தனது மாநில மக்களை மறைமுகமாகத் தூண்டிவிடும் கர்நாடகா முதல்வர் பதவி விலக வேண்டும்: இரா. முத்தரசன்.
காவிரி நதிநீர் பங்கீடு பிரச்சினையில் தனது மாநில மக்களை மறை முகமாகத் தூண்டிவிடும் கர்நாடகா முதல்வர் சீத்தாராமையா பதவி விலக வேண்டும் என்றார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலர் இரா. முத்தரசன்.
புதுக்கோட்டை: காவிரி நதிநீர் பங்கீடு பிரச்சினையில் தனது மாநில மக்களை மறை முகமாகத் தூண்டிவிடும் கர்நாடகா முதல்வர் சீத்தாராமையா பதவி விலக வேண்டும் என்றார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலர் இரா. முத்தரசன்.
புதுக்கோட்டையில் செவ்வாய்க்கிழமை நடந்த கூட்டத்தில் செய்தியாளர்களிடம் மேலும் கூறியது:
காவிரிப் பிரச்சினையில் கர்நாடகாவுக்கும் தமிழகத்துக்கு இடையே பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. கர்நாடகாவில் 100 -க்கும் மேல்பட்ட வாகனங்கள் எரியூட்டப்பட்டுள்ளன. தமிழர்களின் கடைகளும் சூறையாடப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் விரும்பத்தகாத சம்பவங்கள் நடந்துள்ளன. நிலைமை இந்த அளவுக்கு முற்றிப்போனதற்கு மத்திய அரசு தான் குற்றவாளி என பகிரங்கமாகக் குற்றம்சாட்டுகிறோம். வன்முறையால் எதையும் சாதிக்க முடியாது.
மத்திய அரசின் ஓர வஞ்சனை:
கேரளா, ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்கள் தமிழகத்துக்கு நீரைப் பங்கிட்டு தருவதற்கு எதிராக ஓரணியில் உள்ளன. காவிரி நடுவர் மன்றம் அமைக்க வேண்டுமென எங்கள் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர் காத்தமுத்து நாடாளுமன்றத்தில் எழுப்பினார். அதைத்தொடர்ந்து வி.பி.சிங் காலத்தில்தான் நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது. 2007 -ல் காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு வெளியானது. இதை அரசிதழில் 2013 -ல் வெளியிடப்பட்டது. இதில், காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தல், காவிரி ஒழுங்காற்று வாரியம் அமைத்தல் போன்ற விஷயங்கள் உள்ளன. ஆனால், மத்தியில் ஆண்ட காங்கிரஸ் அரசும், அதைத்தொடர்ந்து தற்போது ஆண்டுவரும் பாஜக அரசும் அவற்றைக் கண்டுகொள்ளவில்லை.மொத்தத்தில் இப்பிரச்சினைகளை நேர்மையாகவும், சுமூகமான முறையிலும் தீர்க்க முடியாமல் போனதற்கு மத்திய அரசின் ஓரவஞ்சனையும், பாராமுகமும்தான் முக்கியக் காரணம். .
உச்சநீதிமன்றத்தை அவமதிக்கும் கர்நாடகா அரசு:
தற்போது உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை மதிக்காத கர்நாடகா அரசு அனைத்துக்கட்சிக் கூட்டத்தை கூட்டி அணைகளில் தண்ணீர் இல்லை என அறிவித்தது. எதிர்த்து அரசு சார்பில் முழு அடைப்பு நடத்தக்கூடாது என்ற உச்சநீதிமன்றத்தின் உத்தரவை மதிக்காமல் கர்நாடகா அரசு முழு அடைப்புக்கு ஆதரவளித்துள்ளது. கர்நாடகா பற்றி எரிவதற்கு இரு முக்கியக் கட்சிகள் தான் காரணம். வரும் தேர்தலை மனதில் வைத்தே திட்டமிட்டு கலவரத்தைத் தூண்டுகின்றன
மத்திய உள்துறை என்ன செய்கிறது:
கேரளாவில் பாஜக பிரமுகர் வீட்டில் தாக்குதல் நடத்தப்பட்டதற்கு அம்மாநில முதல்வரிடம் விளக்கம் கேட்டகத்தெரிந்த உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கு கர்நாடாகவில் நடக்கும் கலவரங்கள் குறித்தும், அங்கு தமிழர்கள் தாக்கப்படுவது குறித்தும் அம்மாநில முதல்வரிடம் கேட்டகவில்லை. கர்நாடக முதல்வரின் பொறுப்பற்ற தன்மையாலும், மறைமுகமான தூண்டுதலாலுமே அங்கு கலவரம் ஓயவில்லை. அங்குள்ள தமிழர்களைப் பாதுகாக்க ராணுவத்தை அனுப்ப வேண்டும். முதல்வர் சீத்தாராமையா பதவி விலக வேண்டும். முகநூலில் கருத்தைப்பதிவிட்ட தமிழக இளைஞரை கன்னட வெறியர்கள் தாக்கியது கண்டிக்கத்தக்கது.
முதல்வரின் நடவடிக்கை திருப்தியளிக்கிறது:
காவிரி பிரச்சினையில் தமிழக முதல்வர் எடுத்துவரும் சட்டரீதியான நடவடிக்கைகளை வரவேற்கிறோம். ஆனால், இப்பிரச்சினையில் தன்னிச்சையாகச் செயல்பட்டு சாதனை செய்து விடலாம் என நினைத்துக் கொண்டு, அனைத்துக்கட்சிகளையும் ஒருங்கிணைத்துச் செல்லாதது வருத்தமளிக்கிறது. சிறையில் பேரறிவாளன் தாக்கப்பட்டது கண்டனத்துக்குரியது. 10 ஆண்டுகளுக்கு மேலாக சிறையிலுள்ள விசாரணைக்கைதிகள், தண்டனைக் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என்பதே எங்கள் நிலைப்பாடு என்றார். இதில் மாநில ஏஐடியுசி பொதுச்செயலர் டி.எம். மூர்த்தி, மாவட்டச்செயலர் த. செங்கோடன், நிர்வாகிகள் கே.ஆர். தர்மராஜன், வீ. சிங்கமுத்து, அழ, ராசு, எம்.என். ராமச்சந்திரன் உள்பட பலர் உடனிருந்தனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.