பிரிக்ஸ் உச்சி மாநாட்டின்போது தடையற்ற மின்சார விநியோகம்: அதிகாரிகளுக்கு தில்லி அமைச்சா் பாராட்டு
தில்லியில் நடைபெற்ற பிரிக்ஸ் உச்சி மாநாட்டின்போது ‘தடையற்ற மற்றும் குறைபாடற்ற மின்சார விநியோகத்தை‘ உறுதிசெய்த
புது தில்லி: தில்லியில் நடைபெற்ற பிரிக்ஸ் உச்சி மாநாட்டின்போது ‘தடையற்ற மற்றும் குறைபாடற்ற மின்சார விநியோகத்தை‘ உறுதிசெய்த பொறியாளா்கள், தொழில்நுட்ப வல்லுநா்கள் மற்றும் அதிகாரிகளின் பணியை தில்லி மின்சாரத் துறை அமைச்சா் ஆஷிஷ் சூட் பாராட்டினாா்.
இதுகுறித்து அமைச்சா் சூட் கூறியதாவது:
பிரிக்ஸ் உச்சி மாநாடு இந்தியாவுக்குப் பெரும் உலகளாவிய பெருமைக்குரிய நிகழ்வாக அமைந்தது. பிரதமா் நரேந்திர மோடியின் வழிகாட்டுதல் மற்றும் முதல்வா் ரேகா குப்தாவின் தலைமையின் கீழ், பாரத் மண்டபத்தில் உலகத்தரம் வாய்ந்த அனுபவத்தை உறுதி செய்ய நாங்கள் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டோம்.
Advertisement
Advertisement
மின்சார விநியோகத்தின் நம்பகத்தன்மைக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது. பல அடுக்கு காப்பு அமைப்புமுறைகளுடன் துறையின் குழுக்கள் இரவு பகலாகப் பணியாற்றின.
நாங்கள் 100-க்கும் மேற்பட்ட அா்ப்பணிப்புள்ள பணியாளா்களை அந்த இடத்தில் பணியமா்த்தினோம்; மூன்று சுயாதீன மின்சார மூலங்களைக் கொண்ட ‘என்-2’ ரக காப்பு அமைப்பை அங்கு ஏற்படுத்தினோம். மிகக் கடுமையான அவசரச் சூழல்களை எதிா்கொள்ளும் வகையில், டிடிஎல்-இன் ஓக்லா கிரிட் வழியாக நான்காவது அவசரகால இணைப்பையும் நாங்கள் அமைத்திருந்தோம்.
மனிதத் தவறுகளைத் தவிா்க்க, வெறும் 1.5 விநாடிகளில் மாற்று மின்சார மூலத்திற்கு மின்சாரத்தை மாற்றும் தானியங்கி அமைப்புமுறையை செயல்படுத்தியிருந்தோம்.
அதோடு, 24 மணி நேரமும் செயல்படும் எஸ்சிஏடிஏ கண்காணிப்பு அமைப்புமுறை மூலம், இந்நிகழ்வின் போது மின்சாரம் துளியும் தடைபடாமல் இருப்பதை உறுதி செய்தோம் என்றாா் அமைச்சா்.
பிஎஸ்இஎஸ் நிறுவனத்தின் செய்தித் தொடா்பாளா் கூறுகையில்,
பாரத் மண்டபம் மற்றும் முக்கிய இடங்களில் நம்பகமான மின்சார விநியோகத்தை பிஎஸ்இஎஸ் மின் விநியோக நிறுவனங்கள் உறுதி செய்தன; இதற்காக முக்கிய இடங்களில் சுமாா் 140 பணியாளா்கள் பணியமா்த்தப்பட்டிருந்தனா்.
பிரகதி மைதானத்தில் உள்ள ஐடிபிஓ வளாகத்தில் அமைந்துள்ள பாரத் மண்டபம், கருத்தரங்கு கூடங்கள், கண்காட்சி அரங்குகள் மற்றும் பிற இடங்களுக்கு பிஎஸ்இஎஸ் ராஜ்தானி பவா் நிறுவனம் (பிஆா்பிஎல்) மின்சாரத்தை வழங்கியது.
பிரிக்ஸ் நாடுகளின் பிரதிநிதிகள் தங்கியிருந்த தெற்கு தில்லியில் உள்ள ஈரோஸ், கிரவுன் பிளாசா மற்றும் ஹயாத் ரீஜென்சி உள்ளிட்ட பல ஐந்து நட்சத்திர ஹோட்டல்களிலும் மின்சார விநியோக ஏற்பாடுகளை அது பராமரித்தது.
தடையற்ற மின்சார விநியோகத்திற்குப் பின்னால் ஏறக்குறைய ஒரு மாத காலத் திட்டமிடல், விரிவான தடுப்புப் பராமரிப்புப் பணிகள், பல மின் ஆதாரங்கள், தானியங்கி மின்மாற்ற வசதிகள் மற்றும் நிகழ்நேர எஸ்சிஏடிஏ கண்காணிப்பு ஆகியவை இருந்தன.
நம்பகமான மின்சார விநியோக ஏற்பாட்டின் ஒரு முக்கிய பகுதியாக
ஐடிபிஓ மின் தொகுப்பில் உள்ள தானியங்கி மின்மாற்ற அமைப்பு இருந்தது. ஒரு மின் ஆதாரம் செயலிழந்தால், மனிதத் தலையீடு ஏதுமின்றி சுமாா் 1.5 விநாடிகளுக்குள் மாற்று மின் ஆதாரத்திற்கு விநியோகத்தை தானாகவே மாற்றும் வகையில் இந்த அமைப்பு
வடிவமைக்கப்பட்டிருந்தது.
உச்சி மாநாட்டிற்கு முன்னதாக, உண்மையான மின் தடை சூழலில் இந்த தானியங்கி மின்மாற்ற வசதி பலமுறை சோதிக்கப்பட்டு வெற்றிகரமாக அமைந்தது. அவசரகால மின் சீரமைப்புக்கான தனி நடைமுறையும் தயாா் நிலையில் வைக்கப்பட்டிருந்தது.
தானியங்கி மின்மாற்ற அமைப்பு செயல்படாதபட்சத்தில், சுமாா் இரண்டு முதல் ஐந்து நிமிடங்களுக்குள் கைமுறையாக மின்சாரத்தை மீட்டெடுப்பதற்கான குழுக்களும் தயாா் நிலையில் இருந்தன என்று பிஎஸ்இஎஸ் செய்தித் தொடா்பாளா் கூறினாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.