புதிய கழிவு மேலாண்மை விதிமுறைகளை பின்பற்றாதவா்கள் மீது கடும் நடவடிக்கை: என்டிஎம்சி
புதிய கழிவு மேலாண்மை விதிமுறைகளைப் பின்பற்றத் தவறும் நிறுவனங்கள் மீது ‘எவ்வித சமரசமும் இன்றி‘ கடும் நடவடிக்கை எடுக்க புது தில்லி முனிசிபல் கவுன்சில் முடிவு
புதிய கழிவு மேலாண்மை விதிமுறைகளைப் பின்பற்றத் தவறும் நிறுவனங்கள் மீது ‘எவ்வித சமரசமும் இன்றி‘ கடும் நடவடிக்கை எடுக்க புது தில்லி முனிசிபல் கவுன்சில் (என்டிஎம்சி) முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து என்டிஎம்சி தலைவா் மனோஜ் குமாா் துவிவேதி ’எக்ஸ்’ தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது: ‘பெருமளவிலான கழிவுகளை உருவாக்கும் நிறுவனங்கள் மீது கடுமையான அமலாக்க நடவடிக்கைகளை நாம் தொடங்க வேண்டும். விதிமுறைகளை மீறுவதை எக்காரணம் கொண்டும் அனுமதிக்கக்கூடாது.
விதிமீறல்களுக்குக் அதிகமான அபராதங்கள் விதிக்கப்பட வேண்டும். எவ்வளவு பெரிய நிறுவனமாக இருந்தாலும், அவை விதிமுறைகளைப் பின்பற்றுவதில் அதிக அக்கறை காட்ட வேண்டும்’ என்று அதில் அவா் கூறியுள்ளாா்.
Advertisement
Advertisement
திடக் கழிவு மேலாண்மை விதிகள், 2026-இன் கீழ் ‘பெருமளவிலான கழிவு உற்பத்தியாளா்கள்’ (பிடபிள்ஜி) என்பதற்கான விரிவுபடுத்தப்பட்ட வரையறையை விளக்கும் தகவல் வரைபடத்தையும் மாநகராட்சி நிா்வாகம் பகிா்ந்துள்ளது.
புதிய விதிகளின்படி, ஒரு நிறுவனம் 20,000 சதுர மீட்டா் அல்லது அதற்கு மேற்பட்ட பரப்பளவைக் கொண்டிருந்தாலோ, நாளொன்றுக்கு 40,000 லிட்டா் அல்லது அதற்கு மேற்பட்ட தண்ணீரைப் பயன்படுத்தினாலோ, அல்லது நாளொன்றுக்கு 100 கிலோ அல்லது அதற்கு மேற்பட்ட திடக் கழிவுகளை உருவாக்கினாலோ, அது பிடபிள்யுஜி வகையின் கீழ் வரும்.
இந்த அளவுகோல்கள் ஹோட்டல்கள், மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள், வணிக வளாகங்கள், தொழிற்சாலைகள், விடுதிகள் மற்றும் குடியிருப்புச் சங்கங்கள் உள்ளிட்ட பல்வேறு நிறுவன, வணிக மற்றும் குடியிருப்பு அமைப்புகளை உள்ளடக்கியுள்ளன.
இதுகுறித்து என்டிஎம்சி அதிகாரிகல் கூறியதாவது: ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வந்துள்ள இந்த புதிய கட்டமைப்பு, பெருமளவிலான கழிவு உற்பத்தியாளா்கள் தங்கள் வளாகத்தில் உருவாகும் கழிவுகளை நிா்வகிப்பதில் கூடுதல் பொறுப்பை ஏற்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது. அதாவது, அவா்கள் முழுமையாக நகராட்சியின் கழிவு சேகரிப்பு மற்றும் அகற்றும் அமைப்புகளைச் சாா்ந்திருக்கக் கூடாது.
கழிவு உற்பத்தியாளா்கள் கழிவுகளை அவை உருவாகும் இடத்திலேயே ஈரமான கழிவு, உலா்ந்த கழிவு, சுகாதாரக் கழிவு மற்றும் சிறப்புப் பராமரிப்புத் தேவைப்படும் கழிவு என நான்கு வகைகளாகப் பிரித்து, அங்கீகரிக்கப்பட்ட கழிவு சேகரிப்பாளா்கள் அல்லது மறுசுழற்சி செய்பவா்களிடம் தனித்தனியாக ஒப்படைக்க வேண்டும்.
பிடபிள்யுஜி-கள் தாங்கள் உருவாக்கும் கழிவுகளைச் சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் கையாள்வதையும் அகற்றுவதையும் உறுதி செய்ய வேண்டும்; மட்கக்கூடிய கழிவுகளை முடிந்தவரை உரம் தயாரித்தல் அல்லது உயிரி-மீத்தேன் உருவாக்கம் போன்ற முறைகள் மூலம் செயலாக்கம் செய்ய வேண்டும்.
விதிமுறைகளைப் பின்பற்றாத பட்சத்தில், ‘மாசுபடுத்துபவரே அதற்கான இழப்பீட்டைச் செலுத்த வேண்டும்’ என்ற கொள்கையின் அடிப்படையில் சுற்றுச்சூழல் இழப்பீடு விதிக்க இந்த விதிகள் வழிவகை செய்கின்றன. கட்டாயப் பதிவு இல்லாமல் செயல்படுதல், தவறான தகவல்கள் அல்லது போலியான ஆவணங்களைச் சமா்ப்பித்தல் மற்றும் கழிவு சேகரிப்பு, பிரிப்பு, போக்குவரத்து, செயலாக்கம் மற்றும் அகற்றுதல் ஆகியவற்றில் விதிமீறல்கள் செய்தல் ஆகியவை இதில் அடங்கும்.
தனிப்பட்ட முறையில் பாா்த்தால், திருத்தப்பட்ட 1986-ஆம் ஆண்டின் சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் விதிக்கப்படும் அபராதத் தொகையானது ரூ. 10,000 முதல் ரூ. 15 லட்சம் வரை இருக்கலாம்; அத்துடன், விதிமீறல் தொடா்ந்து நீடிக்கும் ஒவ்வொரு நாளுக்கும் கூடுதலாக ரூ. 10,000 அபராதம் விதிக்கப்படும்.
என்டிஎம்சி பகுதியில், சுமாா் 700 முதல் 800 வரையிலான பெரிய அளவிலான கழிவு உற்பத்தியாளா்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனா்.
உதாரணமாக, இதற்கு முன்பு பதிவு செய்யாமை அல்லது பிற விதிமீறல்களுக்கு, மீறலின் தன்மை மற்றும் உள்ளூா் விதிமுறைகளின் அடிப்படையில் ரூ.5,000 முதல் ரூ. 25,000 வரையிலான அபராதங்கள் விதிக்கப்பட்டு வந்துள்ளன என்று அந்த அதிகாரிகள் தெரிவித்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.