மதுரை கூடலழகர் கோயிலில் வைகாசி திருவிழா தேரோட்டம்!
மதுரை கூடலழகர் கோயிலில் வைகாசி திருவிழா தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்று வருவது குறித்து...
மதுரை கூடலழகர் கோயிலில் வைகாசி பெருந்திருவிழா தேரோட்டம் இன்று(மே 31) கோலாகலமாக நடைப்பெற்று வருகிறது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் மேற்கொண்டு வருகின்றனர்.
மதுரை நகரின் மத்தியில் அமைந்துள்ள கூடலழகர் பெருமாள் திருக்கோயில் 108 வைணவ தலங்களில் பிரசித்தி பெற்ற கோயிலாகும். இந்தக் கோயிலில் வைகாசி பெருந்திருவிழா 23 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதனைத் தொடர்ந்து 14 நாள்கள் தினமும் காலை, மாலையில் பெருமாள் சிம்மம், கருடன், அனுமார், சேஷ, யானை, குதிரை உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
Advertisement
Advertisement
விழாவின் சிகர நிகழ்ச்சியான திருத்தேரோட்ட வைபவம் இன்று காலை முதல் கோலாகலமாக நடைபெற்று வருகிறது.
இதனை முன்னிட்டு மதுரை டி.எம்.கோர்ட் பகுதியில் அலங்கரிக்கப்பட்ட தேரில் அருள்மிகு சுந்தரராஜ பெருமாள். ஸ்ரீதேவி பூதேவி தாயார்களுடன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். சிறப்பு பூஜைகளைத் தொடர்ந்து நூற்றுக்கணக்கான பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்தனர்.
தெற்கு மாட வீதி, திருப்பரங்குன்றம் சாலை, நேதாஜி சாலை, மேலமாசி வீதி உள்ளிட்ட முக்கிய வீதிகளில் வழியாக வலம் வந்த தேரினை சாலைகளின் இருபுறங்களிலும் நின்றிருந்த ஆயிரகணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.
நாளை அலங்கார திருமஞ்சனமும், நாளை மறுநாள் சுவாமி குதிரை வாகனத்தில் வைகையாற்றில் இறங்கி ராமராயர் மண்டபத்தில் எழுந்தருளுகிறார். அன்று இரவு அங்கு தசாவதார நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இதைத் தொடர்ந்து கருட வாகனத்தில் புறப்பாடு நடைபெறுகிறது.
கூடலழகர் பெருமாள் கோவில் தேரோட்டத்தை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் வழி நெடுகிலும் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். கோவிந்தா கோவிந்தா என்ற பக்தி முழக்கத்தோடு பக்தர்கள் தேரினை வடம் பிடித்து இழுத்துச் செல்கின்றனர். தேரோட்டத்தை முன்னிட்டு 300-க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்
The chariot procession of the Vaikasi festival is being celebrated with great grandeur at the Koodal Azhagar Temple in Madurai.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.