நைட் கிளப்பில் அடிதடி... மீண்டும் சர்ச்சையில் சிக்கிய கேப்டன் பென் ஸ்டோக்ஸ்! பதவி பறிபோகுமா?
நைட் கிளப் தகராறால் மீண்டும் சர்ச்சையில் சிக்கிய பென் ஸ்டோக்ஸை பற்றி...
இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் நைட் கிளப் தகராறால் அவரது பதவி பறிபோகும் சூழல் உருவாகியுள்ளது.
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.
இந்தத் தொடரின் முதல் போட்டி லார்ட்ஸில் நடைபெற்ற நிலையில், இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி 115 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்து வருகிறது. இவ்விரு அணிகளும் மோதும் இரண்டாவது போட்டி வருகிற ஜூன் 17 ஆம் தேதி ஓவல் திடலில் நடைபெறுகிறது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், போட்டியில் வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் கேப்டன் பென் ஸ்டோக்ஸும், வேகப்பந்து வீச்சாளர் கஸ் அகிட்சன் இருவரும் சேர்ந்து வெற்றியைக் கொண்டாடுவதற்காக அங்குள்ள நைட் கிளப்புக்குச் சென்றதாகக் கூறப்படுகிறது.
அங்கு, இங்கிலாந்தின் முன்னணி ரக்பி கிளப்களில் ஒன்றான 'சரசென்ஸ் - Saracens' அணியின் அகாதெமி வீரர் ஒருவருடன் வாக்குவாதம் ஏற்பட்டதில், அவர்களுக்குள் கைகலப்பாக மாறியுள்ளது. அந்த ரக்பி வீரர் அட்கின்சனைத் தாக்க முயன்றுள்ளார். அப்போது, அது தவறுதலாக வீரர்களுடன் இருந்த இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் பாதுகாப்பு அதிகாரியின் மீது பட்டதில் அவர் பலத்த காயமடைந்தார்.
அதன்பின் காயமடைந்த அந்த அதிகாரிக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தச் சம்பவத்தில், நல்வாய்ப்பாக பென் ஸ்டோக்ஸ், கஸ் அட்கின்சன் இருவருக்கும் எந்தக் காயமும் ஏற்படவில்லை.
இதுகுறித்து இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள தகவலின்படி, “கடந்த திங்கள்கிழமை இரவு விடுதிக்கு ஸ்டோக்ஸ், அகிட்சன் இருவரும் சென்ற போது இந்தச் சம்பவம் ஏற்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்தில் தகவல்களைத் திரட்டி வருகிறோம். அடுத்தப் போட்டிக்கான அணி விரைவில் அறிவிக்கப்படும்” என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த ஜனவரி மாதம் ஆஸ்திரேலியாவில் நடந்த ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து அணி 1 - 3 என்ற கணக்கில் படுதோல்வி அடைந்தது. இந்தத் தோல்விக்கு வீரர்கள் அதிகளவு மது அருந்துவதாகவும், ஒரு வரன்முறையற்று நடந்துகொள்வதாகவும் கடுமையான விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டன.
இதனால், இங்கிலாந்து அணி வீரர்கள் இரவு நேரங்களில் வெளியே செல்வதற்கு கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அதைத்தொடர்ந்து வீரர்களுக்கு நள்ளிரவு விதி மீண்டும் அமல்படுத்தப்பட்டது.
இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் விதிகளை கேப்டன் ஸ்டோக்ஸ் மீறியுள்ளதால், அவர் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவருக்குப் பதிலாக ஹாரி புரூக் புதிய கேப்டனாக நியமிக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.