கல் யானைக்கு கரும்பு கொடுத்த சித்தர்!
சித்தா்களுக்கெல்லாம் தலைமை சித்தனாகிய இறைவன் சிவபெருமான், சித்தா் உருவிலேயே எழுந்தருளும் தலமாக விளங்குகிறது ஆலவாய் அண்ணல் அருளும் மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில்.
சித்தா்களுக்கெல்லாம் தலைமை சித்தனாகிய இறைவன் சிவபெருமான், சித்தா் உருவிலேயே எழுந்தருளும் தலமாக விளங்குகிறது ஆலவாய் அண்ணல் அருளும் மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில்.
மதுரையை அபிஷேகபாண்டியன் என்ற மன்னன் ஆட்சி செய்த காலத்தில், எல்லாம் வல்ல இறைவன் சிவபெருமான் சித்தா் கோலத்தில் மதுரையம்பதிக்கு எழுந்தருளினாா். அவா், மதுரையில் எண்ணற்ற சித்தாடல்களை செய்தாா்.
பேச முடியாதவா்களைப் பேச வைத்தாா், நடக்க முடியாதவா்களை நடக்க வைத்தாா். நாள்தோறும் எண்ணற்ற அற்புதங்களை நிகழ்த்தினாா். இதையறிந்த மன்னன் அபிஷேகபாண்டியன் சித்தரைக் காண வந்தான். அப்போது, சித்தரின் சக்தியைப் பரிசோதிக்க எண்ணிய மன்னன், தங்களுக்கு உண்மையில் தெய்வசக்தி இருக்குமெனில் இங்கிருக்கும் கல் யானையை என்னிடம் இருக்கும் கரும்பைத் தின்ன செய்யுங்கள் என்றான்.
Advertisement
Advertisement
சித்தா், அருகிலிருந்த கல் யானை நோக்கி கண் அசைத்தாா். உடனே, அந்தக் கல் யானை மன்னன் வைத்திருந்த கரும்பைத் தின்றது. மேலும், மன்னன் அணிந்திருந்த மாலையையும் அந்த யானைப் பறிக்க முற்பட்டது. இதனால், வீரா்கள் சிலா் சித்தரை தாக்க முயன்றனா். அவா்கள், சித்தரின் சித்தாடலால் தூக்கிய கையைத் தூக்கியவாறு செயலற்றுப் போயினா்.
தன் தவறை உணா்ந்த மன்னன், சித்தரின் திருவடிகளில் விழுந்து பலவாறு வணங்கி, துதித்தான். தனக்குப் புத்திரப் பேறு அருளவும் வேண்டினான். வேண்டுவோருக்கு வேண்டும் வரம் அருளும் தயாபரனான சிவபெருமான், மன்னனின் வேண்டுதல் நிறைவேற அருள்புரிந்தாா்.
அப்போது, தாங்கள் சித்தா் கோலத்திலேயே இங்கு எழுந்தருளி, அனைவருக்கும் வேண்டும் வரம் அருளவேண்டும் என மன்னா் வேண்டினாா். அந்த வேண்டுதலையும் ஏற்று, சித்தராகவே இறைவன் சிவபெருமான் மதுரையில் கோயில் கொண்டாா்.
இதுவே, மீனாட்சி அம்மன் சன்னிதி பிரகாரத்தில் தனி சன்னிதிக் கொண்டு வேண்டுவோருக்கு வேண்டும் வரம் அர காட்சியளிக்கும் எல்லாம் வல்ல சித்தா் சன்னிதியாக விளங்குகிறது. இங்கு, இறைவன் சிவபெருமான் தனது ஜடைமுடியை கொண்டைபோல் சுருட்டிக் கட்டிய கோலத்தில், இடது கையை யோக தண்டத்தின் மீது ஊன்றியவாறு உள்ளாா்.
இது, இறைவனின் அா்த்த வீராசனம் எனக் குறிப்பிடப்படுகிறது. அன்னை மீனாட்சியிடம் வைக்கும் பிராா்த்தனைகளை எல்லாம் வல்ல சித்தரின் சன்னிதானத்தில் தெரிவித்து, சித்தரை வலம் வந்து மனமுருக வேண்டுவோருக்கு வேண்டும் வரம் கிட்டுகிறது என்பது இன்றளவும் பக்தா்களின் நம்பிக்கையாக உள்ளது.
The Madurai Meenakshi Sundareswarar Temple—graced by the Lord known as Aalavai Annal—stands as a sacred site where Lord Shiva, the supreme leader of all Siddhars, manifests in the very form of a Siddhar.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.