மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு! கோயிலுக்குள் பக்தர்கள் அனுமதி, பொது தரிசனம் எப்போது?
மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு நிறைவுற்றதும் கோயிலுக்குள் பக்தர்கள் அனுமதி, பொது தரிசனம் எப்போது தொடங்கும் என்பது குறித்து..
மதுரையில் அமைந்துள்ள அருள்மிகு மீனாட்சி - சுந்தரேஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழா, வியாழக்கிழமை (செப்.17) காலை 7.40 மணி முதல் 8.10 மணிக்குள் நடைபெற உள்ளது.
இவ்விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள் என்பதால், முன்னேற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் மதுரைக்கு வந்த வண்ணம் உள்ளனர். விழா ஏற்பாடுகளை அறநிலையத்துறை, மதுரை மாநகராட்சி, காவல்துறை, மருத்துவத்துறை, தீயணைப்புத்துறை என பல்வேறு துறைகளின் ஒருங்கிணைப்புடன் நடைபெறுகிறது.
Advertisement
Advertisement
வண்ண வண்ண நுழைவுச் சீட்டு சொல்வது என்ன?
மதுரை மீனாட்சியம்மன் கோயில் கும்பாபிஷேகத்தைக் காண முன் அனுமதி பெற்றவர்களுக்கு பழுப்பு, இளஞ்சிவப்பு, நீலம், கருநீலம், பச்சை, மஞ்சள், சிவப்பு நிறங்களில் அனுமதிச்சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு நிறத்திற்கும் எந்தெந்த பகுதிகளிலிருந்து வர வேண்டும் என்பது உள்ளிட்ட தகவல்கள் வழங்கப்பட்டுள்ளன. இது தவிர விவிஐபி-களுக்கு தங்க நிற வட்டப் பட்டை (Round Badge) வழங்கப்பட்டுள்ளது.
பொது தரிசனம் எப்போது?
திருக்குட நன்னீராட்டு நிகழ்வு நிறைவுற்ற பிறகு பொது தரிசனத்திற்கு காலை 10 மணி முதல் பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்படுகின்றனர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சித்திரை வீதிகளிலும் கோவிலுக்குள்ளும் பக்தர்கள் வரிசையாகச் சென்று தரிசனம் செய்ய ஏதுவாக சவுக்கு கம்புகளைக் கொண்ட தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. பக்தர்கள் உள்ளே மற்றும் வெளியே பாதுகாப்பாகச் செல்லும் வகையில் 7 வழிகள் உருவாக்கப்பட்டுள்ளன.
4 நாள்களுக்கு கட்டணமின்றி தரிசனம்!
பக்தர்களின் போக்குவரத்து வசதியைக் கருத்திற் கொண்டு சுமார் ஆயிரம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. நகர் முழுவதும் குடமுழுக்கு நிகழ்வுகளைக் காணும் வகையில் 53 இடங்களில் மிகப் பிரமாண்டமான எல்இடி திரைகள் அமைக்கப்பட்டுள்ளன.
செப்டம்பர் 17 முதல் 20ஆம் தேதி வரை மக்கள், பக்தர்கள் கட்டணமின்றி தரிசனம் செய்வதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கோவிலை சுற்றி உள்ள மிகப் பழமையான கட்டடங்களை பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து அவற்றில் ம க்கள் ஏறி கும்பாபிஷேகத்தை பார்வையிடக்கூடாது என அறிவுறுத்தி அவ்விடங்களை தடை செய்துள்ளனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.