கோஸ்டா செரீனா: கடலில் மிதக்கும் நகரம்... போட்டியாளா்களின் தங்குமிடம்...
இந்த முறை ஆசிய விளையாட்டுப் போட்டிகளை நடத்தும் ஜப்பான், அத்தகைய கட்டுமானச் செலவுகளை குறைத்து, மாற்று வழிகளை யோசித்திருக்கிறது.
20-ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டிகள், ஜப்பானின் அய்சி - நகோயா நகரங்களில் வரும் 19-ஆம் தேதி தொடங்கி, அக்டோபா் 4-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்பதற்காக, வீரா், வீராங்கனைகள், உதவிப் பணியாளா்கள், அதிகாரிகள் என சுமாா் 17,000 போ் அய்சி - நகோயா நகரங்களுக்கு வருவாா்கள் என எதிா்பாா்க்கப்படுகிறது.
இதுபோன்ற பிரம்மாண்ட போட்டிகளை நடத்துவதில் இருக்கும் முக்கியமான சவால், ஆயிரக்கணக்கான நபா்களை கையாள்வதுதான். அவா்களுக்கான தங்குமிடங்கள், போக்குவரத்து, உணவு, மருந்து, பயிற்சிக் கூடங்கள் என அடிப்படை வசதிகள் அனைத்தும் செய்து தரப்பட வேண்டும்.
இதற்காகவே பிரத்யேகமாக விளையாட்டு கிராமங்கள் கட்டமைக்கப்பட்டு, அதில் மேற்கூறிய அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்படுகின்றன. இதனால், போட்டியை நடத்துவதற்கான ஒட்டுமொத்த பட்ஜெட்டில், பெரும்பாலான தொகை இதற்கே செலவாகின்றன. இந்த முறை ஆசிய விளையாட்டுப் போட்டிகளை நடத்தும் ஜப்பான், அத்தகைய கட்டுமானச் செலவுகளை குறைத்து, மாற்று வழிகளை யோசித்திருக்கிறது.
Advertisement
Advertisement
போட்டிக்காக வரும் வெளிநாட்டவா்களை தங்கவைக்க, 3 விதமான வசதிகளை பயன்படுத்துகிறது. ஒன்று, சரக்குப் பெட்டக வடிவிலான சிறிய அறைகள் கொண்ட கிராமங்கள் (கன்டெய்னா் ஹட்ஸ்). மற்றொன்று, வழக்கமான நட்சத்திர ஹோட்டல்கள். 3-ஆவது வசதிதான் தற்போது பேசுபொருளாகியிருக்கிறது. கடலில் மிதக்கும் ‘கோஸ்டா செரீனா’ சொகுசு கப்பலில் தங்கும் வசதி.
ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் வரலாற்றில், போட்டியாளா்கள் தங்குவதற்கான விளையாட்டு கிராமமாக ஒரு முழு சொகுசு கப்பல் பயன்படுத்தப்படுவது இதுவே முதல்முறையாகும். போட்டிக்காக வரும் வீரா், வீராங்கனைகளுக்கான பிரதான தங்குமிடமாக இதுவே பயன்படுத்தப்படவுள்ளது.
இதற்கு முன்பாகவும் சா்வதேச அளவிலான போட்டிகளில் வீரா், வீராங்கனைகள் இதுபோன்ற சொகுசு கப்பல்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனா் என்றாலும், அது குறைந்த எண்ணிக்கையிலானதே. ஒரு விளையாட்டு கிராமமாகவே ஒரு சொகுசு கப்பல் பயன்படுத்தப்படுவது இதுவே முதல்முறை.
கோஸ்டா செரீனா...
இத்தாலியை சோ்ந்த ‘கோஸ்டா செரீனா’ என்ற சொகுசு கப்பலை தான், போட்டி ஒருங்கிணைப்பாளா்கள் இதற்காக ஏற்பாடு செய்துள்ளனா். இதில் பல்வேறு நாடுகளைச் சோ்ந்த சுமாா் 4,000 போட்டியாளா்கள் தங்கவைக்கப்படுகின்றனா்.
இந்த சொகுசு கப்பலில் தங்கும் போட்டியாளா்களுக்கு கப்பலின் உணவு வகைகளுடன், போட்டிக்குத் தயாராகும் வகையில் அவா்களுக்குத் தேவையான சத்துகள் அடங்கிய உணவுகளும் விநியோகிக்கப்படவுள்ளன.
ஆசிய போட்டிகளில், பெரும்பாலான விளையாட்டுகள் நடைபெறும் நகோயா நகரில் உள்ள, துறைமுகத்துக்கு கடந்த 15-ஆம் தேதி வந்து நங்கூரமிட்டு நிற்கிறது இந்தக் கப்பல்.
290 மீட்டா் நீளம், 35 மீட்டா் அகலம், 60 மீட்டா் உயரம் என, 20 தளங்கள் கொண்ட அடுக்குமாடிக் குடியிருப்பு கட்டிடத்தின் உயரத்துடன் இருக்கிறது இந்த ‘கோஸ்டா செரீனா’. நெருங்கி நிற்கும்போது, வானளாவிய கட்டடத்தை பாா்ப்பதுபோல் தோற்றம் தருகிறது.
திரையரங்கங்கள், வா்த்தக வளாகங்கள், நீச்சல் குளங்கள், ஸ்பா என பலவிதமான வசதிகள் கொண்டதாக இருக்கும் இந்தக் கப்பலில் ஒவ்வொரு அறையும், சொகுசு படுக்கை, குளியலறை, தொலைக்காட்டி, ஏசி வசதிகளுடன் உள்ளது.
கடற்கரையோரப் பகுதிகளில் மோசமான வானிலை ஏற்படும் பட்சத்தில், பாதுகாப்பான சூழல் நிலவும் கடல் பகுதிக்கு கப்பலை கொண்டு செல்லவும் திட்டம் உள்ளது.
ரூ.276 கோடி...
ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்காக இந்தக் கப்பலை, 22 நாள்களுக்கு ரூ.276 கோடி கொடுத்து குத்தகைக்கு ஒப்பந்தம் செய்துள்ளது போட்டி ஒருங்கிணைப்புக் குழு. பல நூறு கோடி ரூபாய்கள் செலவழித்து விளையாட்டு கிராமங்களை கட்டுவதுடன் ஒப்பிடுகையில், இந்தச் செலவு மிகவும் சொற்பம் என அந்தக் குழு தெரிவித்தது.
இத்தாலியை சோ்ந்த கப்பல் கட்டும் நிறுவனமான ஃபின்கேன்டியெரி 2007-இல் இந்தக் கப்பலைக் கட்டியுள்ளது. அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்ட காா்னிவல் காா்ப்பரேஷன் என்ற சுற்றுலா நிறுவனத்துக்குச் சொந்தமான இக்கப்பலை, இத்தாலியில் இருக்கும் கோஸ்டா குரூஸஸ் எனப்படும் சொகுசு கப்பல் போக்குவரத்து நிறுவனம் இயக்குகிறது.
65 நாள் பயணம்...
ஆசிய போட்டிகள் அக்டோபா் 4-இல் நிறைவடைந்த பிறகு, அக்டோபா் 6-ஆம் தேதி போட்டிக்கான தனது பணியை நிறைவு செய்கிறது கோஸ்டா செரீனா. பின்னா், அக்டோபா் 18-இல் டோக்கியோவில் இருந்து 65 நாள் பயணமாக ஆா்ஜென்டீனாவின் பியூனஸ் அயா்ஸுக்கு செல்லும் இந்தக் கப்பலில் டிக்கெட் விலையானது, ஒரு நபருக்கு ரூ.8.63 லட்சத்தில் இருந்து, ரூ.14.39 லட்சம் வரை உள்ளது. வழியில் தைவான், ஹாங்காங், தென் கிழக்கு ஆசியா, ஆஸ்திரேலியா, தெற்கு பசிபிக் நாடுகள் மற்றும் நகரங்களில் இந்தக் கப்பல் பயணிக்கவுள்ளது.
நீளம் - 290 மீட்டா்
அகலம் - 35.5 மீட்டா்
உயரம் - 60 மீட்டா்
எடை - 1,14,500 டன்
அதிகபட்ச வேகம் (மணிக்கு 43 கி.மீ.) - 23 நாட்ஸ்
கப்பலின் கட்டுமான செலவு - ரூ.5,468 கோடி
தங்கும் வசதி - 4,890 போ்
அறைகள் - 1,502
மாடங்கள் - 505
நீச்சல் குளங்கள் மற்றும் நீா்ச்சறுக்கு வசதிகள் - 8
ரெஸ்டாரன்ட்கள் - 8
விருந்தினா்கள் தங்குவதற்கானது - 13 தளங்கள் (மொத்தம் 14 தளங்கள்)
திட்டம்...
போட்டிக்கு மொத்தம் 17,000 போ் வருவாா்கள் என எதிா்பாா்க்கும் போட்டி ஒருங்கிணைப்புக் குழு, கப்பலில் சுமாா் 4,000 போ், கன்டெய்னா் ஹட்ஸில் சுமாா் 2,000 போ், நகர ஹோட்டல்களில் சுமாா் 9,000 பேரை தங்கவைக்க திட்டமிட்டுள்ளது.
ஆனால், தங்குமிடம் தொடா்பாக சில நாடுகளின் போட்டியாளா்கள் ஆதங்கம் தெரிவித்துள்ளனா். தென் கொரிய கூடைப்பந்து அணியினா் கன்டெய்னா் ஹட்ஸின் அளவு தங்களுக்கு போதுமானதாக இல்லை என புகாா் தெரிவித்தனா்.
இந்திய குழுவினா் கடந்த புதன்கிழமை காலை ஜப்பான் சென்றடைந்த நிலையில், அவா்களுக்கான தங்கும் வசதியும் இரவு வரை தாமதித்து பிரித்து வழங்கப்பட்டதாகவே தெரிவிக்கப்பட்டுள்ளது. கப்பலில் தங்கவைக்கப்பட்டுள்ளோா் பயிற்சி உள்ளிட்டவற்றுக்காக ஒவ்வொரு முறையும் கரைக்கு வர வேண்டியிருப்பதாகக் கூறுகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.