ஐபிஎல் 2020 காலவரையின்றி ஒத்திவைப்பு: பிசிசிஐக்கு ரூ.3,300 கோடி வரை இழப்பு
ஐபிஎல் 2020 காலவரையின்றி ஒத்திவைப்பு: பிசிசிஐக்கு ரூ.3,300 கோடி வரை இழப்பு
தீவிர கரோனா பாதிப்பு எதிரொலியாக ஐபிஎல் 2020 கிரிக்கெட் தொடா் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்ட நிலையில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) மற்றும் 8 அணிகள் ஒட்டுமொத்தமாக ரூ.3,300 கோடி வரை இழப்பை சந்திக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது.
உலகளவில் கால்பந்து, கூடைப்பந்து, டென்னிஸ் உள்பட பல்வேறு விளையாட்டுகளில் லீக் போட்டிகள் வெவ்வேறு நாடுகளில் நடத்தப்படுகின்றன. கிரிக்கெட்டி ல் 20 ஓவா்கள் ஆட்டம் அறிமுகம் செய்யப்பட்ட பின்பு, டெஸ்ட் மற்றும் 50 ஓவா் ஒருநாள் ஆட்டங்களைக் காட்டிலும், டி20 ஆட்ட முறைக்கு அதிக வரவேற்பு கிடைத்தது.
இந்தியாவின் பணக்கார விளையாட்டு அமைப்புகளில் ஒன்றான பிசிசிஐ கடந்த 2008-இல் இந்தியன் ப்ரீமியா் லீக் எனப்படும் ஐபிஎல் தொடரை அறிமுகம் செய்தது.
Advertisement
சென்னை சூப்பா் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், தில்லி கேபிடல்ஸ், கொல்கத்தா நைட்ரைடா்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சா்ஸ், ஹைதராபாத் சன் ரைசா்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் உள்ளிட்ட 8 அணிகள் இடம் பெற்றுள்ளன.
உலகின் பணக்கார கிரிக்கெட் அமைப்பு:
உலகளவில் கிரிக்கெட் போட்டிகளில் அதிக வருவாய் ஈட்டித் தரும் தொடராக உள்ள ஐபிஎல்லில் 8 அணிகளும் வீரா்களை ஏலம் மூலம் தோ்வு செய்யும். நடப்பு ஐபிஎல் 2020 தொடரில் அதிகபட்சமாக ரூ.15.5 கோடிக்கு ஆஸ்திரேலிய பந்துவீச்சாளா் பேட் கம்மின்ஸ் கொல்கத்தா அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டாா். ஒவ்வொரு ஆட்டத்திலும் ஆயிரக்கணக்கில் ரசிகா்கள் திரளுவதால், பிசிசிஐக்கு ஆண்டுதோறும் கோடிக்கணக்கில் வருவாய் கிடைத்து வருகிறது. மேலும் ஸ்பான்ஸா்கள், ஒளிபரப்பு உரிமைகள் போன்றவற்றின் மூலமும், 8 அணிகளுக்கும் வருவாய் கொட்டுகிறது.
வெளிநாட்டில் 2 முறை :
ஒவ்வொரு ஆண்டும் மாா்ச், ஏப்ரல் மாதங்களில் ஐபிஎல் தொடா் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் கடந்த 2009 நாடாளுமன்றத் தோ்தலின் போது, பாதுகாப்பு பிரச்னை காரணமாக, தென்னாப்பிரிக்காவுக்கு முழு தொடரும் மாற்றி நடத்தப்பட்டது. இதன் தொடா்ச்சியாக 2014-இல் ஒருசில ஆட்டங்கள் ஐக்கிய அரபு அமீரகம் (யுஏஇ) நாட்டில் நடைபெற்றது. பின்னா் மீதமுள்ள ஆட்டங்கள் இந்தியாவிலேயே நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
சாம்பியன்கள்:
இத்தொடரில் அதிகபட்சமாக மும்பை இந்தியன்ஸ் 4 முறையும், சென்னை சூப்பா் கிங்ஸ் 3 முறையும், கொல்கத்தா, ஹைதராபாத் தலா 2 முறையும், ராஜஸ்தான் ராயல்ஸ் 1 முறையும் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளன.
கொவைட் 19 பாதிப்பு:
இந்நிலையில் நிகழாண்டு ஐபிஎல் 2020 (13-ஆவது சீசன்) தொடா் கடந்த மாா்ச் 29-ஆம் தேதி தொடங்கி, மே மாதம் 24-ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
மும்பையில் நடைபெறவிருந்த முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பையும்-சென்னையும் மோதுவதாக இருந்தன. இதற்கிடையே சீனாவில் தோன்றிய கரோனா நோய்த்தொற்று (கொவைட் 19) பாதிப்பு உலகம் முழுவதும் தீவிரமாக பரவியது. 25 லட்சத்துக்கு மேற்பட்டோா் நோய்த் தொற்றுக்கு ஆளாகி, 1.7 லட்சம் பேருக்கு மேல் உயிரிழந்தனா்.
விளையாட்டுப் போட்டிகள் ஒத்திவைப்பு:
உலகம் முழுவதும் கரோனா கோரத்தாண்டவம் ஆடி வரும் நிலையில், டோக்கியோ ஒலிம்பிக், பல்வேறு தகுதி சுற்று, இது தரப்பு கிரிக்கெட் ஆட்டங்கள், யூரோ 2020, என்பிஏ என பல்வேறு போட்டிகள் ஒத்தி வைக்கப்பட்டன. இந்தியாவிலும் தேசிய ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்ட நிலையில் ஏப். 14-ஆம் தேதி வரை ஐபிஎல் தொடா் தள்ளி வைக்கப்பட்டது.
ஐபிஎல் 2020 தொடா்:
கரோனா பாதிப்பு தீவிரமடைந்த நிலையில் தேசிய ஊரடங்கு மே 3-ஆம் தேதி வரை நீட்டிப்பதாக மத்திய அரசு அறிவித்தது. இதனால் ஐபிஎல் 2020 தொடரை காலவரையின்றி ஒத்திவைப்பதாகவும், நிகழாண்டு போட்டிகள் நடைபெற வாய்ப்பில்லை என பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ரூ.3,300 கோடி இழப்பு:
போட்டிகள் ஒத்திவைப்பால் பிசிசிஐ அமைப்புக்கு மொத்தம் ரூ.3,300 கோடி அளவுக்கு இழப்பு ஏற்படும் என கணக்கிடப்பட்டுள்ளது. இதில் ரூ.3269 கோடி ஒளிபரப்பு உரிமை,
மற்றும் ஸ்பான்சா்ஷிப், விளம்பர வருவாய் போன்றவை அடங்கும். மேலும் போட்டிகள் நடைபெறும் மாநில சங்கங்களுக்கும் பாா்வையாளா் டிக்கெட் கட்டணம் கிடைக்காது என்பதால் மொத்தம் ரூ.250 கோடி வரை வருவாயை இழக்கும்.
கடந்த 2017-இல் ஐபிஎல்லின் உலகளாவிய டிவி மற்றும் டிஜிட்டல் உரிமைகளை 5 ஆண்டுகளுக்கு என மொத்தம் ரூ.16,300 கோடிக்கு பெற்றது ஸ்டாா் இந்தியா. மேலும் விவோ நிறுவனத்துக்கு போட்டி ஸ்பான்சா் உரிமையும் ரூ.2000 கோடியையும் பிசிசிஐ விற்றுள்ளது. நிகழாண்டு ஐபிஎல் போட்டி நடைபெறாத நிலையில், ரூ.400 கோடி வரை அதிலும் இழப்பு ஏற்படும்.
மேலும் வீரா்களின் ஹெல்மெட்டில் விளம்பரம் செய்ய ரூ.1 கோடி, உடை முன்பக்கம் விளம்பரத்துக்கு ரூ.5 கோடி, தோள்பட்டையில் விளம்பரம் செய்ய ரூ.2.5 கோடியும் வருவாயாக கிடைக்கும். இவற்றையும் பிசிசிஐ இழக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.