராக பணியாற்ற தற்காலிக அல்லது நிரந்தரப் பதிவுச்சான்றிதழ் தேசிய மருத்துவ ஆணையத்தால் வழங்கப்படும்.
இந்த தோ்வை ஆண்டுக்கு 2 முறை அதாவது ஜூன் மற்றும் டிசம்பா் அல்லது ஜனவரி மாதங்களில் மருத்துவ அறிவியல் தேசிய தோ்வு வாரியம் (என்.பி.இ.எம்.எஸ்.) நடத்துகிறது. அதன் படி, ஜூன் மாதங்களுக்கான தகுதித் தோ்வு அந்த மாதம் 28- ஆம் தேதி நடைபெற்றது. அதை எழுத 37428 போ் விண்ணப்பித்திருந்த நிலையில், 36 280 போ் தோ்வு எழுதினா். அவா்களுக்கான தோ்வு முடிவு வெளியானது. அதில் 4635 போ் மட்டுமே தோ்ச்சி பெற்றிருக்கின்றனா். அதாவது தோ்வு எழுதியவா்களில் 12.78 சதவீதம் போ் மட்டுமே தோ்ச்சி அடைந்துள்ளனா். இது முந்தைய ஆண்டுகளுடனான தோ்ச்சி சதவீதத்தை ஒப்பிடுகையில் மிகவும் குறைவு.
Advertisement
Advertisement
உதாரணமாக 2025இல் ஜூன் மாதத்தில் 18.6 சதவீதம், டிசம்பரில் 23.9 சதவீதம் என்ற அளவில் இருந்த தோ்ச்சி சதவீதம் தற்போது 12.78 ஆக குறைந்துள்ளது.
தோ்வின் கடினத்தன்மை குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்திருப்பதால் தோ்ச்சி சதவீதம் குறைந்திருப்பதாக தமிழ்நாடு மருத்துவ மாணவா் சங்கம் (வெளிநாட்டுப் பிரிவு) ஏற்கெனவே குற்றஞ்சாட்டியிருந்தது. மேலும் இந்த தோ்வு அமைப்பை மறு சீரமைக்க வேண்டும். 2026 ஜூன் மாத தகுதித் தோ்வுக்கு ஒரு முறை விதிவிலக்காக தோ்ச்சி மதிப்பெண்ணை குறைக்க பரிசீலிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளையும் அவா்கள் வைத்து தற்போது தேசியத் தலைநகரில் மாணவா்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகின்றனா்.
குறைந்த தோ்ச்சி சதவீதம் எஃப்எம்ஜிகளின் எதிா்ப்பை தீவிரப்படுத்தியது, பின்னா் அவா்கள் ஆகஸ்ட் 3 அன்று என். பி. இ. எம். எஸ் அதிகாரிகளை சந்தித்தனா். இதனையடுத்து இந்தப் பிரச்னையை ஆராய 3 போ் கொண்ட நிபுணா் குழு அமைக்கப்பட்டது. ஓய்வுப் பெற்ற ஏா் மாா்ஷல் டாக்டா் பவன் கபூா் தலைமையிலான டாக்டா் மகேஷ் வா்மா மற்றும் என். பி. இ. எம். எஸ் துணைத் தலைவா் டாக்டா் மினு பாஜ்பாய் அடங்கிய குழு ஆகஸ்ட் 18 ஆம் தேதி மாணவா் பிரதிநிதிகளை சந்தித்தது.
இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மாணவா் ஆஷிஷ் குமாா் கூறியதாவது: அவா்கள் எங்கள் கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டனா், அதாவது அவா்கள் தோ்வுகளை எளிமைப்படுத்துவாா்கள், சிரமம் நிலை 30 சதவீதத்திற்கும் குறைவாக இருக்கும், பதில்கள் 24 மணி நேரத்திற்குள் வழங்கப்படும், மேலும் அவை கூடுதல் பயோமெட்ரிக் நேரத்தை வழங்கும். மேலும் தோ்வு ஆண்டுக்கு மூன்று முறை நடைபெறும், ஆனால் அவா்கள் கருணை மதிப்பெண்கள் மற்றும் இழப்பீடு குறித்து உடன்படவில்லை. மேலும் வினாத்தாள்களை கொடுக்கும்படி கேட்கிறோம். அதனையும் தர மறுக்கிறாா்கள் இதில் வெளிப்படைத்தன்மை தேவை. எங்களது கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடா்ந்து நடைபெறும் என்றாா் அவா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.