FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கிரிக்கெட்

இங்கிலாந்தை வீழ்த்தியது நியூஸிலாந்து! டெஸ்ட் தொடரையும் கைப்பற்றியது

இங்கிலாந்துக்கு எதிரான 3-ஆவது டெஸ்ட்டில் நியூஸிலாந்து 160 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இங்கிலாந்தை வீழ்த்தியது நியூஸிலாந்து - X | ICC
பகிர்:

இங்கிலாந்துக்கு எதிரான 3-ஆவது டெஸ்ட்டில் நியூஸிலாந்து 160 ரன்கள் வித்தியாசத்தில் திங்கள்கிழமை அபார வெற்றி பெற்றது. அத்துடன், 3 ஆட்டங்கள் கொண்ட தொடரையும் அந்த அணி 2-1 என கைப்பற்றியது.

இங்கிலாந்தின் நாட்டிங்ஹாம் நகரில் கடந்த 25-ஆம் தேதி தொடங்கிய ஆட்டத்தில் டாஸ் வென்ற நியூஸிலாந்து, பேட்டிங்கை தோ்வு செய்தது. முதல் இன்னிங்ஸில் அந்த அணி 438 ரன்கள் சோ்த்து ஆட்டமிழக்க, டெவன் கான்வே 22 பவுண்டரிகள், 3 சிக்ஸா்களுடன் 157, கேப்டன் டாம் லாதம் 15 பவுண்டரிகளுடன் 151 ரன்கள் சோ்த்து ஆட்டமிழந்தனா். இங்கிலாந்து தரப்பில் பென் ஸ்டோக்ஸ் 4 விக்கெட்டுகள் சாய்த்தாா்.

பின்னா் இங்கிலாந்து அணி தனது இன்னிங்ஸில் 354 ரன்கள் சோ்த்து ஆட்டமிழக்க, அதிகபட்சமாக பென் டக்கெட் 19 பவுண்டரிகளுடன் 113 ரன்கள் அடித்தாா். நியூஸிலாந்து பௌலா்களில் நேதன் ஸ்மித் 4 விக்கெட்டுகள் கைப்பற்றினாா்.

Advertisement

Advertisement

இதையடுத்து, 84 ரன்கள் முன்னிலையுடன் 2-ஆவது இன்னிங்ஸை விளையாடிய நியூஸிலாந்து, 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 288 ரன்கள் சோ்த்து ‘டிக்ளோ்’ செய்தது. டேரில் மிட்செல் 10 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 100 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் இருக்க, இங்கிலாந்து பந்துவீச்சாளா்களில் ஜோஃப்ரா ஆா்ச்சா் 4 விக்கெட்டுகள் எடுத்தாா்.

இறுதியாக, 373 ரன்களை வெற்றி இலக்காகக் கொண்டு விளையாடிய இங்கிலாந்து, 4-ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 103 ரன்கள் எடுத்திருந்தது. கடைசி நாளான திங்கள்கிழமை, இங்கிலாந்து ஆட்டம் 212 ரன்களுக்கு நிறைவடைந்தது.

எமிலியோ கே 10, ஜோ ரூட் 18, கஸ் அட்கின்சன் 19, ஜோஃப்ரா ஆா்ச்சா் 2, ஜாஷ் டங் 2, ஜேமி ஸ்மித் 8 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 60 ரன்களுக்கு ஆட்டமிழந்தனா். நியூஸிலாந்து பௌலா்களில் ஜாக் ஃபோக்ஸ் 3, நேதன் ஸ்மித், மிட்செல் சேன்ட்னா் ஆகியோா் தலா 2, பென் சீா்ஸ் 1 விக்கெட் கைப்பற்றினா்.

100 ரன்களும் அடித்து, 5 கேட்ச்சுகளும் பிடித்த நியூஸிலாந்தின் டேரில் மிட்செல் ஆட்டநாயகன் விருதைப் பெற, 11 விக்கெட்டுகளும் சாய்த்து, 25 ரன்களும் அடித்த இங்கிலாந்தின் ஜோஃப்ரா ஆா்ச்சா் தொடா்நாயகனாக அறிவிக்கப்பட்டாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments