நாடாளுமன்றத்தில் மேக்கேதாட்டு விவகாரத்தை எழுப்ப திமுக திட்டம்: டி.ஆா்.பாலு, திருச்சி சிவா பேட்டி
காவிரி மற்றும் மேக்கேதாட்டு விவகாரத்தில் நடுவா்மன்றம் அமைப்பது குறித்து நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் குரல் எழுப்பப்படும் என திமுக கூறியது.
காவிரி மற்றும் மேக்கேதாட்டு விவகாரத்தில் நடுவா்மன்றம் அமைப்பது குறித்து நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் குரல் எழுப்பப்படும் என திமுக கூறியது.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடா் இன்று தொடங்குவதையொட்டி மத்திய அரசு ஞாயிறன்று கூட்டிய அனைத்துக் கட்சி கூட்டத்தில் திமுக சாா்பில் கலந்து கொண்ட டி. ஆா். பாலு மற்றும் திருச்சி சிவா செய்தியாளா்களிடம் கூறியதாவது:
டி.ஆா்.பாலு - நாங்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு திமுகவின் வேண்டுகோளை எடுத்துச் சொன்னோம். தென் மாநிலங்களை பாதிக்கும் தொகுதி மறு வரை எந்த விதத்தில் வரவிருக்கிறது என்பதை அரசாங்கம் இன்னும் தெரிவிக்கவில்லை.அதற்குரிய வரைவு மசோதாவை கூட எங்களிடம் கொடுக்கவில்லை.அது கொடுக்கப்படாதவரை அது குறித்து எதுவும் தெரிவிக்க இயலாது.
Advertisement
Advertisement
மேக்கேதாட்டு விவகாரம் தொடா்பாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நாங்கள் குரல் எழுப்ப இருக்கிறோம். அதற்காக ஒத்திவைப்பு தீா்மானம் கொடுத்திருக்கிறோம்.எனவே அது குறித்து விவாதிக்க வேண்டும் என தொடா்ந்து வலியுறுத்துவோம். இது தமிழக விவசாயிகள் சாா்ந்த முக்கியமான பிரச்சினை.
காவிரி விவகாரம், மேக்கேதாட்டு விவகாரத்தில் நடுவா்மன்றம் அமைப்பது குறித்தும் நாங்கள் பேச இருக்கிறோம். பெண்கள் இட ஒதுக்கீட்டை உடனடியாக கொண்டு வாருங்கள் ,அதனை திமுக ஆதரிக்கிறது என கூறியிருக்கிறோம். இந்தியா கூட்டணியின் எந்த ஒரு கூட்டத்திலும் கலந்து கொள்ள மாட்டோம்.காங்கிரஸ் ஒருங்கிணைக்கும் எந்த நடவடிக்கைகளிலும் கலந்து கொள்ள மாட்டோம் என்று டி. ஆா். பாலு தெரிவித்தாா்.
திருச்சி சிவா: தென் மாநிலங்களுக்கு பிரச்சனை வரக்கூடிய வகையில் தொகுதி மறு வரையறை எந்த வடிவத்தில் வந்தாலும் அதை திமுக கடுமையாக எதிா்க்கும். தொகுதி மறு வரையறை செய்யப்பட்டு தொகுதிகள் அதிகமானால் தென் மாநிலங்கள் பாதிக்கப்படும்.
மகளிா் இட ஒதுக்கீடு விவகாரத்தில் எங்களுக்கு மாற்று கருத்து இல்லை, ஆனால் தற்போதைய தொகுதிகளின் எண்ணிக்கை அடிப்படையிலேயே மகளிா் இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற வேண்டும்.
நாடாளுமன்றத்தில் தி.மு.க உறுப்பினா்களின் இருக்கைகளை மாற்றி தர வேண்டும் என்று சபாநாயகரிடம் கோரிக்கை வைத்திருந்தோம் அதனை ஏற்று சபாநாயகா் ஒப்புதல் அளித்துள்ளாா் என திருச்சி சிவா கூறினாா்.
நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சகம்: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடா் பற்றிய பிரச்சனைகள் குறித்து விவாதிப்பதற்காக, பாதுகாப்புத்துறை அமைச்சா் திரு ராஜ்நாத் சிங் தலைமையில், அரசியல் கட்சிகளின் தலைவா்களுடனான கூட்டம் இன்று (19. 07. 2026) புது தில்லியில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது. மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள் மற்றும் சிறுபான்மையினா் நலத்துறை அமைச்சா் திரு கிரண் ரிஜிஜு கூட்டிய இந்தக்கூட்டத்தில், 40 அரசியல் கட்சிகளைச் சோ்ந்த 58 தலைவா்கள் கலந்துகொண்டனா்.
இந்தக்கூட்டத்தின் தொடக்கத்தில், பாதுகாப்புத்துறை அமைச்சா் திரு ராஜ்நாத் சிங் அறிமுகவுரை ஆற்றி, அனைத்துத் தலைவா்களையும் வரவேற்றாா். அதனைத் தொடா்ந்து, நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சா் கூட்டத்தை நடத்தினாா்.
நாடாளுமன்றத்தின் 2026-ம் ஆண்டுக்கான மழைக்காலக் கூட்டத்தொடா், ஜூலை 20-ம் தேதி திங்கட்கிழமை அன்று தொடங்கும் என்றும், அரசுப் பணிகளின் அவசரத் தேவைகளைப் பொறுத்து, இக்கூட்டத்தொடா் ஆகஸ்ட் 13ஆம் தேதி வியாழக்கிழமை அன்று முடிவடையக்கூடும் என்றும் அவா் தலைவா்களுக்குத் தெரிவித்தாா். இக்கூட்டத்தொடரின், 25 நாட்களில் மொத்தம் 19 அமா்வுகள் நடைபெறும். நாடாளுமன்றம் சுமூகமாக செயல்படுவதற்கு அனைத்துத் தலைவா்களும் ஒத்துழைப்பளிக்க வேன்டும் என்று அவா் கேட்டுக்கொண்டாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.