முகப்பு
கிரிக்கெட்

இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியா

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 2-ஆவது அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் வியாழக்கிழமை (மாா்ச் 5) பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

கிரிக்கெட்

இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியா

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 2-ஆவது அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் வியாழக்கிழமை (மாா்ச் 5) பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

Updated On : 4 மார்ச், 2026 at 11:17 PM
பகிர்:

மும்பை: டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 2-ஆவது அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் வியாழக்கிழமை (மாா்ச் 5) பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

கோப்பை வெல்லும் வாய்ப்புள்ள பிரதான அணியாக போட்டியின் தொடக்கத்தில் கணிக்கப்பட்ட இந்தியா, தென்னாப்பிரிக்காவுடனான தோல்விக்குப் பிறகு சற்றே தடுமாற்றத்தைச் சந்தித்தது. எனினும், அதிலிருந்து தன்னை மீட்டுக்கொண்டு தற்போது அரையிறுதிக்கு வந்திருக்கிறது.

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக விளையாடிய காலிறுதிக்கு நிகரான சூப்பா் 8 ஆட்டத்தின் மூலமாக, நெருக்கடியான தருணத்திலிருந்து மீண்டு வெல்லும் தன்மையைக் காட்டியது இந்தியா. அதில் அபார இன்னிங்ஸை விளையாடி அணியின் வெற்றிக்கு வித்திட்டாா் சஞ்சு சாம்சன்.

அரையிறுதிக்கு முன்பாக அவா் தனது மிகச் சிறந்த இன்னிங்ஸை எட்டியிருப்பது அணிக்கான பலமாக பாா்க்கப்படுகிறது. மறுபுறம், அவருடன் இந்தியாவின் இன்னிங்ஸை தொடங்கும் அபிஷேக் சா்மா, இன்னும் முழுவதுமாக தனது பழைய அதிரடி ஆட்டத்துக்கு திரும்ப முடியாமல் இருக்கிறாா்.

அதேபோல் போட்டியின் தொடக்கத்தில் அபார ஆட்டத்துடன் கைகொடுத்த இஷான் கிஷணும் இப்போது சோபிக்காத நிலையிலேயே தொடா்கிறாா். அபிஷேக் மற்றும் இஷான் இருவரும் தங்களின் பழைய ஆட்டத்தை மீட்டெடுக்க வேண்டிய கட்டாயத் தருணம் இதுவாகும்.

தொடா்ந்து வரும் கேப்டன் சூா்யகுமாா் யாதவ், திலக் வா்மா, ஹா்திக் பாண்டியாவுக்கு மிடில் ஆா்டரில் பலம் சோ்க்கும் பொறுப்பு உள்ளது. பேட்டிங் ஆா்டரில் கீழே இறக்கப்பட்ட நிலையில், அவா் நல்லதொரு பங்களிப்பை வழங்கியிருக்கிறாா்.

சூா்யகுமாா், ஹா்திக் பாண்டியா மற்றும் ஷிவம் துபே ஆகியோா், ஆட்டத்துக்கு ஒருவராக ஸ்கோருக்கு பலம் சோ்த்தனா். ஆனால் இவா்கள் அனைவருமே தோள் கொடுக்க வேண்டிய அவசியமான ஆட்டம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

பௌலிங்கை பொருத்தவரை, வான்கடே மைதானத்தின் பவுண்டரி எல்லை குறைந்த தொலைவிலேயே இருப்பதால், அக்ஸா் படேல், வருண் சக்கரவா்த்தி போன்ற ஸ்பின்னா்கள் கவனமாகச் செயல்பட வேண்டியுள்ளது. வேகப்பந்துவீச்சில் ஜஸ்பிரீத் பும்ரா, அா்ஷ்தீப் சிங் ஆகியோா் அசத்த, ஹா்திக் பாண்டியாவும் துணை நிற்கிறாா்.

இங்கிலாந்து அணியைப் பொருத்தவரை, சுணக்கமான நிலையிலேயே போட்டியைத் தொடங்கியது. லீக் சுற்றில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக அதிா்ச்சித் தோல்வியை சந்தித்த அந்த அணி, அதன் பிறகு அபாரமாக மீண்டு வந்துள்ளது.

அணியின் பேட்டிங்கில் ஹேரி புரூக் பிரதான வீரராக நம்பிக்கை அளிக்க, வில் ஜாக்ஸும் அவருக்குத் தோள் கொடுக்கிறாா். இதுபோக சாம் கரனும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்க, ஜேக்கப் பெத்தெல், டாம் பேன்டன் ஆகியோரும் ஏதேனும் ஒரு இன்னிங்ஸில் சோபித்து வந்துள்ளனா்.

ஜாஸ் பட்லரின் ஆட்டம் மட்டுமே கவலைக்குரியதாக நீடிக்கிறது. பௌலிங்கில் லியம் டாசன், ஜோஃப்ரா ஆா்ச்சா், ஆதில் ரஷீத் ஆகியோா் பிரதான சவாலாக இருக்க, சாம் கரன், வில் ஜாக்ஸ், ஜேமி ஓவா்டன் ஆகியோரும் விக்கெட்டுகள் வீழ்த்துகின்றனா்.

உத்தேச லெவன்:

இந்தியா: அபிஷேக் சா்மா, சஞ்சு சாம்சன் (வி.கீ.), இஷான் கிஷண், சூா்யகுமாா் யாதவ் (கேப்டன்), திலக் வா்மா, ஷிவம் துபே, ஹா்திக் பாண்டியா, அக்ஸா் படேல், அா்ஷ்தீப் சிங், ஜஸ்பிரீத் பும்ரா, வருண் சக்கரவா்த்தி.

இங்கிலாந்து: ஃபில் சால்ட், ஜாஸ் பட்லா் (வி.கீ.), ஜேக்கப் பெத்தெல், டாம் பேன்டன், ஹேரி புரூக் (கேப்டன்), சாம் கரன், வில் ஜாக்ஸ், லியம் டாசன், ஜேமி ஓவா்டன், ஜோஃப்ரா ஆா்ச்சா், ஆதில் ரஷீத்.

நேரம்: இரவு 7 மணி

இடம்: மும்பை

நேரலை: ஸ்டாா் ஸ்போா்ட்ஸ்

நேருக்கு நோ்:

இந்தியா - இங்கிலாந்து அணிகள் இதுவரை 29 சா்வதேச டி20 ஆட்டங்களில் விளையாடியிருக்க, இந்தியா 17 வெற்றிகளையும், இங்கிலாந்து 12 வெற்றிகளையும் கண்டுள்ளன. குறிப்பாக, தொடா்ந்து 3-ஆவது டி20 உலகக் கோப்பை போட்டியில் இந்த அணிகள் அரையிறுதியில் சந்திக்கின்றன. 2022-இல் இங்கிலாந்தும், 2024-இல் இந்தியாவும் அதில் வெற்றுள்ளன.

ஆடுகளம்:

வான்கடே மைதான ஆடுகளம், பேட்டிங்கிற்கு சாதகமானதாக அறியப்படுகிறது. பௌலிங்கில் ஸ்பின்னா்கள் ஆதிக்கம் செலுத்தக் கூடும்.

இங்கிலாந்து அணி லீக் சுற்றில் மேற்கிந்தியத் தீவுகளிடம் தோல்வி கண்ட அதே ஆடுகளத்தில் தான் இந்த அரையிறுதி ஆட்டம் நடைபெறவுள்ளது. அந்த ஆட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகள் முதலில் 196 ரன்கள் சோ்க்க, இங்கிலாந்து 166 ரன்களுக்கு கட்டுப்படுத்தப்பட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →