FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் இந்திர விமானம்!

மதுரை மீனாட்சி திருக்கோயிலில் சுந்தரேசுவரர் சந்நிதி, கம்பத்தடி மண்டபம், வீர வசந்தராய மண்டபம், ஆயிரங்கால் மண்டபம் போன்றவை நாயக்கர் காலச் சிற்பங்கள், சிற்பக்கலை மற்றும் கட்டடக்கலைக்குச் சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழ்கின்றன.

12 செப்டம்பர் 2026, 11:07 pm IST
மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் இந்திர விமானம்
பகிர்:

மதுரை மீனாட்சி திருக்கோயிலில் சுந்தரேசுவரர் சந்நிதி, கம்பத்தடி மண்டபம், வீர வசந்தராய மண்டபம், ஆயிரங்கால் மண்டபம் போன்றவை நாயக்கர் காலச் சிற்பங்கள், சிற்பக்கலை மற்றும் கட்டடக்கலைக்குச் சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழ்கின்றன.

சுந்தரேசுவரர் கோயில் கருவறை விமானத்தின் அமைப்பு புராண - தலவரலாற்றின் அடிப்படையில் அமைந்துள்ளது.

கருவறையின் வெளிப்புறச் சுவரில் கம்பீரமான யானைச் சிற்பங்களைக் காணலாம். இதற்கு 'இந்திர விமானம்' என்று பெயர். எட்டுத் திசைகளிலும் எட்டு யானைகள் தாங்கி நிற்கும் அற்புதக் கோலத்தை இங்கே காணலாம். இவற்றை திக்கஜங்கள் என அழைப்பர். இவ் விமான அமைப்பு வேறெங்கும் காணப்படாத அமைப்பாகும்.

Advertisement

Advertisement

இவ்வரிய அமைப்பு கொண்ட கருவறை விமானத்தை மதுரை நாயக்க மன்னன் விசுவநாத நாயக்கர் கி.பி. 1550-இல் கட்டினார் எனக் கூறப்படுகிறது.

மாறுபட்ட அமைப்பு கொண்ட இந்த விமானத்தைப் பற்றிய குறிப்புகள் திருவிளையாடற்புராணத்தில் காணப்படுகின்றன. மதுரையில் சிவபெருமான் செய்த திருவிளையாடல்களை பற்றி புராணங்கள் இரண்டு உண்டு. இவற்றுள் முற்பட்டது பெரும்பற்றப்புலியூர் நம்பி இயற்றிய திருவிளையாடல் புராணம். இது கி.பி. 13-ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்டது.

பரஞ்சோதி முனிவரால் கி.பி. 10-ஆம் நூற்றாண்டில் மிக விரிவான முறையில் ஆலவாய் மான்மியம் என்னும் திருவிளையாடற் புராணம் அருளப்பெற்றது. இவை இரண்டிலும் இறைவன் சுந்தரேசுவரர் பெருமான் எழுந்தருளியுள்ள இந்திர விமானம் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன.

பெரும்பற்றப்புலியூர் நம்பி இயற்றிய திருவிளையாடல் புராணத்தில் கூறப்படும் வரலாற்றில் மதுரை முன்பு கடம்ப வனமாக இருந்தது. இந்திரன் இங்கு வந்தபொழுது மழையிலும் வெயிலிலும் இருந்த சொக்கநாதப் பெருமானைக் கண்டு வழிபட்டான். விருத்தாசுரன் என்ற அரக்கனைக் கொன்ற பாவம் போக்க இந்திரன் சிவபெருமானுக்குக் கோயில் அமைக்க விரும்பி தெய்வத் தட்சனிடம் சென்று, 'நீ தெய்வ விமானத்தை யானைமீது கொண்டு வா' என்றான்.

இந்திரனால் அமைக்கப்பட்டதால் 'இந்திர விமானம்' என அழைக்கப்பட்டது. இது புராண வரலாறு. ஆனால், ஓர் உருவகமாகவும் கருவறை குறிப்பிடப்படுகிறது. இந்த மாபெரும் உலகு ஒரு பேரண்டம். இதனை எட்டு யானைகள் என்ற அஷ்ட திக்கஜங்கள் தாங்குகின்றன. இவற்றில் உட்பொருளாய் இருந்து அருள்புரிகின்ற அவன் சொக்கநாதர் பெருமான்.

இறைவன் எழுந்தருளியுள்ள 'இந்திர விமானம்' பற்றிய குறிப்புகள் பரஞ்சோதி முனிவர் அருளிய திருவிளையாடற் புராணத்திலும் காணப்படுகின்றன. இந்திரன் விருத்திராசுரன் என்ற அரக்கனைக் கொன்ற பாவம் போக்க கடம்பவனத்தில் இருந்த சிவலிங்கத்தை வணங்கி அருள் பெற்றான். கதிரவன் ஒளி, சிவலிங்கத்தின்மீது படுவதைக்கண்டு தன் வெண்கொற்றக் குடையால் நிழல் செய்ய எண்ணினான்.

அப்போது விண்ணிலிருந்து மாணிக்க விமானம் ஒன்று இறங்கி வந்தது. தேவதச்சனால் உண்டாக்கப்பட்ட அவ்விமானத்தை எட்டு யானைகளும், 32 சிங்கங்களும், 64 சிவகணங்களும் தாங்கியிருந்தன. அவ்விமானத்தை பெருமானுக்கு சாத்திய இந்திரன், வானுலகத்தில் இருந்து வழிபாட்டுக்குரிய பொருள்களைக் கொண்டுவந்து பொற்றாமரைத் தீர்த்தத்தில் நீராடி வழிபாடு செய்தான் எனக் கூறுகிறது.

வெள்ளையானை சாபம் தீர்த்த படலத்தில் (பாடல் 477), 'இந்திர விமானம்' பற்றிய குறிப்பு காணப்படுகிறது. இந்திரனுடைய ஐராவதம் என்ற வெள்ளை யானை துருவாச முனிவர் அளித்த மலரை அதன் சிறப்பு அறியாமல் கீழே தள்ளி காலால் மிதித்தது. இதனால் இந்திரனும் ஐராவதமும் துர்வாச முனிவரின் சாபத்தைப் பெற்று வருந்தினர். தான் பெற்ற சாபம் நீங்க பொற்றாமரைக் குளத்தில் நீராடி, இறைவனை அபிஷேகம் செய்து வழிபட்டு நலம் அடைந்தனர்.

ஐராவதம் இறைவனிடம் இந்த விமானத்தை தாங்கும் எட்டு யானைகளோடு, தானும் ஒன்பதாவது யானையாக விமானத்தின் முதுகில் தாங்க வேண்டும் என்ற தனது விருப்பத்தைக் கூறியது. இறைவன் மனமகிழ்ந்து இந்திரன் 'என்னிடம் மிக்க அன்பு கொண்டவன். நீ அவனைச் சுமந்து செல்வது எனக்கு மகிழ்ச்சி அளிக்கும்' எனக்கூற, ஐராவதம் விண்ணுலகம் சென்றதாக ஒரு பாடல் குறிக்கிறது.

மாமனாக வந்து வழக்குரைத்த படலத்தில் கருவறை விமானம் 'வந்து வானகடு போழ்ந்த மணிமுடி விமானம் கோயிற்' எனக் குறிப்பிடப்படுகிறது. (பாடல் 1933)

சுந்தரேசுவரர் சந்நிதியில் கருவறையை அடுத்து அர்த்தமண்டபம், மகா மண்டபம் அமைந்துள்ளது. மகாமண்டபத்தில் வெளிப்புறச் சுவரில் கீழ்ப்பகுதியில் இறைவன் அருளிய 64 திருவிளையாடல் நிகழ்ச்சிகள் சுதைச் சிற்பங்களாக அமைக்கப்பட்டுள்ளன. இதில் நான்மாடக்கூடலான படல வரலாற்றில் மதுரை கோயிலைக் குறிக்கும் பொழுது யானைகளுடன் கூடிய விமானத்தை சுதைச் சிற்ப வடிவமாக அமைத்து இருப்பதைக் கண்டு மகிழலாம்.

திருவரங்கம் கோயிலுக்கு மதுரை நாயக்க மன்னர்கள் பெரும் தொண்டு செய்துள்ளனர். இங்கிருந்த மண்டபம் ஒன்றில் தந்த வேலைப்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இம்மண்டபத்தில் இருந்த தந்தச் சிற்பங்கள் எல்லாம் ஸ்ரீரங்கநாதர் கோயில் கலைக்கூடத்தில் காட்சிக்காக வைத்துள்ளனர். இதில் ஒன்று மதுரை கோயில் வடிவத்தை இந்திர விமானமாக யானைகளுடன் வடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் காரைக்குடி அருகே உள்ள ஒரு கோயிலிலும், காரமடைக் கோயிலிலும் இத்தகைய அமைப்பினைக் காணலாம்.

யானைகளுடன் கூடிய இந்திர விமானத்தைப் புராணம் மற்றும் தல வரலாற்று அடிப்படையில் கருவறையை அமைத்திருக்கின்றனர் என்பதை அறியும் பொழுது நாம் மகிழ்ச்சி அடைகிறோம். மதுரை திருக்கோயிலுக்குச் செல்லும்பொழுது இதனைக் கண்டு போற்றுவோம்.

இந்திரன் பழிதீர்த்த படலத்தில் ஒரு பாடலில் (பாடல் : 432) 'சுடர்விடு விமானம் மேய சுந்தர விடங்கா போற்றி' என்று போற்றப்படுகின்றது.

தொல்லியல் துறை (ஓய்வு), சென்னை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments