பிள்ளையார்பட்டியில் விநாயகர் சதுர்த்தி விழா தீர்த்தவாரி உற்சவம்
விநாயகர் சதுர்த்தியையொட்டி சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் வியாழக்கிழமை தீர்த்தவாரி உற்சவம் நடைபெற்றது.
விநாயகர் சதுர்த்தியையொட்டி சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் வியாழக்கிழமை தீர்த்தவாரி உற்சவம் நடைபெற்றது.
இக்கோயிலில் சதுர்த்தி பெருவிழா செப். 4 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாள்கள் நடைபெற்ற விழாவில் 2 ஆம் திருநாள் முதல் 8 ஆம் திருநாள் வரை காலை வெள்ளிக் கேடகத்தில் மூஷிக வாகனத்தில் திருவீதி உலா நடைபெற்றது. செப். 9 ஆம் தேதி கஜமுஹாசுர சம்ஹாரமும், செப். 12 ஆம் தேதி தேரோட்டமும் நடைபெற்றது. மேலும் மாலை 4.30 மணி முதல் இரவு 10 மணி வரை சந்தனக்காப்பு அலங்காரத்தில் மூலவர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 10 ஆம் திருநாளான வியாழக்கிழமை விநாயகர் சதுர்த்தியையொட்டி காலை 10.30 மணிக்கு விநாயகர் தங்க மூஷிக வாகனத்தில் குளக்கரை எதிரே எழுந்தருளினார். அதனைத் தொடர்ந்து குளக்கரையில் அங்குசதேவருக்கும், சண்டிகேஸ்வரருக்கும் பல்வேறு திரவியங்களில் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் பிச்சைக்குருக்கள் தலைமையில் சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க பூக்களால் அலங்கரிக்கப்பட்ட அங்குசதேவர் மூன்று முறை குளத்தில் மூழ்கி எழுந்தார்.
தொடர்ந்து உற்சவர் விநாயகர் தங்க மூஷிக வாகனத்தில் திருவீதி உலா வந்தார். பின்னர் பகல் 2 மணிக்கு 18 படி பச்சரிசி, வெள்ளம், கடலைப்பருப்பு, பாசிப் பருப்பு, எள்ளு உள்ளிட்டவைகளைக் கொண்டு 13 கிலோ எடையில் செய்யப்பட்ட கொழுக்கட்டை மூலவர் கற்பக விநாயகருக்கு படைக்கப்பட்டு வழிபாடு நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து இரவு பஞ்சமூர்த்திகளின் திருவீதி உலா நடைபெற்றது. விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.