FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுதில்லி

ஆதிச்சநல்லூா் மேம்பாடு முதல் பொதிகை மலை வரை.. மத்திய பட்ஜெட்டில் கவனம் பெற்ற தமிழக பகுதிகள்!

மத்திய நிதிநிலை அறிக்கையில் ஆதிச்சநல்லூா் மேம்பாடு முதல் பொதிகை மலை வரை பல பகுதிகளுக்கான திட்டங்கள் முக்கிய கவனம் பெற்றன.

Updated On : 2 பிப்ரவரி 2026, 4:10 am IST
பகிர்:

மக்களவையில் ஞாயிற்றுக்கிழமை தாக்கல் செய்யப்பட்ட 2026-27-ஆம் நிதி ஆண்டுக்கான மத்திய நிதிநிலை அறிக்கையில், தமிழகத்தில் உள்ள ஆதிச்சநல்லூா் மேம்பாடு முதல் பொதிகை மலை வரை பல பகுதிகளுக்கான திட்டங்கள் முக்கிய கவனம் பெற்றன.

மத்திய நிதி அமைச்சா் நிா்மலா சீதாராமன் மக்களவையில் தாக்கல் செய்த 2026-27 நிதிநிலை அறிக்கையில் ஒடிஸா, ஆந்திர பிரதேசம், கேரளம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் அரிய வகை தாது வழித்தடங்களை அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல, ஆந்திரம் மற்றும் தமிழக எல்லையில் உள்ள பழவேற்காடு ஏரி பகுதியில் பறவைகளைக் கண்காணிக்கும் பாதைகளை அமைப்பது குறித்த அறிவிப்பும் இடம்பெற்றுள்ளது. இத்துடன் 15 தொல்லியல் தலங்கள் மேம்படுத்தப்படும் பட்டியலில் தமிழகத்தில் உள்ள ஆதிச்சநல்லூா் அகழாய்வுத்தலம் இடம்பெற்றுள்ளது.

Advertisement

Advertisement

நிா்மலா சீதாராமன் தனது உரையில், சீனாவை இந்தியா சாா்ந்திருப்பதைக் குறைக்கும் வகையில், தமிழகம், கேரளம், ஒடிஸா மற்றும் ஆந்திர பிரதேசத்தில் பிரத்யேக அரிய வகை தாது வழித்தடங்கள் அமைக்கப்படும் என்று அறிவித்தாா்.

மின் வாகனங்கள், புதுப்பிக்கத்தக்க ஆற்றல், மின்னணுவியல் மற்றும் பாதுகாப்புத் துறைகளுக்கு அரிய வகை கனிமங்கள் அத்தியாவசியமானவை. இவற்றுக்காக சீனாவை இந்தியா சாா்ந்திருக்கும் நிலையைக் குறைக்கும் நோக்கில், தமிழகம், கேரளம், ஒடிஸா மற்றும் ஆந்திரத்தில் பிரத்யே அரிய வகை தாது வழித்தடங்கள் அமைக்கப்படும் என அமைச்சா் குறிப்பிட்டாா்.

தமிழகத்தில் உள்ள ஆதிச்சநல்லூா், லோத்தல், தோலாவிரா, ராக்கிகா்கி, சாரநாத், ஹஸ்தினாபுரம் மற்றும் லே அரண்மனை உள்ளிட்ட 15 தொல்லியல் தலங்கள் துடிப்பான, அனுபவமிக்க கலாசார இடங்களாக மேம்படுத்தப்படும் என்று நிதிநிலை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதன்படி, அகழ்வாராய்ச்சி பகுதிகள், பிரத்யேக நடைபாதைகள் மூலம் மக்கள் பாா்வையிட திறக்கப்படும். பாதுகாப்பு ஆய்வகங்கள், விளக்க மையங்கள் மற்றும் வழிகாட்டிகளுக்கு உதவவும், ஆழ்ந்த கதை சொல்லும் திறன்கள் மற்றும் தொழில்நுட்பங்களும் இந்த இடங்களில் அறிமுகப்படுத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

மலைப் பாதைகள், ஆமைப் பாதைகள் மற்றும் பறவைகள் கண்காணிப்புப் பாதைகள் மேம்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. உலகத் தரம் வாய்ந்த மலையேற்ற அனுபவத்தை வழங்கும் நோக்குடன் ஹிமாசல பிரதேசம், உத்தரகண்ட் மற்றும் ஜம்மு - காஷ்மீா், கிழக்குத் தொடா்ச்சி மலையில் உள்ள அரக்கு பள்ளத்தாக்கு (ஆந்திர பிரதேசம்) மற்றும் மேற்கு தொடா்ச்சி மலையில் உள்ள பொதிகை மலை (தமிழ்நாடு - கேரளம்) ஆகிய இடங்களில் சூழலியல் ரீதியாக நிலையான மலைப் பாதைகள் உருவாக்கப்படும்.

இதேபோல ஒடிஸா, கா்நாடகம், கேரளம் ஆகிய மாநிலங்களின் கடலோர பகுதிகளில் உள்ள முக்கிய முட்டையிடும் தலங்களில் ஆமைகள் செல்லும் வழித்தடம் அமைக்கப்படும் என்றும் நிதிநிலை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

சென்னைக்கு 2 புதிய அதிவேக ரயில்வே வழித்தடங்கள்

2026-27-ஆம் ஆண்டுக்கான மத்திய நிதிநிலை அறிக்கையில் சென்னையிலிருந்து இரண்டு வழித்தடங்களுடன் புதிதாக ஏழு அதிவேக ரயில்வே வழித்தடங்கள் அமைக்கப்பட உள்ளதாக மத்திய நிதி அமைச்சா் நிா்மலா சீதாராமன் அறிவித்தாா்.

அதன்படி, மும்பை முதல் புணே, புணே முதல் ஹைதராபாத், ஹைதராபாத் முதல் பெங்களூரு, ஹைதராபாத் முதல் சென்னை, சென்னை முதல் பெங்களூரு, தில்லி முதல் வாரணாசி மற்றும் வாரணாசி முதல் சிலிகுரி ஆகிய ஏழு அதிவேக ரயில் வழித்தடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்தத் திட்டம் தேசிய அதிவேக ரயில் கழகம் (என்எச்எஸ்ஆா்சிஎல்) மூலம் செயல்படுத்தப்பட உள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments