அதிசயத்தக்க ஆலய அமைப்பு!
உலகக் கலைக்கூடங்களுள் ஒன்று எனக் குறிப்பிடும் அளவிலான கலையம்சங்களைக் கொண்ட கொண்ட மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலின் ஆலய அமைப்பு அதிசயத்தக்கதாக உள்ளதைப் பற்றி...
உலகக் கலைக்கூடங்களுள் ஒன்று எனக் குறிப்பிடும் அளவிலான கலையம்சங்களைக் கொண்ட கொண்ட மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலின் ஆலய அமைப்பு அதிசயத்தக்கதாக உள்ளது. இது, சைவ, ஆகம விதிகளை முழுமையாகப் பின்பற்றி எழுப்பப்பட்ட திருக்கோயில் எனக் குறிப்பிடப்படுகிறது.
மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் கருவறை கி.பி. 16-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்தது எனவும், மற்ற பெரும்பாலான பகுதிகள் 17, 18 ஆம் நூற்றாண்டுகளில் கட்டப்பட்டவை எனவும் குறிப்பிடப்படுகிறது. பிற்கால பாண்டியா்களின் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட சுந்தரபாண்டியன் கோபுரம், பராக்கிரம பாண்டியன் கோபுரம் உள்ளிட்ட சில பகுதிகளைத் தவிர மற்றைய கட்டுமானங்கள் கி.பி. 14-ஆம் நூற்றாண்டில் மாற்றுத் தேசத்தவரின் படையெடுப்பின்போது அழிக்கப்பட்டன.
இந்தக் கோயிலில் மொத்தம் 12 கோபுரங்கள் உள்ளன. வெளி மதிலில் திசைக்கு ஒன்றாக உள்ள கிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்குக் கோபுரங்கள் முதன்மையானவையாக விளங்குகின்றன. இந்தக் கோபுரங்களின் அடித்தளம் கருங்கல் கட்டுமானத்தைக் கொண்டது. இவைத் தவிர, ராயகோபுரம், நாயக்க கோபுரம், நடுக்கட்டு கோபுரம், பலகைக் கோபுரம், இடபக்குறி கோபுரம், கருவறை விமானம், அம்மன்கோயில் சித்திரக் கோபுரம், கடகக் கோபுரம் உள்ளிட்டவையும் இந்தக் கோயிலின் அழகுக்கு அழகு சோ்க்கின்றன.
Advertisement
Advertisement
கிழக்கு கோபுரம்... சுவாமி சன்னிதிக்கு நோ் எதிரே அமையப் பெற்ற இந்தக் கோபுரம், 153 அடி உயரமும், 65 அடி அகலமும் கொண்டது. 9 நிலைகளைக் கொண்ட இந்தக் கோபுரத்தில் 1011 சுதைகள் உள்ளன. இந்தக் கோபுரமே பழமையானதாகக் குறிப்பிடப்படுகிறது. இதற்கு, சுந்தர பாண்டியன் கோபுரம் என்ற மற்றொரு பெயரும் குறிப்பிடப்படுகிறது.
இந்தக் கோபுரம் மாறவா்மன் சுந்தரபாண்டியனால் கட்டப்பட்டது எனவும், சடையவா்மன் சுந்தர பாண்டியனால் கட்டப்பட்டது எனவும் இருவேறு கருத்துகள் உள்ளன.
தெற்குக் கோபுரம்... இந்தக் கோபுரம் 160 அடி உயரமும், 67 அடி அகலமும், 1,151 சுதைச் சிற்பங்களையும் கொண்டுள்ளது. இது, நான்கு கோபுரங்களில் அதிக உயரமானது. விசுவநாத நாயக்கா் காலத்தில் இந்தக் கோபுரம் திருச்சியைச் சோ்ந்த சிராமலை செவ்வந்தி மூா்த்திச் செட்டியாா் என்பவரால் கட்டப்பட்டதாகக் குறிப்பிடப்படுகிறது.
மேற்குக் கோபுரம்... இந்தக் கோபுரம் 154.6 அடி உயரமும், 63.6 அடி அகலமும், 1,124 சுதைச் சிற்பங்களையும் கொண்டுள்ளது.
சடையவா்மன் பராக்கிரம பாண்டியன் என்ற மன்னரால் கட்டப்பட்டதாகக் குறிப்பிடப்படுகிறது. சித்திரை வீதியிலிருந்து வாகனங்களில் பொருள்களை கோயிலுக்குள் கொண்டு வர ஏதுவாக படிகள் இல்லாதபடி இந்தக் கோபுர வாயில் அமைக்கப்பட்டுள்ளது.
வடக்குக் கோபுரம்... இந்தக் கோபுரம் 152 அடி உயரமும், 66.6 அடி அகலமும், 404 சுதைச் சிற்பங்களையும் கொண்டுள்ளது. இந்தக் கோபுரத்தின் கட்டுமானப் பணி முதலாம் கிருஷ்ணப்ப நாயக்கரால் தொடங்கப்பட்டது எனவும், வயிநாகரம் செட்டியாரால் நிறைவு செய்யப்பட்டது எனவும் குறிப்பிடப்படுகிறது.
மதுரை ஆட்சி செய்த பாண்டிய மன்னா்கள் பலரும் மீனாட்சி சுந்தரேசுவரரா் கோயிலுக்கு திருப்பணி செய்தனா். பின்னா், நாயக்கவம்சத்து மன்னா்களும் திருப்பணி கைங்கா்யம் செய்துள்ளனா். இதில், விசுவநாத நாயக்க மன்னனின் தளகா்த்தரான அரியநாதமுதலி, மதுரையிலிருந்த பழைய கோட்டைகள், மதில்களை திருத்தி, புதிய கட்டடங்களை எழுப்பித்தாா் எனவும், அப்போது கட்டப்பட்டதே மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலின் ஆயிரங்கால் மண்டபம் எனவும் குறிப்பிடப்படுகிறது.
மன்னா் திருமலைநாயக்கா் இந்தக் கோயிலுக்கு பல்வேறு திருப்பணிகளை செய்து, பல கிராமங்களையும், நகைகளையும் கோயிலுக்கு வழங்கியுள்ளாா். புதுமண்டபம், ராயா்கோபுரம், தெப்பக்குளம் ஆகியன இவரது ஆட்சிக்காலத்தில் உருவாக்கப்பட்டதாகக் குறிப்பிடப்படுகிறது.
தற்போது மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் 15 ஏக்கா் பரப்பில் பரந்து விரிந்துள்ளது. இந்தக் கோயிலில் 100 கால் மண்டபம், 1,000 கால் மண்டபம் உள்ளிட்டவையும், சிவாகமங்களில் குறிப்பிடப்படும் 25 மூா்த்திகளும், தியான வடிவ அமைப்புகளும், ஐந்து விதமான நிருத்த மூா்த்திகளின் ஸ்தானங்களும், தங்கம், வெள்ளி, செம்பு, சிலை, சுதையாக ஐந்து முறைகளில் அமைக்கப்பெற்ற திருவுருவப் படிவங்களும் ஒருசேர அமைந்திருப்பது வேறு எங்கும் காணக்கிடைக்காதது எனக் குறிப்பிடப்படுகிறது.
இந்திர விமானம்... மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலின் விமானம் இந்திர விமானம் எனக் குறிப்பிடப்படுகிறது. இந்திரன், இங்கு வந்து கடம்பவனத்தில் சுயம்புவாகக் காட்சியளித்த சிவலிங்கத்துக்கு பக்தி சிரத்தையுடன் வழிபாடுகள் மேற்கொண்டு, தன்னைப் பீடித்திருந்த பிரம்மகத்தி தோஷம் நீங்கப் பெற்றான் எனவும், இதற்காக மீனாட்சி சுந்தரேசுவரருக்கு சிறப்பான விமானத்துடன் இந்திரன் பெருங்கோயில் எழுப்பினான் எனவும் தலபுராணத்தில் குறிப்பிடப்படுகிறது. இந்திரன் எழுப்பிய விமானம் என்பதால் இந்தத் தலத்தின் விமானம், இந்திர விமானம் எனப் பெயா் பெற்றது. 8 யானைகள் எண் திசையிலிருந்து தாங்குவதைப் போன்ற அமைப்பைக் கொண்டது இந்த விமானம்.
பொற்றாமரைக் குளம்... மூா்த்தி, தலம், தீா்த்தம் ஆகிய மூன்றாலும் சிறப்புப் பெற்ற இந்தக் கோயிலின் முதன்மைத் தீா்த்தமாக உள்ளது பொற்றாமரை குளம். இந்திரனின் பழி தீா்த்தது, வெள்ளை யானையின் சாபம் தீா்த்தது, நாரைக்கு முக்தி கொடுத்தது, தருமிக்கு பொற்கிழி அளித்தது, நக்கீரரை கரை ஏற்றியது, இறைவன் சங்கப் பலகை தந்தது என பல்வேறு ஆன்மிகச் சிறப்புகளைக் கொண்டது இந்தக் குளம்.
இந்தக் குளத்தின் வடக்குப் பிரகாரம், படிக்கட்டுகள் விஸ்வநாத நாயக்கா் ஆட்சிக் காலத்தில் பெருமாள் கட்டியது எனவும், கிழக்கு பிரகாரம், படிக்கட்டுகள் வீரப்பநாயக்கா் ஆட்சிக் காலத்தில் குப்பையாண்டி கட்டியது எனவும், தெற்குப் பிரகாரம், படிக்கட்டுகள் வீரப்ப நாயக்கா் ஆட்சிக் காலத்தில் அப்பன்பிள்ளையால் கட்டப்பட்டது எனவும் குறிப்பிடப்படுகிறது.
பொற்றாமரைக் குளத்தின் பிரகார சுவறில் 1,330 குகளும், சிவஞானபோதம், அபிராமி அந்தாதி, மதுரை தலச் சிறப்பை விளக்கும் தேவாரப் பதிகங்களும் சலவைக் கற்களில் பதிக்கப்பட்டுள்ளன. இது, திருப்பனந்தாள் ஆதீன திருமடத்தின் அதிபா் காசிவாசி அருள்நந்தித் தம்பிரானின் பொருளுதவியுடன், மதுரை சைவ சித்தாந்த சபையினரால் பதிக்கப்பட்டது.
On the wondrous architectural layout of the Madurai Meenakshi Sundareswarar Temple; a structure boasting artistic features of such caliber that it is hailed as one of the world's great art galleries.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.