FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

மதுரையின் மாண்பு - மக்களின் ஆலயம்!

1963 ஆம் ஆண்டு கும்பாபிஷேகத்தின்போது தினமணி சுடரில் வெளியான கட்டுரை - தமிழ் இலக்கியம் தவழ்ந்து வளர்ந்த இடம்; சரித்திரச் சிறப்பும்,கோயிற் பெருமையும் வாய்ந்த பெருநகராம் மதுரையின் மாண்புகளைப் பற்றி...

15 செப்டம்பர் 2026, 6:40 pm IST
கூடல்நகர் மீனாட்சி சுந்தரேசர் - (தூண்சிற்பம்) - படம்: தினமணி.
பகிர்:

~ கே.லக்ஷ்மிநரசிம்மன் பி.எஸ்ஸி. பி. எல்.

தமிழ் இலக்கியம் தவழ்ந்து வளர்ந்த இடம்; சரித்திரச் சிறப்பும்,கோயிற் பெருமையும் வாய்ந்த பெருநகர், நாற்சதுர வீதிகளின் நடுவே, வனப்புமிக்க வண்ணச் சிற்ப எரில் காட்டி, வானளாவும் கோபுரங்கள், ஈசன் திருவிளையாடல் நிகழ் கூடல் நகர் மீனாட்சிசுந்தரர் ஆலயத்தின் சிறப்பை உலகப் பிரசித்தமாக்குகின்றன. பெருஞ்செலவில் திருப்பணி நிறைவேறி பதினான்கு கோபுரங்களுக்கும் ஒருங்கே ஜூன் 28 ஆம் தேதி நடைபெறும் மகா கும்பாபிஷேகத்தையொட்டி மதுரையின் மாண்பையும், அங்கயற்கண்ணி ஆலயச் சிறப்பையும் விளக்கும் கட்டுரையை படங்களுடன் பிரசுரிக்கிறோம்.

ஐந்து லட்சம் மக்கள் வாழும் சரித்திரப் பிரசித்தியும் வாணிப முக்கியத்துவமும் வாய்ந்த மதுரையம்பதியின் மய்யமாகத் திகழும் மாபெரும் மீனாட்சி அம்மை ஆலயத்தில் அண்மையில் நிகழவிருக்கும் கும்பாபிஷேகம் தமிழ் மக்கள் எல்லோர் இதயத்தையும் கவர்ந்து நிற்கின்றது.

Advertisement

Advertisement

பாண்டியர் காலத்திலும் நாயக்கர் காலத்திலுமாக படிப்படியாகப் பல கட்டுமான வேலைகளால் புதுப்பிக்கப்பட்ட இவ்வாலயத்தின் சரித்திரம் தமிழ் மக்களின் நாகரிகத்துடன் இணைந்திருக்கிறது.

தற்சமயம் நிற்கும் கோபுரங்களும் கட்டுமானங்களும் கடந்த 16-வது நூற்றாண்டையும் அதன் பிற்காலத்தையும் சார்ந்தவை இவைகள். திராவிட கலாச்சாரத்திற்கும், விஜயநகர பொற்காலத்தின் இறுதிக் கட்டத்தின் மேன்மைக்கும் எடுத்துக்காட்டாக விளங்குகின்றன.

குடிமக்களின் வாழ்க்கையில் ஒன்றி நிற்பது ஆலயம். குறிப்பாக இந்துக்களின் வாழ்வு ஒவ்வொரு அடியிலும் மதத்துடனும் ஆலயத்துடனும் பிணைந்து நிற்கிறது. மக்களது மதத்தின் மேன்மைக்கும் வாழ்வின் இலட்சியங்களுக்கும் ஒரு கேந்திரமாக ஆலயம் விளங்குகிறது.

ஆலவாய் கோயிலின் வானளாவும் கோபுரங்கள். - படம்: தினமணி.

நகரின் எழில்

வைகையின் இரு கரைகளிலும் அமைந்துள்ள மதுரை நகரின் மத்தியில் கம்பீரமாக நிற்கும் மீனாட்சி ஆலயம் தொன்மையானது. பாரதமெங்கும் பிரசித்தமானது.

சிற்பக் கலையிலேயே மதுரை வழி என்று ஒன்று தோன்றக் காரணமாக இருந்தது. இக்கோயிலில் மீனாட்சிக்கு ஒன்றும், சுந்தரேசுவரருக்கு ஒன்றுமாக இரண்டு ஆலயங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

தென்வடல் நீளம் 725 அடி. கீழ்மேல் நீளம் 850 அடிகள் உள்ள திருக்கோயில் 15 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ளது. 12 கோபுரங்களும் இரண்டு விமானங்களும் இக்கோயிலை அலங்கரிக்கின்றன. இவைகளும் தெற்குக் கோபுரம் 170 அடி உயரத்திற்கு வானளாவ நிற்கிறது.

கோயில் சிற்பம்

கிழக்கே உள்ள பிரதான வாயிலில் நுழைந்தால் அஷ்டசக்தி மண்டபம், முதலி மண்டபம், பொற்றாமரை தடாகம், யாளி மண்டபம் (கிளிக் கட்டி மண்டபம்) வழியாக மீனாட்சியம்மன் சந்நிதியை அடைகிறோம்.

அம்பாளை தரிசனம் செய்த பின், நடுக்கட்டு வழியாக, இங்கே மலைபோல் வீற்றிருக்கும் மகா கணபதியையும் அர்ச்சித்துவிட்டு சுந்தரேசுவரர் சந்நிதியை வந்தடைந்து சொக்கநாதரை வழிபடுகிறோம். பிறகு கம்பத்தடி மண்டபத்தையடைந்து அங்கே நிறுவப்பட்டுள்ள எட்டு தூண்களில் செதுக்கப்பட்டுள்ள பல பல சிற்ப வடிவங்களில் நமது மனதைக் கொடுத்து நிற்கிறோம்.

கம்பத்தடி மண்டபத்திற்கு கிழக்கே வசந்தராய மண்டபமும் இதற்குத் தெற்கே கல்யாண மண்டபமும் இருக்கின்றன. வடக்கே உள்ள ஆயிரங்கால் மண்டபம் 16-வது நூற்றாண்டில் கட்டப்பட்டது. 250 அடிக்கும் 240 அடிக்கும் உள்ள இந்த மண்டபத்தின் சிற்பங்களின் அழகும், நுட்பமும் பிரமிக்கத்தக்க வகையில் உள்ளன. கோயிலுக்கு வெளியே அமைந்துள்ள புதுமண்டபம் 330 அடி நீளமும் 105 அடி அகலமும் உள்ளது. சிற்பிகளின் திறமை இம்மண்டபத்தையும் பரிமளிக்கச் செய்கிறது.

திருப்பணிகள்

இப்பெரிய கோயிலில் 1877-ஆம் ஆண்டில் நாட்டுக்கோட்டை நகரத்தார் ஒரு கும்பாபிஷேகம் நடத்தினார்கள். பிறகு 1922 - ஆம் ஆண்டில் திரு. அழகப்ப செட்டியார் விமானங்களைப் புதுப்பித்து கிளிக்கூடு மண்டபத்துக்கு வர்ணம் பூசி கும்பாபிஷேகம் நடத்தினார்.

அதற்குப் பின் பெரும் அளவில் கோவிலைப் புதுப்பித்து கும்பாபிஷேகம் நடத்த இப்பொழுதுதான் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. ஜனநாயக யுகத்தில் மக்களாகவே முன்வந்து ஆலயத்தைப் புனருத்தாரணம் செய்ய முற்பட்டது குறிப்பிடத்தக்கது. பெரிய மடங்களும், தமிழ்நாட்டிலுள்ள மற்ற ஆலயங்களும், வணிகர்களும், பாமர மக்களும் தங்கள் செல்வத்தை திருப்பணிக்கு அர்ப்பணித்திருக்கிறார்கள்.

ஆகவே, இப்பொழுது நடைபெற்ற திருப்பணியும் நடைபெறவிருக்கும் கும்பாபிஷேகமும் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தவை என்பதில் ஐயமில்லை.

புதுமைப் பொலிவு

சுமார் 20 லட்ச ரூபாய் செலவில் நடந்திருக்கும் திருப்பணி வேலையில் மூன்றடுக்கு சுவாமி கோபுரம் (5 அடுக்கு), அம்மன் கோபுரம் (5 அடுக்கு), நடுக்கட்டுக் கோபுரம், கிழக்கு ஆடி வீதி ஸ்வாமி கோபுரம், வடக்காடி வீதி கோபுரம், கம்பு வளைவு வடிவத்திலுள்ள 9 அடுக்கு தெற்குக் கோபுரம், கிழக்குக் கோபுரம், மேலக் கோபுரம், வடக்குக் கோபுரம், அம்மன் கோபுரம் விமானம் ஆகியவைகளும், சுவாமி சந்நிதியில் உள்ள திருவிளையாடல் சிற்பங்களும் புதுப்பிக்கப்பட்டுள்ளன.

தவிரவும் அஷ்டசக்தி மண்டபம், நகர மண்டபம், கிளிக்கூடு மண்ட பம், புதுமண்டபம் இவைகளிலுள்ள சிற்ப வேலைகளும் புதுப்பிக்கப்பட்டு வர்ணம் பூசப்பட்டது. திருப்பரங்குன்றத்தில் உள்ள சுப்பிரமணிய சுவாமி ஆண்டவனின் 117 அடி உயரமுள்ள ஏழு அடுக்குக் கோபுரமும் புதுப்பிக்கப்பட்டது;

விழாச் சிறப்பு

இந்திய ஜனாதிபதி டாக்டர் ராதாகிருஷ்ணன் கும்பாபிஷேக வைபவத்தில் பங்கெடுத்துக் கொள்ளவிருப்பது மிகவும் பொருத்தமானது. மதுரை மக்கள் செய்த பாக்கியம் மக்கள் தலைவன், இந்திய அரசாங்கத்தின் பிரதிநிதி என்பது மட்டுமல்லாது, வேத விற்பன்னர், சமயவாதி என்ற முறையிலும் அன்னாரது விஜயம் குறிப்பிடத்தக்கது.

நூற்றுக்கு மேற்பட்டசிவாச்சாரியார் கள் யாகம் வளர்த்து பூர்ணாஹுதிகள் செய்து கும்பங்களில் புண்ய நதிகளின் தீர்த்தம் நிறைந்து அபிஷேகங்களை நடத்தி கும்பாபிஷேகத்தை நடத்துவார்கள்.

காமகோடி பெரியவர்களும், சிருங்கேரி பெரியவர்களும், ஆதீன கர்த்தாக்களும் மற்ற பெரியவர்களும் இவ்வைபவத்தில் கலந்துகொள்வது காணக் கண்கொள்ளாக் காட்சியாகும். இத்தருணத்தில் மதுரையில் வாழ்பவர்களும் மதுரைக்கு விஜயம் செய்பவர்களும் மீனாட்சி சுந்தரேசுவரரின் பூரண அருளுக்குப் பாத்திரமாவார்கள் என்பது திண்ணம்.

[1963, ஜூன் 24 தேதியிட்ட தினமணி சுடர் வார அநுபந்தத்திலிருந்து...]

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments