FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டதும் மிகுந்த அதிர்ச்சியடைந்தேன்: சூர்யகுமார் யாதவ்

இந்திய அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டதும் மிகுந்த அதிர்ச்சியடைந்ததாக சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார்.

சூர்யகுமார் யாதவ் - படம் | AP
பகிர்:

இந்திய அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டதும் மிகுந்த அதிர்ச்சியடைந்ததாக சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் இந்தியாவில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பைத் தொடரில் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது. இதன் மூலம், தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது.

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நிறைவடைந்த பிறகு, இந்திய அணி அயர்லாந்து மற்றும் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 தொடர்களில் விளையாடியது. இந்திய அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து சூர்யகுமார் யாதவ் நீக்கப்பட்டு, அணியின் புதிய கேப்டனாக ஷ்ரேயாஸ் ஐயர் நியமிக்கப்பட்டார்.

Advertisement

Advertisement

இந்த நிலையில், இந்திய அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டதும் மிகுந்த அதிர்ச்சியடைந்ததாக சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: இந்திய அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்ட பிறகு, நான் 40-50 நாள்கள் வீட்டிலிருந்தேன். அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டது எனக்கு முற்றிலுமாக அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இப்போது நான் என்ன செய்ய வேண்டும். கிரிக்கெட் விளையாட வேண்டுமா? வேண்டாமா? என சிந்தித்தேன். என்னுடைய மனதுக்குள் நிறைய விஷயங்கள் ஓடிக் கொண்டிருந்தன.

அந்த நேரத்தில் என்னுடைய மனைவி, 20 ஆண்டுகளுக்கு முன்பு கிரிக்கெட் விளையாட ஆரம்பித்தபோது எதற்காக விளையாட ஆரம்பித்தீர்கள் என்பதை சற்று யோசித்துப் பாருங்கள். ஏனெனில், கிரிக்கெட்டினை நீங்கள் மிகவும் பைத்தியக்காரத்தனமாக நேசிக்கிறீர்கள். அதே அதீத ஆர்வத்தை மீண்டும் கொண்டு வாருங்கள் என்றார்.

அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான தொடர்களுக்கான இந்திய அணியில் எனது பெயர் இடம்பெறவில்லை. நான் மெல்லிய புன்னகையுடன் அந்த சூழலை கடந்துவிட்டேன். நான் கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கப்படுவேன் என எதிர்பார்க்கவில்லை. அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு அணியை சிறப்பாக வழிநடத்திச் செல்ல வேண்டும் என நினைத்தேன். அடுத்த டி20 உலகக் கோப்பை மற்றும் ஒலிம்பிக் போட்டிகள் என்னுடைய மனதில் இருந்தன.

ஆனால், இரண்டு பேர் ஒரே மாதிரியாக சிந்திக்க முடியாது. இந்திய அணி நிர்வாகம் அணியின் எதிர்காலத்தைக் கருத்தில்கொண்டு இந்த முடிவை எடுத்திருக்கலாம். அதனால், நான் இந்த விஷயம் குறித்து பெரிதாக பேசவில்லை. ஷ்ரேயாஸ் ஐயருடன் இணைந்து அதிகம் கிரிக்கெட் விளையாடியுள்ளேன். அவர் மிகவும் சிறந்த வீரர், நல்ல மனிதர் மற்றும் சிறந்த கேப்டன் என்பது எனக்குத் தெரியும்.

ஷ்ரேயாஸ் ஐயரை எதற்காக கேப்டனாக தேர்ந்தெடுத்தார்கள் என்பது குறித்து நான் யோசிக்கவில்லை. ஆனால், எனக்கு இந்த முடிவு சற்று ஏமாற்றமாக இருந்தது. ஏனெனில், கடந்த இரண்டு ஆண்டுகளில் நாங்கள் ஒரு டி20 தொடரில்கூட தோற்கவில்லை. உலகக் கோப்பை மற்றும் ஆசிய கோப்பைகளை வென்றோம். அப்படியிருக்க, அணியில் ஏன் திடீரென மாற்றம் கொண்டுவர வேண்டும் என்பது சற்று ஏமாற்றமளித்தது. எல்லாம் நன்றாக சென்று கொண்டிருக்கும்போது, எதற்காக கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டேன் என்பதை தொடர்ந்து சிந்தித்துக் கொண்டிருந்தேன் என்றார்.

35 வயதாகும் சூர்யகுமார் யாதவ் இந்திய அணிக்காக 113 டி20 போட்டிகளில் விளையாடி 3272 ரன்கள் குவித்துள்ளார். அதில் 4 சதங்கள் மற்றும் 25 அரைசதங்கள் அடங்கும். அவரது தனிநபர் அதிகபட்ச ஸ்கோர் 117.

அதிரடியாக விளையாடுவதை வழக்கமாகக் கொண்ட சூர்யகுமார் யாதவ், கடந்த 2024 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பைத் தொடருக்குப் பிறகு ஒரு பேட்டராக சிறப்பாக செயல்படவில்லை.

கடந்த 2024 டி20 உலகக் கோப்பைத் தொடருக்குப் பிறகு 42 போட்டிகளில் விளையாடியுள்ள சூர்யகுமார் யாதவ், 25.88 சராசரியுடன் 932 ரன்கள் மட்டுமே எடுத்தது குறிப்பிடத்தக்கது.

summary

Suryakumar Yadav has stated that he was deeply shocked when he was removed from the Indian team's captaincy.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments