32 வயதில் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த தமிழ்நாடு கேப்டன் பாபா அபரஜித்!
தமிழ்நாடு அணியின் முன்னாள் கேப்டன் பாபா அபரஜித் ஓய்வை அறிவித்துள்ளது குறித்து...

தமிழ்நாடு அணியின் முன்னாள் கேப்டன் பாபா அபரஜித் (32 வயது) தொழில்முறை கிரிக்கெட்டில் இருந்து தனது ஓய்வை அறிவித்துள்ளார்.
இந்தியாவிற்காக விளையாட வேண்டும் என்ற கனவு நனவாகாத நிலையில், யு19 உலகக் கோப்பை, இந்தியா ஏ அணிகளில் விளையாடி அசத்தியுள்ளார்.
சென்னையைச் சேர்ந்த பாபா அபரஜித் தனது 15 ஆண்டுகால தொழில்முறை கிரிக்கெட்டில் இருந்து வீரராக தனது ஓய்வை அறிவித்துள்ளார்.
Advertisement
Advertisement
102 முதல்தர கிரிக்கெட்டில் விளையாடியுள்ள இவர் 5,199 ரன்கள், மற்றும் 75 விக்கெட்டுகளும், 114 லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் 4,278 ரன்கள் மற்றும் 83 விக்கெட்டுகளும் எடுத்துள்ளார்.
கடந்த 2024-25 சீசனில் தமிழ்நாடு அணியில் இருந்து கேரள அணிக்கு மாறினார். தற்போது வர்ணனையில் ஈடுபட்டு வரும் இவர் பயிற்சியாளராகவும் முனைப்பு காட்டி வருகிறார்.
மொத்தமாக 20 சதங்களை அடித்துள்ள பாபா அபரஜித் விஜய் ஹசாரேவில் 2017-18, சையத் முஷ்டக் அலி தொடரில் 2020-21, 2021-22 தொடர்களில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணியில் இருந்துள்ளார்.
முதல்முறையாக 2012ல் நடைபெற்ற யு19 உலகக் கோப்பையில் 171 ரன்கள், 5 விக்கெட்டுகள் எடுத்து கவனம் பெற்றார். பாகிஸ்தானுக்கு எதிரான காலிறுதி, நியூசிலாந்துக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தில் ஆட்ட நாயகன் விருது வென்று அசத்தினார்.
சிறப்பாக விளையாடியதால் 2015ல் இந்தியா ஏ அணியில் வாய்ப்பு கிடைத்தது. இருப்பினும் அவரால் இந்திய சீனியர் அணியில் இடம்பெறாமல் சென்றது.
ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே, ஆர்பிஎஸ் அணிகளில் இருந்துள்ளார். ஆனால், போதுமான வாய்ப்புகள் இல்லாமல் அதில் தாக்கத்தை ஏற்படுத்தாமல் சென்றார்.
தற்போது அபரஜித் பயிற்சியாளராக இருந்து வருகிறார். இளம் தமிழக வீரர்களான விமல் குமார், பிரதோஷ் ரஞ்சன் பாலுக்கு தனியாக பயிற்சி அளித்து வருகிறார்.
பிசிசிஐ லெவல் -2 பயிற்சியாளருக்கான சான்றிதழையும் பெற்றுள்ள அபரஜித் டிஎன்பில் தொடரில் சேப்பாக்கம் சூப்பர் கில்லீஸ் அணிக்கு உதவி பயிற்சியாளராக இருக்கிறார்.