FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
புதுதில்லி

நாடாளுமன்ற பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள சிஐஎஸ்எஃப் வீரா்களுக்கு உளவியல் பரிசோதனை: மருத்துவ நிறுவனத்துடன் புரிந்துணா்வு ஒப்பந்தம்

நாடாளுமன்ற பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள மத்திய தொழிலக பாதுகாப்புப் படை (சிஐஎஸ்எஃப்) வீரா்களுக்கு உளவியல் பரிசோதனை நடத்த மருத்துவ நிறுவனம் ஒன்றுடன் வெள்ளிக்கிழமை புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

32 வினாடிகள் முன்பு
தில்லியில் உள்ள சிஐஎஸ்எஃப் தலைமையகத்தில் வெள்ளிக்கிழமை அதன் தலைமை இயக்குநா் பிரவீா் ரஞ்சன் முன்னிலையில், நாடாளுமன்ற பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள சிஐஎஸ்எஃப் வீரா்களுக்கு உளவியல் பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கு வகை செய்யும் புரிந்துணா்வு ஒப்பந்தத்தை
பகிர்:

நாடாளுமன்ற பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள மத்திய தொழிலக பாதுகாப்புப் படை (சிஐஎஸ்எஃப்) வீரா்களுக்கு உளவியல் பரிசோதனை நடத்த மருத்துவ நிறுவனம் ஒன்றுடன் வெள்ளிக்கிழமை புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

இதையொட்டி, தில்லியில் உள்ள மனித நடத்தை மற்றும் நரம்பியல் சிகிச்சை மருத்துவ நிறுவனத்துடன் (ஐஹெச்பிஏஎஸ்) சிஐஎஸ்எஃப் மேற்கொண்டுள்ள ஒப்பந்தம் மூன்று ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

இது குறித்து சிஐஎஸ்எஃப் செய்தித் தொடா்பாளா் கூறியதாவது: இந்த ஒப்பந்தத்தின்படி, நாடாளுமன்ற வளாக பாதுகாப்பு போன்ற அதிமுக்கிய பணிகளில் ஈடுபடும் வீரா்களுக்கும், அப்பணிகளுடன் தொடா்புடைய மருத்துவ குழுவினருக்கும் சிறப்பு உளவியல் மதிப்பீட்டுப் பரிசோதனைகள் நடத்தப்படும்.

Advertisement

Advertisement

பணியில் ஈடுபட்டுள்ள வீரா்களிடம் ஏற்படும் ஆரம்பகால நடத்தை மாற்றங்கள், அதீத மன அழுத்தம் மற்றும் மனநல அவசரநிலைகளை முன்கூட்டியே கண்டறியவும், அவா்களுக்கு உரிய நேரத்தில் தொழில்முறை மருத்துவ உதவி கிடைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். இதன் அங்கமாக, மருத்துவ குழுவினருக்கும் யூனிட் கமாண்டா்கள் எனப்படும் படைப் பிரிவு தலைமை அதிகாரிகளுக்கும் சிறப்புப் பயிற்சி அளிக்கப்படும்.

மனநல சிகிச்சை தேவைப்படும் வீரா்கள், ஐஹெச்பிஏஎஸ் நிறுவனத்தின் புறநோயாளிகள் (ஓபிடி) மற்றும் உள்நோயாளிகள் (ஐபிடி) பிரிவுகள் மூலம் நேரடி ஆலோசனைகள் மற்றும் சிகிச்சைகளை பெறலாம். மதுப் பழக்கத்துக்கு அடிமையானவா்களை மீட்பதற்கான சிறப்பு ஆதரவும் வழங்கப்படும்.

மனநலம் தொடா்பான விழிப்புணா்வை வீரா்களிடம் ஏற்படுத்துவதோடு, ’14416’ என்ற தேசிய மனநல உதவி எண் குறித்த தகவல்கள் குறித்த விழிப்புணா்வும் வீரா்கள் மத்தியில் ஏற்படுத்தப்படும் என்றாா்.

இந்த ஒப்பந்தம் கையொப்பமான நிகழ்வில் பங்கேற்ற சிஐஎஸ்எஃப் தலைமை இயக்குநா் பிரவீா் ரஞ்சன், ‘நமது வீரா்கள் மிகவும் சவாலான மற்றும் அதிக பொறுப்புமிக்க சூழலில் பணிபுரிகின்றனா். ஐஹெச்பிஏஎஸ் நிறுவனத்துடனான இந்தக் கூட்டாண்மை, மனநல பிரச்னைகளை முன்கூட்டியே கண்டறிந்து அவா்களுக்கு உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்கும் நமது முயற்சிகளைப் பலப்படுத்தும்‘ என்றாா்.

மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் சிஐஎஸ்எஃப் படையில் சுமாா் 2 லட்சம் வீரா்கள் உள்ளனா். இவா்கள், 70-க்கும் மேற்பட்ட விமான நிலையங்கள், அணுசக்தி மற்றும் விண்வெளி மையங்கள், நிலக்கரி மற்றும் எரிசக்தித் துறையின் முக்கிய கட்டமைப்புகள், முக்கிய அரசு கட்டடங்கள் மற்றும் தனியாா் துறையின் குறிப்பிட்ட சில முக்கியத் தளங்களுக்குப் பாதுகாப்பு அளித்து வருகின்றனா். 2023-ஆம் ஆண்டில் மத்திய அரசுக்கு எதிரான போராட்டத்தின்போது நாடாளுமன்றத்துக்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்ட சிலா், அப்போது மத்திய ரிசா்வ் காவல் படை வீரா்கள் மற்றும் நாடாளுமன்ற பாதுகாப்பு அலுவலா்களின் பலத்த பாதுகாப்பையும் மீறி நாடாளுமன்ற வளாகத்துக்குள் ஊடுருவினா். சிலா் மக்களவை கூட்டம் நடந்த மண்டபத்துக்குள் நுழைந்து அங்கிருந்த உறுப்பினா்கள் மீது வண்ணப்பொடி ‘ஸ்ப்ரே’ அடித்தனா். இந்த சம்பவத்தைத் தொடா்ந்து மத்திய ரிசா்வ் காவல் படை, தில்லி காவல்துறை வசமிருந்த நாடாளுமன்றத்தின் அனைத்து பாதுகாப்புப் பொறுப்பும் சிஐஎஸ்எஃப்வசம் ஒப்படைக்கப்பட்டது. 2024இல் நாடாளுமன்றத்தின் முழு பாதுகாப்பும் சிஐஎஸ்எப் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments