1963 - மதுரை ஸ்ரீ மீனாக்ஷி கோயில் கும்பாபிஷேகம்! கண்கொள்ளா காட்சியை 4 லட்சம் மக்கள் கண்டனர்!
1963 ஆம் ஆண்டு நடைபெற்ற மதுரை ஸ்ரீ மீனாக்ஷி அம்மன் திருக்கோயில் கும்பாபிஷேகத்தைப் பற்றி...
காலம் காலமாக மன்னர்களாலும் பெரு வணிகர்களாலும் பக்தர்களாலும் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்துள்ள கோயில்களில், திருப்பணிகள் நிறைவடைந்த பின் நடைபெறும் மிக முக்கிய ஆன்மிக நிகழ்வே திருக் குடமுழுக்கு அல்லது கும்பாபிஷேகம். ஆலய கோபுரங்கள், விமானங்கள், சந்நிதிகள், கருவறைத் தெய்வங்கள், பரிவார தெய்வங்களின் திருப்பணிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, வேத மந்திரங்கள் முழங்க புனித நீர் கலசங்களில் நிரப்பப்பட்டு இறைவனுக்கு அர்ப்பணிக்கப்படுகிறது.
பல நூற்றாண்டுகளாக எண்ணற்ற திருப்பணிகளையும், பல்வேறு காலகட்டங்களில் நடைபெற்ற திருக்குடமுழுக்குகளையும் கண்ட சாட்சியாக மதுரை மீனாட்சியம்மன் கோயில் இன்று கம்பீரமாக நிற்கிறது. ஒவ்வொரு குடமுழுக்கும் ஆலயத்தின் தெய்வ சக்தியைப் புதுப்பிப்பதாக ஐதீகம்.
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் கடந்த நூற்றாண்டில் 1922-23, 1963, 1974, 1995 மற்றும் 2009 ஆகிய ஆண்டுகளில் ஐந்து முறை குடமுழுக்கு நிகழ்வுகள் வெகுவிமரிசையாக நடத்தப்பட்டிருக்கின்றன. நாடு சுதந்திரம் பெற்ற பின்னர் முதல்முறையாக 1963 ஆம் ஆண்டு நடைபெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு பற்றி பார்க்கலாம் - தினமணியில் வெளியான செய்தி - உள்ளவாறே.
Advertisement
Advertisement
*
மதுரை, ஜூன் 28 - அர்ச்சகர்கள், பண்டிதர்கள் வேத மந்திரங்களைக் கோஷிக்க, மதுரை கோயில் மகா கும்பாபிஷேகம் சுபமுகூர்த்தத்தில் மிகவும் சிறப்பாக நடந்தேறியது. தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் சுமார் 4 லட்சம் ஆண்களும், பெண்களும் இக்கண்கொள்ளா காட்சியைக் கண்டனர்.
கோபுரத்துக்குச் செல்லும் ஏணியின் உச்சியில் காஞ்சி காமகோடி ஸ்ரீ சங்கராச்சார்ய சுவாமிகளும், புது பெரியவாளும் நின்று கொண்டிருந்தனர். சென்னை, கேரள கவர்னர்கள், மத்ய உதவி மந்திரிகளான ஸ்ரீ பட்டாபிராமன், ஸ்ரீமதி சௌந்தரம் ராமச்சந்திரன், ராஜ்ய அறநிலைய மந்திரி ஸ்ரீ பக்தவத்ஸலம் ஆகியோரும் கோயிலின் மேடை மீது இருந்தனர்.
மகா கும்பாபிஷேகத்தைக் கண்டு, ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேசுவரர் அனுகிரஹத்தைப் பெறுவதற்காக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஆண்களும் பெண்களும் திரளாக வந்திருந்தனர். தெருக்களும், கோயில் கட்டடங்களும் நிறைந்திருந்தன. கோயிலைச் சுற்றிலுமுள்ள கட்டிடங்களின் மாடிகளில் ஒரே ஜனக் கூட்டமாக இருந்தது.
வானளாவிய கோபுரங்களின் மீதும் தங்க விமானங்கள் மீதும், விக்கிரஹங்கள் மீதும் புண்ணிய தீர்த்தம் அபிஷேகம் செய்யப்பட்டது. நாதஸ்வர இசையுடன் திருவாசகம், தேவாரம் ஆகியவை ஓதப்பட்டது. பண்டிதர்கள் வேத மந்திரங்களைக் கோஷித்தனர். காலை 10 மணிக்கு போலீஸ் நிலையத்திலிருந்து கலர் சுடர் வெளியிடப்பட்டது. அடுத்த ஐந்து நிமிடங்களில் வைபவம் துவங்கும் என்பதை இது அறிவித்தது. 10-5க்கு இந்த சமிக்ஞை மீண்டும் தரப்பட்டது.
அர்ச்சகர்கள் தங்களது தலைகளில் தீர்த்தக் கலசங்களுடன் ஏணிகளில் ஏறி கோபுரங்களில் உச்சியை அடைந்தனர். கோபுரங்களின் உச்சியிலுள்ள எல்லா கலசங்களின் மீதும் தீர்த்தத்தை அபிஷேகம் செய்தனர். இவ்வைபவம் இரு நிமிட நேரம் நீடித்தது. கலசங்களுக்கு பட்டு வஸ்திரங்களை சாத்தினர்.
கோபுரங்கள் தெய்வங்களைப் போன்று புனிதமாகக் கருதப்படுவதால் அவற்றுக்கு கற்பூர தீபாராதனை நடந்தது. இக்கண்கொள்ளா காட்சியைப் பார்த்து மெய் மறந்து நின்ற லட்சக்கணக்கான மக்கள் கரங்களைக் குவித்துப் பக்திப்பாடல்களைப் பாடினர்.
ஊர்க் காவல் படை, சமூக சேவா ஸ்தாபனங்கள் ஆகியவற்றின் உதவியுடன் 3500-க்கு அதிகமான போலீஸ் அதிகாரிகளும், போலீஸ் வீரர்களும் கூட்டத்தை ஒழுங்குப்படுத்தினர்.
இவ்வைபவத்துக்குப் பின்னர் குடங்களில் சேகரிக்கப்பட்ட தீர்த்தம் கூடியிருந்த ஜனங்கள் மீது தெளிக்கப்பட்டது. கும்பாபிஷேக வைபவத்தைக் காண வந்திருந்த பிரமுகர்களுக்கு சிறிய உத்தரணியில் தீர்த்தம் விநியோகிக்கப்பட்டது.
70 வயதை நெருங்கிக் கொண்டிருக்கும் காஞ்சி காமகோடி பீடாதிபதி ஆச்சார்யாளும், புதுப்பெரியவாளும் ஸ்ரீ மீனாக்ஷி கோயில் கோபுரத்துக்குச் செல்லும் ஏணியின் உச்சியில் நின்று கொண்டிருந்தனர். சென்னை கவர்னர் ஸ்ரீ மேதி, கேரள கவர்னர் ஸ்ரீ கிரி, யூனியன் உதவி மந்திரிகளான ஸ்ரீ பட்டாபிராமன், ஸ்ரீமதி செளந்தரம் ராமச்சந்திரன், ராஜ்ய அறநிலைய மந்திரி ஸ்ரீ பக்தவத்ஸலம் ஆகியோர் உள்பட 30 ஆயிரம் விசேஷ பிரமுகர்கள் நன்கொடையாளர்கள் கோவில் மாடிகளில் திரண்டிருந்தனர்.
கோயில் வாயிலில் கவர்னர்கள்
பூர்ண கும்பம் இதர கோயில் மரியாதைகளுடன் வரவேற்கப்பட்டன. தர்மபுரம், மதுரை ஆதின கர்த்தாக்களும் வைபவத்தில் கலந்து கொண்டனர். அநேக கிருஸ்துவர்கள், முஸ்லிம்கள், சீக்கியர்கள், சில அந்நிய நாட்டினர், சில கான்ஸல் பிரதிநிதிகள் ஆகியோர் ஒரு கோயில் மாடியிலிருந்து கும்பாபிஷேக வைபோகத்தைக் கண்டனர்.
12 கோபுரங்கள், ஸ்ரீ சுந்தரேசுவரர், ஸ்ரீ மீனாக்ஷி விக்ரங்களுக்கு மேல் உள்ள இரு தங்க விமானங்கள், ஸ்ரீ மீனாக்ஷி, ஸ்ரீ சுந்தரேசுவரர் விக்ரகங்கள் ஆகியவை மீது ஒரே சமயத்தில் அபிஷேகம் நடைபெற்றது. விக்ரகங்களுக்கு தெய்வ சக்தி, அபிஷேகம் மூலம் மீண்டும் ஆவாஹனம் செய்யப்பட்டுவிட்டதால் அவற்றை தற்போது தரிசிக்கலாம். கவர்னர்களும், மந்திரிகளும் முதலில் சென்று ஸ்ரீ மீனாக்ஷியையும் ஸ்ரீ சுந்தரேசுவரரையும் தரிசித்தனர். இரு விக்ரகங்களுக்கும் பின்னர் மகா அபிஷேகம் நடந்தது.
எண்ணெய், இளநீர், தேன், இதர பழ ரசங்கள், பால், தயிர் ஆகியவற்றைக் கொண்டு அபிஷேகம் நடைபெற்றது. மகா அபிஷேகத்துக்குப் பின் நகைகள், வழக்கமான சம்பிரதாயத்துடன் விக்ரகங்கள், அலங்கரிக்கப்பட்டன. இன்று பிற்பகல் 2 மணியிலிருந்து கர்ப்ப கிரஹத்துக்குப் பொதுமக்கள் சென்று தரிசிக்கலாம்.
அதிகாலையில் தீர்த்த கலசங்கள் யாக சாலையிலிருந்து, பல்வேறு கோபுரங்களுக்கும், விக்ரகங்களுக்கும் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டன. இன்றிரவு ஸ்ரீ மீனாக்ஷியும், ஸ்ரீ சுந்தரேசுவரரும் ஆபரண அலங்காரங்களுடன் பவனி வருவர்.
திருமணத்துக்கு முன் ராணி மீனாக்ஷி போரில் சுந்தரேசுவரரை தோற்கடித்ததாக ஐதீகம். மதுரை ராணியாக மதித்து பொதுமக்கள் முதலில் ஸ்ரீ மீனாக்ஷியை வணங்குகின்றனர். பின்னரே இதர தெய்வங்களை வழிபடுகின்றனர்.
கிழக்குக் கோபுரமும் வழக்கமும்
மன்னர்களுக்கும் மக்களுக்கும் ஆண்டவனிடத்தில் பக்தி நிரம்பியிருந்த போதிலும், அவர்களிடையே விந்தையான வழக்கங்கள் இருந்து வந்திருக்கின்றன. சுவாமி சன்னதிக்கு நேராகவுள்ள கிழக்குக் கோபுர வாசல் வழியாக சுவாமி எழுந்தருளும் வழக்கமில்லை. இது விந்தையாக இருக்கிறது.
தேவதாராதனைக்குச் சம்பந்தமில்லாத சம்பவம் காரணமாக மக்கள் இந்த வழக்கத்தைக் கொண்டு வந்துவிட்டனர்.
கோவில் ஊழியருக்கு வரி!
சொக்கநாத நாயக்கர் ஆட்சிக் காலத்தில், அரண்மனை அதிகாரிகள், கோயில் ஊழியர்களுக்கு எல்லாம் வரி விதித்தனர். அங்கீகரிக்க முடியாத இந்த வரியை ஊழியர்கள் ஆட்சேபித்தனர்.
தங்கள் ஆழ்ந்த வருத்ததைத் தெரிவிப்பதற்காக ஊழியர் ஒருவர் கிழக்குக் கோபுரத்தின் உச்சியிலேறி உயிர்த்தியாகம் செய்தார். உடனே அதிகாரிகள் தவறுணர்ந்து, இந்த அநியாய வரியை ரத்து செய்தார்கள். இன்னமும் அந்த ஊழியரின் ஆவி இக்கோபுரத்தில் வட்டமிட்டுக் கொண்டிருப்பதாக மக்கள் நம்புகிறார்கள்.
மீனாக்ஷி ஆலயத்தில் மீனில்லாத் திருக்குளம்
ஸ்ரீ மீனாக்ஷி ஆலயத்தில் மற்றெரு அதிசயமும் உண்டு. ஸ்ரீ மீனாக்ஷியம்மை திருக்கோயில் கொண்டுள்ள ஆலயத்தின் முன்பாக உள்ள பொற்றாமரைக் குளத்தில் மீன்கள் கிடையாது என்பது தேவியின் திருவிளையாடல்களில் ஒன்றாகும்.
கயற்கண் பற்றி பாடியுள்ள கவிஞர்கள் பலர் சங்கப்பலகை ஏறிய திருக்குளமும் இதுவே. பொற்றாமரைக் குளத்தில் நீந்தி விளையாடும் பொன் மீன்களைக் கண்ணுற்ற பசியால் வாடிய கொக்கு, ஒன்று பறந்து வந்தது.
மீனாக்ஷியின் கருணை நிரம்பிய கண்களிலிருந்து தீக்கனல் வீசுவதைக் கண்டதும் நாரை தவறுணர்ந்தது. மரணத் தருவாயில், கதிமோட்சமடைய விரும்பி வரமும் மற்ற பறவைகளுக்கும் ஆசை பிறக்கும். ஆதலால், பொற்றாமரையில், மீன்கள், தவளைகள் ஆகிய நீர்வாழ இனங்களில்லாமல் அருள்புரியக் கோரியது. ஸ்ரீ மீனாக்ஷி அருள் கூர்ந்து மீனினம் வளராமல் செய்தாரென்பது ஐதீகம்.
[1963, ஜூன் 29 தேதியிட்ட தினமணி நாளிதழிலிருந்து]
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.