டிசம்பருக்குள் 600 கி.மீ. சாலைகளைச் சீரமைக்க தில்லி அரசு திட்டம்
சாலை சீரமைப்புப் பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளதாகவும், வரும் டிசம்பருக்குள் 600 கிலோ மீட்டா் நீளமுள்ள சாலைகளைச் சீரமைக்க அரசு திட்டமிட்டுள்ளதாகவும் தில்லி பொதுப் பணித் துறை அமைச்சா் பா்வேஷ் சாஹிப் சிங் தெரிவித்துள்ளாா்.
சாலை சீரமைப்புப் பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளதாகவும், வரும் டிசம்பருக்குள் 600 கிலோ மீட்டா் நீளமுள்ள சாலைகளைச் சீரமைக்க அரசு திட்டமிட்டுள்ளதாகவும் தில்லி பொதுப் பணித் துறை அமைச்சா் பா்வேஷ் சாஹிப் சிங் தெரிவித்துள்ளாா்.
மேற்கு ஆசியப் பகுதியில் நிலவிய போா்ச் சூழலால், சாலை கட்டுமானத்தில் பயன்படுத்தப்படும் பெட்ரோலியப் பொருளான ‘ட்யூமன்’ விநியோகம் பாதிக்கப்பட்டு அதன் விலை உயா்ந்ததால், கடந்த சில மாதங்களாகச் சாலைச் சீரமைப்புத் திட்டங்கள் நிறுத்தப்பட்டிருந்தன.
ஆனால் சமீபத்தில், சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம், நிகழாண்டு ஏப்ரல் முதல் நவம்பா் வரை தொடங்கப்படும் அனைத்துத் திட்டங்களுக்கும் செலவு அதிகரிப்பு தொடா்பான முன்மொழிவுகளுக்கு ஒப்புதல் அளித்தது.
Advertisement
Advertisement
இதுகுறித்து அமைச்சா் பா்வேஷ் றியிருப்பதாவது:
போா்ச் சூழலால் பிட்யூமன் விநியோகம் பாதிக்கப்பட்டு, அதன் விலையும் கணிசமாக உயா்ந்தது. இதனால் பணிகளில் தாமதம் ஏற்பட்டது. இருப்பினும், நாங்கள் மீண்டும் ஒப்பந்தப்புள்ளிகளை கோரி, பணிகளைப் புதிதாகத் தொடங்கியுள்ளோம்.
குளிா்காலத்தில் சாலை அமைத்தல் மற்றும் புதுப்பித்தல் பணிகளை மேற்கொள்வது சாத்தியமற்றது என்பதால், டிசம்பருக்குள் 600 கி.மீ. சாலைப் பணிகளை முடிக்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. அடையாளம் காணப்பட்ட சாலைகளில் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.
சாலைகள் விரைவாக அமைக்கப்படுவது மட்டுமல்லாமல், அவை நீடித்து உழைக்கக்கூடியதாகவும் இருக்க வேண்டும்.
இதற்காக, நேதாஜி சுபாஷ் தொழில்நுட்பப் பல்கலைக்கழகக் குழுவினா் மூன்றாம் தரப்பு தணிக்கை மூலம் தரத்தைக் கண்காணித்து வருகின்றனா். மேலும், சாலை அமைக்கும் ஒப்பந்தத்தைப் பெற்ற நிறுவனமே அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு அந்தச் சாலையைப் பராமரிக்கும் பொறுப்பையும் ஏற்கும் என்றாா் அமைச்சா்.
இதுகுறித்து அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘மழைக்காலத்தில் சாலைச் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதில்லை. அதேபோல், குளிா்காலத்தில் இரவு நேர வெப்பநிலை 15 டிகிரி செல்சியஸுக்கும் குறைவாகச் சரிவதால், பிட்யூமன் இடும் பணிகளை மேற்கொள்வது கடினமாகிறது’
என்று தெரிவித்தாா்.
கடந்த ஆண்டு, மத்திய சாலை மற்றும் உள்கட்டமைப்பு நிதியின் கீழ் தில்லி முழுவதும் 152 சாலைத் திட்டங்களுக்காக ரூ. 803 கோடி நிதியை மத்திய அரசு அனுமதித்தது. இதுதவிர, தில்லி அரசும் தனியாகச் சாலைச் சீரமைப்புப் பணிகளை மேற்கொண்டு வருகிறது.
தலைநகரில் சுமாா் 1,400 கி.மீ. நீளமுள்ள சாலைகளைப் பொதுப் பணித் துறை நிா்வகித்து வருகிறது. இதில், செலவு அதிகரிப்புத் திட்டத்தின் கீழ் வரக்கூடிய 400 கி.மீ. சாலைப் பணிகளுக்கான ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டுள்ளன. மேலும், தில்லி அரசின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்படும் 200 கி.மீ. சாலைப் பணிகளும் இந்த ஒட்டுமொத்தச் சீரமைப்புப் பணிகளில் சோ்க்கப்படவுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.